ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post .14,133)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,133

Date uploaded in Sydney, Australia – –24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் அத்தியாயம் 12

ச. நாகராஜன்

ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன் (பிறப்பு 12-2-1809 இறப்பு 15-4-1865). அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்ற இவரது வாழ்வில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் சில இதோ:

எதிரிகளை அழிப்பது எப்படி?

ஜனாதிபதியாக ஆப்ரஹாம் லிங்கன் (ABRAHAM LINCOLN) இருந்த போது ஒரு முறை அவரது எதிர்க்கட்சியினரைப் பற்றி மிகவும் அன்பாகவும் உயர்வாகவும் புகழ் மொழிகளைச் சொன்னார் லிங்கன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி எப்படி இவர் இவ்வளவு அன்பாக எதிரிகளைப் புகழலாம் என்று கேட்டார். அதற்கு லிங்கன் உடனே, “ அம்மணீ! அவர்களை நான் நண்பர்களாக்கிக் கொண்ட போதே எதிரிகள் அழியவில்லையா என்ன?” என்று கேட்டார்.

லிங்கன் மிகுந்த புத்திகூர்மையுடன் அனைவரையும் கவர்வதில் வல்லவர், நல்லவர்!

லிங்கனின் அறிவார்வம்

லிங்கன் எந்த விஷயத்தையும் ஆர்வம் உந்த அறிந்து கொள்வது வழக்கம்.

ஒரு முறை அவரது நண்பர்களுள் ஒருவர் அவரிடம், “லிங்கன், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் நின்று அதைப் பார்த்த போது உங்களுக்கு என்ன தோன்றியது” என்று கேட்டார்.

ஒரு கணம் யோசித்த லிங்கன், “உலகத்தில் இவ்வளவு நீரும் இந்த நீர்வீழ்ச்சிக்கு எப்படி வந்து சேர்கிறது? என்று தோன்றியது” என்றார்.

வால்நட் விஷயம்

ரோலண்ட் டில்லர் (ROLAND DILLER) என்பவர் லிங்கனின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் கூறிய சம்பவம் இது.

ஒரு நாள் வாசலில் ஏகப்பட்ட சத்தம். என்னெவென்று பார்க்க வெளியே வந்தேன். இரண்டு குழந்தைகள் லிங்கனைச் சூழ்ந்து கொண்டு பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.

நான் லிங்கனை நோக்கி, “ லிங்கன், என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னவா? உலகத்தில் எப்போதும் எங்கும் உள்ள விஷயம் தான் இங்கும். என்னிடம் மூன்று வால்நட் இருக்கிறது. இந்தக் குழந்தைகள் ஆளுக்கு இரண்டு வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன” என்றார்.

உலக நடப்பை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டி விட்டார் லிங்கன்!

கல்லறைக்குச் செல்லும் குதிரை

ஒரு முறை லிங்கன் ஒரு அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்ல வேண்டியதாக இருந்தது. எதிரிகளிடமிருந்து பணம் பெற்று குதிரைக்குத் தீவனம் போடும் ஒரு ஊழியர் வேண்டுமென்றே குதிரையை மெல்ல வழி நடத்திச் சென்று கொண்டிருந்தார். லிங்கன் அந்தக் கூட்டத்திற்குப் போகக் கூடாது என்பது அவர் எண்ணம். ஆனாலும் ஒரு வழியாகக் கூட்டத்திற்குச் சென்று அதில் கலந்து கொண்ட லிங்கன் மீண்டும் திரும்பிச் செல்ல அந்தக் குதிரை வண்டிக்காரரிடம் வந்தார்.

குதிரையை ஓட்டி வந்தவரிடம் லிங்கன்,”என்ன இந்தக் குதிரையை சவ ஊர்வலத்திற்குத் தான் கொண்டு செல்வீர்களோ?” என்று கேட்டார்.

திடுக்கிட்ட குதிரையோட்டி, “இல்லையே” என்றார்.

“நல்ல வேளை! உங்கள் பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒருவேளை இந்தக் குதிரைகள் சவ ஊர்வலத்தில் சவத்தைக் கல்லறைக்குக் கொண்டு சென்றால் அவரை மீட்பது என்பது நடக்கவே நடக்காதே (RESURRECTION) என்று கவலையாக இருந்தது” என்று கிண்டலடித்தார்.

குதிரை வண்டிக்காரர் வெட்கித் தலை குனிந்தார்.

அற்புத மனிதர் லிங்கன்

ஃப்ரெடெரிக் டக்ளஸ் (FREDERICK DOUGLASS) என்பவர் ஒரு நீக்ரோ இனத் தலைவர். பெரிய எழுத்தாளரும் கூட. அவரை ஒரு முறை லிங்கன் தன்னுடன் ஜனாதிபதி மாளிகையான ஒய்ட் ஹவுஸில் விருந்துண்ண அழைத்தார்.

அவரும் விருந்துக்குச் சென்று விருந்துண்டார்.

இந்த விருந்தைப் பற்றி அவர் சொல்லும் போதெல்லாம், “விருந்துண்ணச் சென்று ஒரு மணி நேரம் வெள்ளைக்காரரான லிங்கனுடன் கழித்த நான் ஒரு முறை கூட அவரால் நான் ஒரு நீக்ரோ என்று நினைவுபடுத்தப்படவில்லை. நான் சந்தித்த இப்படிப்பட்ட ஒரே ஒரு வெள்ளைக்கார மனிதர் இவர் தான்” என்று கூறுவது வழக்கமாயிற்று.

லிங்கன் அனைவரையும் சரி சமமாக மதித்து நடத்தியவர் என்பது அனைவரும் போற்றும் ஒரு விஷயம்! 

***

அத்தியாயம்11 வெளியான தேதி 22-11-23 கட்டுரை எண் 12748

Leave a comment

Leave a comment