ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  2-2-2025 (Post No.14,170)

Written by London Swaminathan

Post No. 14,170

Date uploaded in Sydney, Australia – 3 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  2-2-2025 (Post No.14,170)

(Collected from popular newspapers and edited by me)

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி இரண்டாம் தேதி 2025-ம் ஆண்டு 

முதலில் மஹா கும்பமேளா செய்திகள் 

  மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் கும்பமேளாவில் கலந்துகொள்ள நாளுக்குநாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.



மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 29 ஆம் தேதி நாளான மவுனி அமாவாசை மிக முக்கிய நாளாகும் ; அன்று அளவுக்கு அதிகமான கூட்டம் ஒரே இடத்தில் கூடியதால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வீதம் உதவித்தொகை அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் .


ஜனவரி 29 ஆம் தேதி வரை மொத்தம் 20  கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடியுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வராமல், அருகிலுள்ள நீர்நிலைகளிலேயே புனித நீராடுமாறும் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தார். இதையடுத்து, தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசி பெற்றார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா NATIONAL AEROMAUTICS AND SPACE ADMINISTRATION  என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

*****

திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து வரும் 4-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் இந்து முன்னணியினர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

******

நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் ஏற்றது குறித்து கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய ‘நண்பர்கள்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். ஹிந்திப் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்த அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளும் இருந்தன.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினார். சில தினங்களுக்கு முன், இவர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு துறவறம் ஏற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.அது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அகாராவின் மகா மண்டலேஸ்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:

‘இதுநாள் வரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்தவர்கள், திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறி விட்டார்கள். மகா மண்டலேஸ்வர் பட்டமும் பெற்று விட்டார்கள். ”துறவி ஆவதற்கு, பல ஆண்டுகள் ஆன்மிகம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது– என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

****

இந்துக்கள்  விழா  பற்றி  காங்கிரஸ்  கட்சி  கிண்டல் , கேலி

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் புனித நீராடியுள்ளனர். இதற்கிடையே, பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகேள்வியெழுப்பினார்.மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கார்கேவின் கருத்து தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி  எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது;ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வரும் மகா கும்பமேளாவுக்கான மக்களின் மரியாதையை காங்கிரஸ் கேலி செய்கிறது. கங்கைத் தாய் பற்றிய கார்கேவின் கருத்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்துள்ளனர். சனாதனத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்கள் வெட்கக்கேடானது. கருத்துக்களுக்காக நாட்டிடமும், சனாதனத்தை நம்பும் ஒவ்வொரு நபரிடமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்ற மதங்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை உங்களால் வெளியிட முடியுமா? இப்தார் விருந்தில் பங்கேற்பதன் மூலம் வறுமை ஒழிந்துவிடுமா என்று நீங்கள் கேட்க முடியுமா? காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் எப்படி இதுபோன்ற சனாதன எதிர்ப்பு சிந்தனையை கொண்டிருக்க முடியும் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் ” என்று பாரதீய ஜனதா கட்சி  எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறினார்.
*******

அயோத்தி வருகையை ஒத்தி வையுங்கள்:  ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோவில் வருவதற்கு திட்டமிடும் பக்தர்கள், தங்கள் பயணத்தை 15 முதல் 20 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கும் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. நெரிசல் தவிர்க்க, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது

.நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், சிரமம் இன்றி பாலராமரை தரிசிப்பதற்காக, அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் அயோத்தி வருகையை, 15 முதல் 20 நாள் தள்ளிப்போட வேண்டும். வசந்த பஞ்சமிக்கு பிறகு வந்தால் சிரமம் இன்றி தரிசனம் பெறலாம்.இவ்வாறு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

*****

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!

இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் – மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சந்தித்து கொண்டதாகவும், அப்போது இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது அமல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்க இருநாடுகளும் முடிவெடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 2025 கோடை காலம் முதல், கைலாஷ் – மானசரோவர் யாத்திரை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக இரு நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவும் விரைவில் சந்தித்து நடைமுறைகளை வகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

தைப்பூச விழாவில் இலவச தரிசனம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழாவின் 7ம் நாள், தைப்பூச திருநாளான பிப்ரவரி 11ம் தேதி அன்று தங்க தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 12ம் தேதி தங்க குதிரை வாகன ஊர்வலமும், பிப்ரவரி 14ம் தேதி தெப்ப உற்சவமும் நடத்தப்பட்டு, தைப்பூச திருவிழா நிறைவு செய்யப்படும்.

*****

கோயில்களை நிர்வகிக்க சனாதன வாரியம் — விஷ்வ ஹிந்து பரிஷத்  எதிர்ப்பு 

புதுடெல்லி: ஜன. 26: நாடு முழுவதிலும் உள்ள கோயில்களை நிர்வாகிக்க சனாதன வாரியம் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர். அகில இந்திய அகாடாக்கள் பரிஷத்தின்(ஏஐஏபி) இந்த கோரிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்  (V H P) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வஃக்பு வாரியம் போல், சனாதன வாரியம் அனைத்து மாநிலங்களிலும் அல்லது தேசிய அளவில் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர்.

பாஜகவின் தோழமை அமைப்பான விஹெச்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள முறைப்படி கோயில்களின் நிர்வாகக் குழுக்களே போதுமானவை என விஹெச்பி கருதுகிறது.

.இது குறித்து விஹெச்பியின் தேசியத் தலைவரான அலோக் குமார் கூறுகையில், நம் நாட்டில் வஃக்பு வாரியமும், சனாதன வாரியமும் தேவை இல்லை. கோயில்களை எந்த அரசும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே எங்கள் கொள்கை ஆகும்” எனத் தெரிவித்தார்.

****

பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர் பெருமை

:”பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை,” என, கவர்னர் ரவி தெரிவித்தார்.

சுப்பு சுந்தரம் எழுதிய, ‘காசி கும்பாபிஷேகம்’ நுால் வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட்டு பேசியதாவது:


ஆயிரம் ஆண்டுகளாக, பாரத நாடு ஆன்மிக தலமாக இருந்து வருகிறது. கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்லீம் படையெடுப்பாளர்களால் காசிக்கு அச்சுறுத்தல்இருந்தது. ஆன்மிகப் பணிகளில் நகரத்தார் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் பல ஆன்மிக தலங்களில், அவர்களின் சேவை இன்றளவும் தொடர்கிறது.

பொருளாதாரத்தை வளர்ப்பதில், நாட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. தார்மீக வழியில் பொருளாதாரம் வந்ததாக இருக்க வேண்டும்.

சுய நலத்திற்காக மட்டுமே பொருளாதாரம் என, இருந்து விடக் கூடாது. பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை. சுதந்திரத்துக்கு பின்பு தான் நாம் குடும்பமாக இருக்கிறோம். பாரத ராஷ்ட்ரா என்பது தார்மீக கொள்கைகளால் ஆனது என்று கவர்னர் ரவி கூறினார்.

விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

****

தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு ஏராமான பக்தர்கள் தமிழகம் முழுவதும், தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர்.

·         திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள் முக்குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

·         திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

·         கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் கடலில் நீராடினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

*****

சபரிமலை நடை பிப்ரவரி 12-ஆம் தேதி  திறப்பு

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்து ஜன., 20ல் நடை அடைக்கப்பட்டது. மாசி மாதாந்திர பூஜை பிப்., 12ல் நடை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை திறந்திருக்கும்.
இந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. பக்தர்கள் sabrimalaonline.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

xxxxxx

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

பிப்ரவரி 9- ம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும், 

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும், 

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும். 

வணக்கம். 

—SUBHAM—

Tags-ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல்,  2-2-2025

Leave a comment

Leave a comment