துறவிக்குத் துப்பாக்கி தேவை இல்லை! (Post.14,125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,125

Date uploaded in Sydney, Australia – –22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12-1-25 அன்று கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரிக்கப்பட்டது.

ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தி ஜனவரி 12

துறவிக்குத் துப்பாக்கி தேவை இல்லை!

ஸ்வாமி விவேகானந்தரும் இரண்டு  மன்னர்களும்!

ச. நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் அவரை சந்தித்து அதிசயமான அனுபங்களைப் பெற்றவர்களுள் மன்னர்கள் முதல் சாமானியர் வரை அனைவரும் அடங்குவர்.

இங்கு அவரைச் சந்தித்த இரண்டு மன்னர்களை மட்டும் காண்போம்.

கேத்ரிமன்னருடன் சந்திப்பு

1891 ஜூன் மாதம் 4ம் தேதி

ஸ்வாமி விவேகானந்தரை முதன் முதலாகச் சந்தித்த கேத்ரி மன்னர் அவரால் மிகவும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார்.

‘என் தலைநகருக்கு வந்து என்னுடன் வசிக்க வேண்டும்’ என்ற மன்னரின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் கேத்ரியை அடைந்தார் ஸ்வாமிஜி.

வேதாந்த பேச்சுக்கள், பஜனை, பாடல்கள், என நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அரண்மனையில் நடனமாது ஒருவரின் நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதில் கலந்து கொள்ள மன்னர் ஸ்வாமிஜியை அழைத்தார். ஒரு துறவி இதில் கலந்து கொள்வது அழகல்ல என்றார் ஸ்வாமிஜி.

இதனைக் கேள்விப்பட்ட நடனமாது ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார். “பிரபுவே எனது குறைகளை உனது மனதில் கொள்ளாதே! சமமாக பாவிப்பதே உனது பண்பு அல்லவா?” என்று தொடங்கியது பாடல். அடுத்த அறையிலிருந்து இதைக் கேட்டு மனம் உருகிய ஸ்வாமிஜி ஒரு நடனமாது என்று அவரைப் பார்க்காமல் இருப்பது சரியல்லவே என்று சிந்தித்தார். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் இந்த சமபாவனையைக் கடைப்பிடித்தார். அவரிடம் பல பிரபல நடிகைகள் வந்து ஆசி பெற்று வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தனர்.

இன்னொரு நிகழ்ச்சி.

ஸ்வாமிஜியும் மன்னரும் அடிக்கடி குதிரை சவாரி செய்து அருகில் உள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு முறை அப்படிச் செல்லும் போது அனைவர் கையிலும் துப்பாக்கி இருக்க ஸ்வாமிஜியிடம் மட்டும் ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் அனைவரும் ஒரு மரத்தடியில் தங்கினர். அப்போது ஒரு புலி ஸ்வாமிஜி அமர்ந்திருந்த மரத்தின் அருகே சென்றது. மன்னரும் மற்றவர்களும் ஓடோடி வந்து அவரிடம் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். உடனே ஸ்வாமிஜி, “பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை ஒன்றும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக்கூடாது” என்று கூறி துப்பாக்கி வாங்குவதை மறுத்து விட்டார்.

மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் சந்திப்பு

ஸ்வாமிஜியின் அபார அறிவாற்றலால் கவரப்பட்டவர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி! அவரை சர்வமத சபையில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார் அவர்.

சிகாகோவில் மாபெரும் உரை நிகழ்த்தி அமெரிக்காவையே கவர்ந்து பின்னர் இந்தியா வரும் போது முதலில் அவருக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தவர் பாஸ்கர சேதுபதியே.

1897 ஜனவரி 15ம் நாள் கொழும்பு வந்த ஸ்வாமிஜி இலங்கையில்  சில நாட்கள் தங்கினார்.  ஜனவரி 26ம் நாள் அவரை பாம்பனில் வரவேற்க அலங்காரப் படகு ஒன்றில் மன்னர் பாஸ்கர சேதுபதி வந்தார். அந்தப் படகில் ஏறிய ஸ்வாமிஜியை சேதுபதி சந்தித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. ஸ்வாமிஜியின் செருப்புகளை அவர் பாதத்தில் அணிவித்தபடியே சேதுபதி, “விலை மதிக்க முடியாத வைரத்தை என் தலையில் சூடுவதை விட இதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று பக்திப் பரவசத்துடன் கூறினார்.

ஸ்வாமிஜியை ஊர்வலமாக ரதத்தில் அமர்த்தி தன் பரிவாரங்களுடனும் பக்தர்களுடனும் சென்ற சேதுபதி மன்னர் சிறிது தூரம் சென்ற பின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே ரதத்தை இழுத்துச் செல்லலானார்.

பின்னர் இன்னொரு நாள் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார் ஸ்வாமிஜி. அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு ராஜரிஷி என்ற பட்டத்தைச் சூட்டினார் அவர். மன்னராக இருக்கும் போதே முனிவராகவும் திகழ்கின்றார் என்ற அந்தப் பெருமையைப் பெற்றவரானார் சேதுபதி!

இப்படி காஷ்மீர் மன்னர், கட்ச் மன்னர், ஆள்வார் மன்னர் உள்ளிட்ட மன்னர்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டு அடைந்த அனுபவங்கள் பல.

***

Leave a comment

Leave a comment