
Post No. 14,137
Date uploaded in Sydney, Australia – –25 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 13
ச. நாகராஜன்
ரிலேடிவிடி என்றால் என்ன, மிஸ்டர் ஐன்ஸ்டீன்?
ரிலேடிவிடி என்றால் என்ன?
ஆல்ப்ரட் ஐன்ஸ்டீனைப் பற்றிய புகழ் பெற்ற சம்பவம் இது.
ஒரு பெரிய விருந்தில் விருந்தளித்த பெண்மணி , “ரிலேடிவிடி என்றால் என்ன மிஸ்டர் ஐன்ஸ்டீன்?“ என்று கேட்டார். அப்பாவியான அவருக்கு ஐன்ஸ்டீன் கொடுத்த விளக்கம் இது.
“மேடம், ஒரு நாள் நான் நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கண்பார்வையற்றவருடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அவரிடம் எனக்கு ஒரு டம்ளர் பால் வேண்டும் என்றேன்.
“பாலா? அப்படி என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லையே, அது என்ன சொல்லுங்கள்” என்றார் நண்பர்.
“ஒரு வெள்ளை நிற திரவம் அது” என்றேன் நான்.
“திரவம் எனக்குத் தெரியும். வெள்ளை என்றால் என்ன?” என்று கேட்டார் அவர்.
“வாத்தின் சிறகுகளில் காணப்படுவது வெண்மை ” என்றேன் நான்.
“சிறகுகள் எனக்குத் தெரியும். வாத்து என்றால் என்ன?” என்று கேட்டார் அவர்.
“வளைந்த கழுத்துடன் கூடிய ஒரு பறவை அது” என்றேன் நான்.
“கழுத்து எனக்குத் தெரியும். வளைந்தது என்றால் என்ன?” என்று கேட்டார் அவர்.
எனக்குப் பொறுமை இழந்து விட்டது. உடனே அவரது கையைப் பிடித்து இழுத்து நேராக வைத்தேன். இது தான் நேராக இருப்பது என்று கூறி விட்டு அவர் கையை முழங்கையில் மடக்கினேன். இது தான் வளைந்து இருப்பது. இப்போது புரிகிறதா?” என்றேன் நான்.
“ஆஹா!” என்று கூவிய எனது நண்பர், “இப்போது பால் என்று நீங்கள் சொன்னது என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறது!” என்றார்.
இதைக் கூறிய ஐன்ஸ்டீன் மெல்ல நிறுத்தினார். அந்தப் பெண்மணி வெட்கத்துடன் மெதுவாக அவரிடமிருந்து நகர்ந்தார்!
ஐன்ஸ்டீனை விடப் பெரிய ஆள்!
கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் அடங்கிய கூட்டத்தில் ஐன்ஸ்டீனின் அபூர்வமான கொள்கைகளை ஒருவர் தீவிரமாக விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் அவர் ஆவேசமாகப் பேசிய பின்னர் சிறிது மூச்சு விட்டு நிறுத்தினார். அப்பொது கூட்டத்தில் இருந்த ஒரு கணித நிபுணர் கூறினார்;” நண்பரே! நீங்கள் நிஜமாகவே ஐன்ஸ்டீனை விடப் பெரிய ஆள். ஐன்ஸ்டீன் கூறியது இதுவரை பன்னிரெண்டு பேருக்குத் தான் புரியும் என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் சொன்னது யாருக்குமே புரியவில்லை!” என்றார்.
தப்பைக் கண்டுபிடிக்க ஒருவர் போதுமே!
ஐன்ஸ்டீனின் சிலையை வடிவமைக்க ஜாகப் எப்ஸ்டீன் (JACOB EPSTEIN) என்ற சிற்பி முன் வந்தார். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அவர் முன் ஐன்ஸ்டீன் வந்து அமர்ந்து விடுவார். சிற்பி தன் வேலையைச் செய்வார்.
அவர் கூறியது இது: “அவரது சிலையை அமைக்கும் போது ஒரு நாள் அவர் என்னிடம் கூறினார் – நாஜி பேராசிரியர்கள் நூறு பேர் எனது தியரியில் தப்பைக் கண்டுபிடித்து அதைக் கண்டித்தார்கள். எனது ரிலேடிவிடி கொள்கை தப்பாக இருந்தால் அதைக் கண்டிக்க நூறு பேர் எதற்கு வேண்டும்? ஒருவர் போதுமே” என்றேன் நான்!
ஐன்ஸ்டீனின் கணிதத்தைச் சரி பார்ப்பவர்!
சர் வில்லியம் ரோதென்ஸ்டீன் (SIR WILLIAM ROTHENSTEIN) பெர்லின் நகரில் ஐன்ஸ்டீன் பற்றிய உருவப்படம் ஒன்றைத் தயார் செய்து கொண்டிருந்தார். ஐன்ஸ்டீனுடன் எப்போதும் கூடவே ஒரு படித்த அமைதியான இளைஞர் வருவார். அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டே இருப்பார். சில சமயம் பேச்சின் நடுவில் ஐன்ஸ்டீன் அவரைப் பார்ப்பார். அவர் ஆமாம் என்று சில சமயம் தலையை ஆட்டுவார். சில சமயம் இல்லை என்பது போலத் தலையை அசைப்பார்.
ரோதென்ஸ்டீனின் வேலை முடிந்தது
அவர் ஐன்ஸ்டீனைப் பார்த்து, “இதோ உங்கள் கூட வந்திருக்கிறாரே, இவர் யார்?” என்று கேட்டார்.
“அவர் தான் எனது உதவியாளர். எனது கணக்குகளை எல்லாம் சரி பார்ப்பவர். அது சரியா என்று அவர் பார்ப்பார். இல்லை என்றால் இல்லை என்று சொல்வார். பாருங்களேன், நான் ஒன்றும் நல்ல கணித நிபுணர் இல்லையே” என்றார் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் இது போன்ற சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு!
***