பட்டினத்தார்! –1 (Post No.14,149)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,149

Date uploaded in Sydney, Australia – –28 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

26-1-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

பட்டினத்தார்! – 1 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களே,

 வணக்கம் நமஸ்காரம்.

எளிய தமிழில் இனிய பாடல்களைப் பாடி அருளி அதைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாட வைத்த சிறந்த சிவ பக்தர் பட்டினத்தார் என்று நாடெல்லாம் அறியும் திருவெண்காட்டு அடிகளைப் பற்றி இன்று சிறிது சிந்திப்போம்.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் இவர்.

காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார்  என்று அறியப்படும் பல்லவனேஸ்வரம்  தமிழ்நாட்டில் உள்ள  சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில் ஒன்றாகும்.

அங்கு சிவநேயர் என்று ஒரு பணக்கார வணிகர் வாழ்ந்து வந்தார். அவருக்கும் ஞானகலை என்ற அவருடைய கற்புடைய மனைவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இறைவனின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்குத் திருவெண்காடு என்ற ஊரில் தங்கி திருவெண்காடர் என்ற பெயரை அவர்கள் இட்டனர்.

பதினாறு வயது ஆகும் போது அவருக்கு சிவசிதம்பரம் செட்டியார் மற்றும் சிவகாமி அம்மையாரின் மகளான சிவகலை என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைத்தனர். தன் மனைவியுடன் நன்கு வாழ்ந்த திருவெண்காடர் வணிகத்தில் திறமையுடன் செயல்பட்டார்.

வணிகத்தில் கிடைத்த பெரும்பொருளைக் கொண்டு சிவனடியார்களுக்கு அமுது படைத்து அவர்களை நன்கு உபசரித்து அவர் வாழ்க்கையை நன்கு  நடத்தி வந்தார். அவருக்கு புத்திரன் பிறக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது.

இதே காலத்தில் திருவிடைமருதூரில் மகாலிங்கப் பெருமானை சிவசர்மர் என்பவர் வழிபாடு செய்து வந்தார். அவரது வறுமையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். மருதவாணர் என்ற பிராம்மண பிரம்மசாரியாகத் தோன்றி அவரிடம் வந்து தன்னை விற்றுப் பொருள் அடையுமாறு சிவசர்மரிடம் கூறினார்.

சிவசர்மர் மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணனை விலையாகக் கொடுத்து பெரும் பொருள் அடைந்து மகிழ்ந்தார். மருதவாணனைத் தன் புதல்வனென திருவெண்காடர் வளர்க்க ஆரம்பித்தார்.

மருதவாணன் வணிகத்தில் பெரும் பொருளை ஈட்டிக் காட்டித் தன் தந்தையை மகிழ்வித்தான். தான் ஈட்டிய பொருளைக் கோவில் பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவிட்டான் அவன். ஒரு சமயம்  எரு மூட்டைகளை வாங்கிக் கொண்டு கப்பலில் ஊர் திரும்புகையில் கப்பல் திசை மாறிப் போயிற்று.

உடன் வந்த வணிகர்கள் தங்களிடம் இருந்த விறகு தீர்ந்து போனதால் மருதவாணனிடம் இருந்த எரு மூட்டைகளைக் கடனாகக் கேட்டுப் பெற்றனர்.

ஊர் வந்தவுடன் தருவதாக உறுதிச் சீட்டையும் எழுதி மருதவாணனிடம் கொடுத்தனர். ஊர் வந்து சேர்ந்த அவர்கள் திருவெண்காடரிடம் மருதவாணன் வீணாகப் பொருளைச் செலவிட்டதாகக் கூறினர். திருவெண்காடர் மருதவாணன் கொண்டு வந்த வரட்டிகளுள் ஒன்றை எடுத்துச் சோதித்துப் பார்த்தார். அதனுள் ஒரு மாணிக்க மணி இருந்ததைக் கண்டு திகைத்தார்; வியந்தார்.

இதை அறிந்த வணிகர்கள் தாம் கடனாகப் பெற்ற எரு மூட்டைகளின் விலை மதிப்பை எண்ணிக் கவலை கொண்டனர். அவர்கள் சென்றபின் திருவெண்காடர்  எல்லா வரட்டிகளையும் சோதித்தார். ஒன்றிலும் கூட மணி இல்லை. பெரிதும் வருத்தமுற்ற அவர் மருதவாணனைத் தனி அறை ஒன்றில் பூட்டி வைத்தார்.

திருவெண்காடரின் மனைவி சிவகலை தன் வளர்ப்பு மகனான மருதவாணனைக் காணச் சென்றார். கதவைத் திறந்த அவர் அங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் நடுவில் முருகப்பெருமானுடன் இருந்த தெய்வீகக் காட்சியைக் கண்டு வியந்தார். உடனே இதை அந்த அம்மையார் தன் கணவரிடம் சொன்னார். உடனே திருவெண்காடர் அறையைத் திறந்து பார்த்தார். அங்கே மருதவாணன் மட்டும் தனியே இருப்பதைப் பார்த்தார்.

இது ஒரு தெய்வீகத் திருவிளையாடல் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்ட மருதவாணன் மெய்நூல் பொருளை அவருக்கு உபதேசித்தான். என்றாலும் உலகப்பற்று அவரை விட்டு நீங்கவில்லை. இதை நீக்குவதற்காக மருதவாணன் காது அற்ற ஒரு ஊசியை எடுத்து இழை பிரித்த நூலுடன்  பட்டுத் துணியில் மடித்து ஒரு பெட்டியில் வைத்து அந்தப் பெட்டியை திருவெண்காடரின் மனைவி கையில் கொடுத்து,  “உமது கணவருக்கு உரிய பொருள் இது” என்று கூறினான். இதைக் கூறிவிட்டு மருதவாணன் மறைந்தான்.

அதைப் பார்த்த திருவெண்காடர் இறைவனது திருக்குறிப்பை உணர்ந்தார். நிலையில்லா உலக வாழ்வைப் பற்றி நன்கு உணர்ந்த அவர் உலகைத் துறந்து துறவற நெறியினை மேற்கொண்டார்.

செய்தியைக் கேள்விப்பட்ட மன்னன் அவரிடம் வந்து, “இதனால் நீர் பெற்ற பயன் என்ன” என்று கேட்க,” நீர் நிற்கவும் யாம் இருக்கவும் பெற்ற தன்மையே அது” என்று திருவெண்காடர் பதில் கூறினார்.

பல வீடுகளிலும் பிச்சை எடுத்து தெருக்களில் படுத்து உறங்கும் திருவெண்காடரது நிலையைக் கண்ட அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்புக் கொண்டு அவரது தமக்கை மூலம் நஞ்சு கலந்த அப்பம் ஒன்றை உண்பதற்காகக் கொடுத்து அனுப்பினர். அதனை  உணர்ந்த திருவெண்காடர் “தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி அந்த அப்பத்தை வீட்டின் வாசலில் செருகினார். வீடு தீப்பற்றி எரிந்தது.

அவரை அனைவரும் பட்டினத்தார் என்று அறியலாயினர்.

அடிகள் இப்படியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த நாட்களில் அவரது தாயார் இறந்தார். அவரது ஈமச் சடங்கைச் செய்ய எங்கிருந்தாலும் நான் வருவேன் என்று முன்னம் வாக்களித்தபடி சரியான நேரத்தில் அவர் சுடுகாட்டினை அடைந்தார். அங்கு அவர் உறவினர்கள் சிதையில் அடுக்கி இருந்த காய்ந்த விற்குகளை அகற்றி விட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் அடுக்கிப் பத்துப் பாடல்களைப் பாடினார். என்ன அதிசயம். தீ கொழுந்துவிட்டு எரிய ஆர்மபித்தது.

உள்ளத்தை நெகிழ வைக்கும் அந்தப் பத்துப் பாடல்களில் நான்கு பாடல்களைக் காண்போம்.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்

நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்

பின்னர் திருவெண்காட்டு ஈசனைப் பணிந்து பட்டினத்தார் திருவிடைமருதூரை அடைந்தார்.

**

Leave a comment

Leave a comment