நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு-15 (Post No.14,127)

Written by London Swaminathan

Post No. 14,127

Date uploaded in Sydney, Australia – 22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 15

நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் —மனு, வள்ளுவர், மாணிக்கவாசகர் திருமூலர், ராமலிங்க சுவாமிகள் — கடும் தாக்கு

நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் மனு, வள்ளுவர், மாணிக்கவாசகர் திருமூலர், ராமலிங்க சுவாமிகள் கடும் தாக்கு

வள்ளலார் சொன்னது என்ன ?

பிண்ணாக்கு! நாத்திகர் மீது வள்ளலார் கடும் தாக்கு !

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”.– வள்ளலார் பாடல்

இதுவரை கண்ணில் படாத ஒரு அற்புதப் பாடல் கண்ணில் பட்டது.. இதோ அந்தப்பாடல்!

முதல் பத்தியில் கண்புருவப்பூட்டு  என்பது நெற்றிக்கண் எனப்படும் ஞானக் கண் திறப்பது பற்றி என்று அறிஞர்கள் கூறுவார்கள்

அதற்கு அடுத்த பத்தியில் மேருமலைக் காட்சிகளை வருணிக்கிறார். அது யோகம் பற்றியது.

அதைத் தொடர்ந்து இரண்டு பத்திகளில் என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.என்ற வரிகள் வள்ளலார் அடைந்த ஞானத்தைக் காட்டுகிறது

அடுத்த பத்தியில் அருட்கடலில் ஓடம் ஏறி கரைசேர்ந்து தீப ஒளி கண்ட சந்தோஷத்தைக் காட்டுகிறார்.

ஆனால் நான் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புவது கடைசி பத்திதான்

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

நாத்திகம் பேசுவோரின் பேச்சு, முடை நாற்றம் வீசும் என்று தாக்குகிறார். அவர்கள் ருசிப்பது  பிண்ணாக்கு என்றும் சாடுகிறார்  இதற்கு நேர் மாறானது தெய்வீகப் பெரியோரின் திருவாக்கு என்றும் பாடுகிறார்.

இதோ முழுப் பாட்டு

கண்புருவப் பூட்டு

கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு

கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு

ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு

ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு

எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்

தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி

மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி

சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி

செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.

துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு

தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு

தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு

செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.

சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது

தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது

எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது

இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு

இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு

மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு

வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு

மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.

அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்

வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

(Source: http://www.thiruarutpa.org/thirumurai/v/T356/tm/kanpuruvap_puuttu)

வள்ளல் பெருமனார் ; தாம் பெற்ற இறை அனுபவத்தின் இரகசியத்தை வெளிப்படையாகக் கூறும் பாடல் இது..

 11 பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் தலைப்பே ” கண்புருவப் பூட்டு” ஆகும்

இது திருஅருட்பா ஆறாம் திருமுறையில் 121-ஆம் பதிகமாகும்.

 *****

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி!

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்—மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்..

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

மாணிக்கவாசகரோ ‘நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

XXX

நாஸ்தீகர்களுக்கு திருமூலர் பயங்கர எச்சரிக்கை: 

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல கிழித்தெறி யப்படுவர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் அழிந்தார்கள். அது போல, கடவுளை சிறிதளவு எள்ளி  நகையாடினாலும் அழிவு நிச்சயம் .

கோவிலை அழித்தாலோ , பூஜைகளை நிறுத்தினாலோ நாட்டுக்கும் தலைவனுக்கும் அழிவுதான் மிஞ்சும்— திருமூலர்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்அம ராபதி நாடி

எளியனென்று ஈசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.- திருமந்திரம்

*****

அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. -திருமந்திரம்

*****

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை

முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்

வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. -திருமந்திரம்

******

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.– திருமந்திரம்

*****

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.- திருமந்திரம்

****

HE WHO KNOWS NOT

He who knows not and knows not he knows not, he is a fool—shun him;

He who knows not and knows he knows not, he is simple—teach him;

He who knows and knows not he knows, he is asleep—wake him;

He who knows and knows he knows, he is wise—follow him!

(An ancient saying from the Middle East)

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. — திருமந்திரம்

இது அராபிய பழமொழியுடன் ஒப்பிடக்கூடிய நல்ல பாடல் . மேலும், பஞ்ச தந்திரக் கதைகளில் குரங்கிற்கு உபதேசம் செய்த குருவிக்கு என்ன நேர்ந்தது என்ற கதையையும் நினைவுபடுத்துகிறது.

அறியாமையில் உழல்பவர்களுக்கு அறிவுரை பகராதே; தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பு. உத்திஷ்டத ஜாக்ரத பிராப்யவரான் நிபோதத எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்  என்ற  கடோபநிஷத் வாக்கியத்தையும் நினைவுபடுத்தும். ஆண்டாளும் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! என்று அல்லவா சொல்லி தட்டி எழுப்பினாள்!

*****

வள்ளலார் பாடல்கள் சிலவற்றை பள்ளிப் பருவத்திலேயே கற்கும் பாக்கியம் கிடைத்தது .நான் படித்த மதுரை வடக்கு மாசி வீதியில் யாதவர் பள்ளி இருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் பிராமணர்கள்; தமைமை ஆசிரியரோ உச்சுக்குடுமி வைத்து நாமம் போட்ட ஒரு அய்யங்கார். பெயர் எல்லாம் நினைவில்லை. அங்கு வகுப்பறைக்கு வெளியே மழை நீர் போக ஒரு தாழ்வாரம் உண்டு. எல்லா வகுப்பறைகளை இணைக்கும் தாழ்வாரம் அது. அங்கேதான் காலை நேர பிரார்த்தனை. ஒரு பிரியது PERIOD  முடிந்தவுடன் எல்லா வகுப்புகளுக்கும் கேட்பதற்கு மணி அடிக்கும் இடமும் அதுதான் . வாத்தியாரின் நன் மதிப்பை பெற்ற சீனியர் மாணவர் கனமான மணியைக் கையில் தூக்கி அடிப்பார். சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் வேறு மணி. பெரிய இரும்புப் பாளம் METAL BAR தொங்கும் அதில் ஒரு பியூன் போய் பெரிய கம்பியை  வைத்து அடிப்பார்.

யாதவாஸ்கூல் பற்றி மீண்டும் பார்ப்போம் ;

பள்ளிக்கூடமோ யாதவர் பள்ளி; கும்பிடுவதோ பத்து தப்படி தள்ளி இருக்கும் கிருஷ்ணர் கோவில். மறுபுறமோ ராமையாணச் சாவடி. ஆனால் பள்ளியில் பிரார்த்தனை “கல்லார்க்கும் கற்றவருக்கும் களிப்பருளும் களிப்பே”  என்ற வள்ளலார் பாடல். சில நாட்களுக்கு ஒரு change சேஞ் – சிவ பெருமான் மீது பொன்னர் மேனியனே – தேவார பாடல் .

அப்போது கற்ற வள்ளலார் பாடல் இன்றுவரை மறக்கவில்லை. அதற்குப் பின்னர் அப்பா சொல்லிக் கொடுத்த “முன்னவனே யானை முகத்தவனே”  என்ற கணபதி (வள்ளலார்) பாடல். பின்னர் வீட்டில் அப்பா செய்யும் பஜனையில் “அம்பலத்தரசே அரு மருந்தே” (வள்ளலார் )வந்து விடும். அவ்வப்போது வீட்டுக்கு வரும் சம்பந்த மூர்த்தித்தெரு நாடக நடிகர் மஹாதேவன் “அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்- பொருட்சார் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்” (வள்ளலார்) என்பதைப் பாடிக்காட்டுவார் ; எல்லோரும் உருகிப்போவோம். அப்பாவுக்கு பல வள்ளலார் பாடல்கள் அத்துப்படி. எனக்கு  எங்காவது பஜனைப் பாடல் பாட ‘சான்ஸ்’ chance கிடைத்தால் நான் படுவது ‘“அம்பலத்தரசே அரு மருந்தே” தான். அடுத்த வீட்டு ஐயங்கார் வீட்டின் முன்புறம் Modern Scientific Company மாடர்ன் சைன்டிபிக் கம்பெனி . அதன் பின்புறம் வீட்டு ஓனர் Owner செல்லூர் அய்யங்கார் சீனிவாசாயங்கார். பலே  கிண்டல் பேர்வழி.

சத்ய சாயிபாபா படத்தில் விபூதி வருகிறது; பால் வருகிறது; தேன் வருகிறது என்று மதுரை முழுதும் பரபரப்பு. அவரிடம் அது பற்றிப் பேசினால் “டேய் மண்ணெண்னைக்கு ரேஷனில் கியூவில் நிற்கிறோமே; பாபா படத்தில் கெரசின் வந்தால் நன்றாக இருக்குமே!” என்பார். அவர் வீட்டிலும் நான் என் தம்பி முதலியோர் சென்று பஜனை செய்வோம். அப்போது என் பாட்டு அமபலத்தரசே …. தான்.

என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த வரிகள் “தும்பைப் பூ வை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே” என்ற வரியாகும் . அதைப் பாடிப் பாடி மகிழ்வார். ‘தும்பபைப் பூவாக பிறந்தால் சிவன் பாதத்தில் மலராகக் கிடக்கலாம்’ என்பது தாத்பர்யம் .

சென்ற முறை இந்தியா போனபோது என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. வடலூர் சென்று வள்ளலார் சந்நிதிகளை தரிசித்தேன் . மீண்டும் ஒருமுறை திருவருட்பா வாங்கினேன். மறந்து போன “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” பாடலை எல்லாம் மனப்பாடம் செய்தேன்.

–சுபம்—

Tags-, திருமூலர், எச்சரிக்கை, நாத்திகம்  ,நாத்தீகர் மீது, ஐந்து புலவர்கள்,கடும் தாக்கு, part-15,வள்ளலார், ஆராய்ச்சிக் கட்டுரை 15

Leave a comment

2 Comments

  1. muralidharansite's avatar

    Super Sir. I am also an old student of Sethupathi High School, Madurai. Year passed is 1976. PUC 1977.-78 and BE 1978-83. Very happy to know you are also from madurai. After reading your story, my schooldays came into memory. My Grandfather was retired School teacher Secondy grade, same school . I am proud to say that Great Poet Mahakavi Subramaniya Bharathiyar worked briefly as a tamil teacher in our school. Thanks & Regards,

  2. Tamil and Vedas's avatar

    VERY GLAD TO KNOW THAT U R ALSO A STUDENT OF MY SCHOOL.. I STUDIED THERE UNTIL 1965.

Leave a comment