பிப்ரவரி 2025 காலண்டர்; தியகராஜ கீர்த்தனை   பொன்மொழிகள் (Post No.14,156)

Written by London Swaminathan

Post No. 14,156

Date uploaded in Sydney, Australia – 30 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தெலுங்கு மொழியிலிருந்து அருமையாகத் தமிழில்  மொழிபெயர்த்த அத்தனை பெரியவர்களுக்கும் நன்றி!

****

பிப்ரவரி பண்டிகை நாட்கள்

பிப்ரவரி 2  வசந்த பஞ்சமி ,4 -ரத சப்தமி; 5  பீஷ்ம அஷ்டமி/ துர்கா  அஷ்டமி விரதம், 14 -வாலண்டின்ஸ்  டே/ காதலர் தினம்; 19- சிவாஜி ஜெயந்தி; 26 – மகா சிவராத்திரி; 28 –நேஷனல் சயின்ஸ் டே.

27 –அமாவாஸ்யா; 12–பூர்ணிமா ; ஏகாதசி விரத நாட்கள் – 8, 23

முஹுர்த்த தினங்கள்  (இவை தவிர மேலும் சில முகூர்த்த தினங்களும் உண்டு)

  • February 3, Monday: Muhurat from 7:08 AM–5:40 PM 
  • February 6, Thursday: Muhurat from 7:29 PM–7:06 AM on February 7 
  • February 7, Friday: Muhurat from 7:06 AM–4:17 PM 
  • February 12, Wednesday: Muhurat from 1:58 AM–7:01 AM on February 13 
  • February 19, Wednesday: Muhurat from 6:56 AM–7:32 PM 
  • February 20, Thursday: Muhurat until 1:30 PM 
  • February 21, Friday: Muhurat from 11:59 AM–3:54 PM 

****

பிப்ரவரி 1 சனிக்கிழமை

திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றினில் திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

****

பிப்ரவரி 2 ஞாயிற்றுக் கிழமை

ஆதாரமான, ருக், சாம ஆகிய மறைகளிலும்,

புனித காயத்திரி (மந்திரத்தின்) இதயத்திலும்,

வானோர், மற்றும் அந்தணர் உள்ளங்களிலும்,

மங்களம் நிறை இத்தியாகராசனிடமும்

திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

****

பிப்ரவரி 3 திங்கட் கிழமை

என்னப் பிறப்பிதுவோ இராமா?

என்னப் பிறப்பிதுவோ?

எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

****

பிப்ரவரி 4 செவ்வாய்க் கிழமை

கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த

அழகையும் விஞ்சிய அழகா, இராமா –

உன்னை அணுகிப்பேசிட இயலாத

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

*****

பிப்ரவரி 5 புதன் கிழமை

பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும்

கண்ணெல்லாம் நிறைந்தும்

மனம் நிறைவெய்யாமல்

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

****

பிப்ரவரி 6 வியாழக் கிழமை

இசையில் திளைப்பவனும்,

இன்னொருவர் மனதை புரிந்து

புரிந்துகொள்பவனும் ஆன இராமனை

மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

*****

பிப்ரவரி 7 வெள்ளிக் கிழமை  

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா,

தியாகராஜரால் போற்றப்பட்டவனே,

விரைவில் உன்னை காணத்

துடிக்குதென் இதயம் – திணரும்

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

****

பிப்ரவரி 8 சனிக்கிழமை

சாமகானத்தினில் திளைப்போனே! மன்மதனின் எழிலோனே! இரகுவரா!

எத்தனையோ பெருந்தகைகள்; அனைவருக்கும் வந்தனம்.

****

பிப்ரவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மதி முகத்தோனின் எழிலையும், ஒயிலையும், தமது இதயக் கமலத்தினிற் கண்டு,

பேரின்பம் துய்ப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;

பேறுடைத்த, தலைசிறந்தோர் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 10 திங்கட் கிழமை

மனமெனும் வனத்தில் சரிப்போனுடன் சரித்து,

அவனுருவத்தினை நன்கு தரிசிப்போரும்,

அவ்வமயமே, அவனது திருவடிகளில் தனது இதயமெனும் கமலத்தினை சமர்ப்பணம்

செய்வோரும் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 11 செவ்வாய்க் கிழமை

வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனெனும் பரம்பொருளினைக் குறித்து,

மெய்யறிவு சேர்க்கும் உண்மையான நெறியுடன், களிப்புடன் பாடிக்கொண்டு,

சுரம் மற்றும் லயத்தினில் பிறக்கும் இராகங்களை யறிவோர் எத்தனையோ பெருந்தகைகள்;

****

பிப்ரவரி 12 புதன் கிழமை

அரியின் குணங்களெனும் மணிமயமான சரங்கள், தொண்டையினில் துலங்கும், சீரிய தொண்டர்கள்,

இப்புவியினில், தெருட்சியுடனும், அன்புடனும், கருணை கொண்டு, புவி

யனைத்தினையும், அமிழ்தப் பார்வையினால் காப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;

****

பிப்ரவரி 13 வியாழக் கிழமை

ஒயில் மிஞ்சும் நடையுடை அழகனை, எவ்வமயமும் கண்ணால் கண்டுகொண்டு,

மெய்ப் புல்லரிக்க, ஆனந்தக் கடலில் களிப்புடன் மூழ்கி, புகழ் பெற்றோர் எத்தனையோ பெருந்தகைகள்;

****

பிப்ரவரி 14 வெள்ளிக் கிழமை  

உயர் பாகவதர்களாகிய சிறந்த முனிவர்கள், சந்திரன், சூரியன், சனகர்,

சனந்தனர், திசை மன்னர்கள், வானோர், கிம்புருடர், இரணியகசிபுவின் மைந்தன், நாரதர்,தும்புரு, வாயு மைந்தன், இளம் பிறையணிவோன், சுகர், மலரோன், உயர் அந்தணர்,

மிக்குத்தூயோர், மேலானோர், என்றுமிருப்போர், பேரின்பத்தினை எவ்வமயமும் துய்ப்போர் – இவர்களன்றியும் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 15 சனிக்கிழமை

உனது திருமேனி மற்றும் நாமத்தின் பெருமைகளையும், உனது வீரம் மற்றும்

துணிவினையும், உனது அமைதியான மனம், மற்றும் நீ பகரும் சொற்களின் உறுதி (ஆகிய குணங்களை),

உன்னிடம் நற்பற்று தோன்றுவதற்காக,

தீய கோட்பாடுகளைப் பொய்யாக்கியது போலும் உனதுள்ளத்தினைத் தெரிந்து, மகிழ்வுடன், (உனது) பண்புகளை பத்திக் களிப்புடன் கீர்த்தனங்கள் செய்வோர் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 16 ஞாயிற்றுக் கிழமை

பாகவதம், இராமாயணம், கீதை மற்றும் மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் ஆகியவற்றின் உட்கருத்துக்கள்,

சைவம் முதலான அறு மதங்களின் மருமங்கள், மற்றும்

முப்பத்து முக்கோடி வானோரின் உள்ள இயல்பு, இவற்றினை அறிந்து, உணர்ச்சி, இராகம், தாளம் ஆகியவற்றின் சுகத்துடன்,

நீண்ட ஆயுளுடைத்து, இடையறா இன்பம் நுகர்வோராகி,

தியாகராசனுக்கு இனியோரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 17 திங்கட் கிழமை

காதல் மேலிடும் வேளை, (இறைவனின்) நாமத்தினையெண்ணுவோர்,

இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனின் உண்மையான தொண்டரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;

அனைவருக்கும் வந்தனம்.

*****

பிப்ரவரி 18 செவ்வாய்க் கிழமை

பணிவுடன் கௌசிகரின் பின் சென்ற திருவடிகளைக் காண்பதென்றைக்கோ?

அதன் பின்னர், கல்லைப் பெண்ணாக்கிய சரணங்களைக் காண்பதென்றைக்கோ?

பெருத்த, சிவனின் வில்லை முறித்த பாதங்களைக் காண்பதென்றைக்கோ?

அந்த சனக மன்னன் பாலினால் கழுவிய அந்தக் கால்களைக் காண்பதென்றைக்கோ?

*****

பிப்ரவரி 19 புதன் கிழமை

காதலுடன் சீதைக்குத் தாலி கட்டிய கரங்களைக் காண்பதென்றைக்கோ?

கோபத்துடன், பிருகு மைந்தன் வில் பலத்தைப் பறித்துக்கொண்ட கைகளைக் காண்பதென்றைக்கோ?

வனத்திற்குச் சென்று, விராதனை வதைத்த கைகளைக் காண்பதென்றைக்கோ?

அந்த முனிவர்களையும் கண்டு அபயமளித்த கரத்தினைக் காண்பதென்றைக்கோ?

****

பிப்ரவரி 20 வியாழக் கிழமை

தனக்குத் தானே காக்கையசுரனைக் காத்த அம்பினைக் காண்பதென்றைக்கோ?

நொடியில் எண்ணற்ற தேர்களைப் பொடி செய்த அத்திரத்தினைக் காண்பதென்றைக்கோ?

பெரும் பலவானாகிய வாலியைக் கொன்ற கணையினைக் காண்பதென்றைக்கோ?

அந்த கடலரசனின் மத கருவத்தினை அடக்கிய சாயகத்தினைக் காண்பதென்றைக்கோ?

*****

பிப்ரவரி 21 வெள்ளிக் கிழமை  

அன்புடன் விபீடணனை நோக்கிய கண்களைக் காண்பதென்றைக்கோ?

இராவணனைக் கொன்று, ஏழைக் குரங்குகளெழக் காணும் பார்வையினைக் காண்பதென்றைக்கோ?

வானரர் தலைவனைக் குளுமையாக நோக்கிய நேத்திரங்களைக் காண்பதென்றைக்கோ?

தினமும் இலங்கை செழித்திடக் காணும் கண்களைக் காண்பதென்றைக்கோ?

***

பிப்ரவரி 22 சனிக்கிழமை

சிறந்த புட்பகத்தினில் திகழ்ந்த ஒயிலினைக் காண்பதென்றைக்கோ?

பரதனைக் கண்டு, கைப் பிடித்துக் கொண்டு வந்த வேடிக்கையைக் காண்பதென்றைக்கோ?

தங்க சிங்காதனத்தில் நிலைபெற்ற மாட்சிமையினைக் காண்பதென்றைக்கோ?

உயர் முனிவர்களும், அரசர்களும் குழுமியுள்ள அலங்காரத்தினைக் காண்பதென்றைக்கோ?

****

பிப்ரவரி 23 ஞாயிற்றுக் கிழமை

ஆகமங்கள் போற்றுவோனை, ஆனந்தக் கிழங்கனை, நன்கு காண்பதென்றோ?

பரம பாகவதர்களுக்கு இனியோனின், மாற்றமற்றோனின் வருகையைக் காண்பதென்றோ?

(பாற்) கடற்றுயில்வோனை, கருணைக் கடலினை, வேகமே காண்பதென்றோ?

உயர் தியாகராசன் முதலான தேவதைகள், புகழந்துகொண்ட வகையினைக் காண்பதென்றோ?

**** 

பிப்ரவரி 24 திங்கட் கிழமை

தியாகராசன் போற்றுவோனே!

கண்விழிப்பாய் கருணாநிதீ! கண்விழிப்பாய் தாசரதீ!

பொழுது புலரும் நேரமிது. கண்விழிப்பாய் கருணாநிதீ!

வெண்ணையும், பாலும் பொற் கிண்ணங்களில் நான் வைத்துள்ளேன்;

கருணையுடன் ஏற்றருளி, தெளிந்த கண்களினால் என்னைக் நோக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!

****

பிப்ரவரி 25 செவ்வாய்க் கிழமை

நாரதாதி முனிவர்கள், வானோர், மலரோன், மதிப் பிறை அணிவோனும் உனது சன்னிதியில், வேண்டி, கொலுவு காத்துள்ளனர். கண்விழிப்பாய் கருணாநிதீ!

மன்னாதி மன்னர், மற்றும் திசை மன்னர்கள் யாவரும் வந்துள்ளனர், அரச நீதி அறிய; என்னக் காக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!

*****

பிப்ரவரி 26 புதன் கிழமை

இரகுவீரா! சார-சாரமற்ற பொருளே! உதார குணத்தோனே! பல்லுலக ஆதாரமே! வியத்தகு குணங்களோனே!

கார்முகில் நிகருடலோனே! இராமா!

சீதையின் இதயக்கமலத்தின் பகலவனே! வேண்டியவர்களின் பாரிசாதமே! பாவக் கடலின் கலமே! கமல நண்பன் குலத் தோன்றலே! நான்முகனை யீன்றோனே! விரும்பியது அருள்வோனாகிய, சாகேத நகருறைவோனே!

****

பிப்ரவரி 27 வியாழக் கிழமை

முழந்தாள் நீளக் கைகளோனே! ஒளிர்விடும் மதி முகத்தோனே! வானோர் தலைவன் வழிபடும், தியாகராசன் போற்றும், பிறவாதவனே!

வாருமய்யா, என்னையாளுமய்யா.

என்னைத் துன்புறுத்தல் முறையோ?

****

பிப்ரவரி 28 வெள்ளிக் கிழமை  

என்னிடம் நீ தவறுகளை எண்ணாது ஆதரியுமய்யா.

சமுசாரமெனும் அடவியில் உறைவோனாகிய எனக்கு சாரமான (உனது) நாமமே (அதனைக்) கடத்துவிப்பதாகுமய்யா.

காப்பாய். பூமியின் மருகனாகி, எனது துயரறிந்தும், தாமதமேன்?

தாராளமாக வாருமய்யா.

—subham—

Tags- தியகராஜர் , கீர்த்தனைகள், மேற்கோள்கள்,     பொன்மொழிகள், பிப்ரவரி 2025 காலண்டர், மொழிபெயர்ப்பு , அர்த்தம்

Leave a comment

Leave a comment