ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள் -Part 16 (last part) Post.14,135

Written by London Swaminathan

Post No. 14,135

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 16

ராமலிங்க சுவாமிகளின் மூன்று முக்கியப்பாடல்கள்

(வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைவு)

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நிறைவு செய்ய மூன்று முக்கியப்   பாடல்ககளை  தெரிவு செய்துள்ளேன் .

அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் ………..  பாடல் போல ஏனைய பாடல்கள் பிரபலம் அடையாவிட்டாலும்  சங்கீத வித்வான்களால் பாடப்பெற்ற மற்றுமொரு பாடல்  அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம்  – என்ற பாடல் ஆகும் .

1

பெர்ற  தாய்தனை மக மறந்தாலும் என்ற பாடலை முன்னரே கண்டோம்; அதே தொனியில் அமைந்த இன்னும் ஒரு செய்யுள்

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால்

 தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்கு

பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத்தாடும்

புனித நீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மை அப்பா இனி ஆற்றேன்

இதில் மாணிக்கவாசகரின் திருவாசகத் தொனியைக் காணலாம் ; அழுதால் அவனைப் பெறலாமே என்கிறார் மாணிக்கவாசகர்.

*****

பாரதி மீது  தாக்கம்

ராமலிங்க சுவாமிகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர் பாரதியார் . ஆயினும் இருவர் பாடல்களிலும் பல ஒற்றுமைகளைக் காண்கிறோம். எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இருவரும் வேண்டினர் ; அதுமட்டுமல்ல சமுதாய புரட்சியும் செய் தனர்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்

அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

என்றான் பாரதி .

***

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம் என்றும் இயம்பினான் பாரதி.

***

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே”– என்றும் பாடினான் பாரதி.

2

இதை வள்ளலார் ராமலிங்க சுவாமிகளும் பாரதிக்கு முன்னரே பாடிவிட்டார்:-

1. இதுநல்ல தருணம் – அருள்செய்ய

இதுநல்ல தருணம்.

2. பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்

பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல

கண்ணிகள்

3. மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல

4. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த  மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல

5. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று

கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று

தாபமும் சோபமும் தான்தானே சென்றது

தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல

6. கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது

கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது

புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று

பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.

7. இதுநல்ல தருணம் – அருள்செய்ய

இதுநல்ல தருணம்.—- ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா பாடல்.

***

பாரதியும் நல்ல காலம் வருகுது பாடலில் இதை எதிரொலிக்கிறார்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;

நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;

சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!

வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;

படிப்பு வளருது;பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,

போவான்,போவான்,ஐயோவென்று போவான்! 2

*****

3

இறுதியாக வள்ளலார் தனது பாடல்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக வைத்த பாடலைக் காண்போம் . கண்டசாலா முதல் தண்டபாணி தேசிகர் வரை எல்லா பாடகர்களும் பாடிய புகழ்பெற்ற பாடல் இது .

அச்சோப் பத்து

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்

நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்

நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்

கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்

செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்

அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்

சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்

நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்

நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்

பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்

பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்

திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்

இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்

எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்

பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்

பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்

செச்சைமலர் எனவிளங்குந் திருமேனித் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்

சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்

மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்

ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்

தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்

துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்

மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்

மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்

ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்

ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்

தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்

எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்

அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்

அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்

ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்

ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்

செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்

சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்

நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா

நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்

பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்

பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்

சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

திருவருட்பா 

சிதம்பரம் என்னும் சிற்சபையில் சிவகாமியுடன் உறையும் நடராஜனே தனது குலதெய்வம் என்று பாடி முடிக்கிறார். திருமந்திர, திருவாசகக் கருத்துக்களையும் பிழிந்து தந்துள்ளார். மாண்டவரை எழுப்ப முடியும் என்ற கருத்தை மீண்டும் பாடுகிறார். தன்னைப் போல எல்லோரையும் பேரானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் பொன்னம்பலவாணனைப் புகழ்கிறார் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் பாடல்களை எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இப்போதுள்ள பிரபல பாடகர்கள் வரை பலரும் பாடிய பாடல்கள் அனைத்தும் யூ டியூபில் கிடைக்கின்றன. நான் கேட்டு ஆனந்தம் அடைவதைப் போல அவைகளை அனைவரும் கேட்டு மகிழவேண்டும். .யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

(வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைவு)

—SUBHAM—

TAGS — வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -16, last part

ராமலிங்க சுவாமிகளின்,  மூன்று முக்கியப் பாடல்கள்

Leave a comment

Leave a comment