ஆலயம் அறிவோம்! திருவான்மியூர் திருத்தலம் (Post No.14,190)

 WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

 Post No. 14,190

Date uploaded in Sydney, Australia — 10 February 2025

 Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

9-2-25 அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

கை ஆர் வெண்மழுவா கனல் போல் திருமேனியனே

மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே

செய் ஆர் செங்கயல் பாய் திருவான்மியூர் உறையும்

ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது திருவான்மியூர் திருத்தலமாகும்.

தமிழ்நாட்டில் சென்னை மாநகரின் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற இந்தத் திருத்தலம்.

இறைவர் : மருந்தீஸ்வரர் (ஸ்வயம்புலிங்கம்)

இறைவி :  திரிபுரசுந்தரி அல்லது சொக்கநாயகி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

தீர்த்தம் :    ஜன்ம நாசினி, காம நாசினி, பாப நாசினி, ஞான தாயினி,

             மோக்ஷ தாயினி ஆகிய ஐந்து தீர்த்தங்கள்,

தல விருக்ஷம் : வன்னி மரம்

இந்தத் திருத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

மார்க்கண்டேய மஹரிஷியின் உபதேசப்படி வால்மீகி முனிவர் இங்கு ஈசனை வழங்கி வழிபட்டு முக்தி பெற்ற தலம் இது.

வால்மீகி முனிவர் இங்கு ஈசனை வழிபட்டதால் இந்தத் தலத்தின் ஈசர் வான்மீகநாதர் என்று அறியப்படுகிறார். அத்துடன் வன்னி மரத்தைச் சுற்றி இருந்த பரந்த இடமும் திருவான்மியூர் என்ற பெயரைப் பெற்றது.

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது அவர்கள் வாசுகிப் பாம்பை கயிறாகவும் மேரு மலையை மத்தாகவும் பயன்படுத்தினர். அப்போது ஆலகால விஷம் வெளி வந்தது. அந்த விஷத்தை கழுத்தில் இருத்தி, ஈசன் உலகத்தைக் காத்தார்.

இதைத் தொடர்ந்து தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அந்த அமுதத்தைக் கொண்டே தேவர்கள் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்தனர்.  ஆகவே ஈசனது பெயர் அமுதீசர் என்று ஆனது. அமுதமான மருந்தாலேயே அமைந்ததால் மருந்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சமயம் இந்திரன் காமதேனுவை வசிஷ்டரிடம் ஒப்படைக்க, பூஜையின் போது காமதேனு பால் சுரக்கவில்லை. இதனால் வெகுண்ட வசிஷ்டர் காமதேனுவை காட்டுப் பசுவாகப் போகுமாறு சாபம் கொடுத்தார். சாபவிமோசனம் வேண்டிய காமதேனுவிற்கு வசிஷ்டர் மனம் இரங்கி, திருவான்மியூரில் வன்னி மரத்தடியில் ஸ்வயம்புவாய்த் தோன்றிய ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெறுமாறு கூறினார்.

அப்படியே காமதேனு தினமும் இங்கு பால் சுரந்து ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றது.

அதனால்  ஈசனுக்கு ‘பால்வண்ண நாதர்’ என்ற திருப்பெயரும் ஏற்பட்டது.

சதயபுரியை ஆண்டு வந்த மன்னன் சதாயு ஒருநாள் வேட்டையாடும் போது சிங்கம் ஒன்றின் மீது அம்பை விட அது வெகுவேகமாக ஓட அதைக் கண்ட காமதேனு பயந்து ஓடியது. அப்போது, அதன் குளம்பு ஈசனின் தலையிலும் மார்பிலும் பட்டது. அந்தக் காலடித் தடங்களை இன்றும் காணலாம்.

அகத்திய முனிவர் இங்கு வந்து 108 சிவலிங்கங்களை ஸ்தாபித்தார். அவை பிரதான மண்டபத்தில் உள்ளன.

பிரதான ஈஸ்வரரான மருந்தீஸ்வரர் ஸ்வயம்பு லிங்கமாய் சுமார் ஒன்றரை அடி உயரத்துடன் அழகிய காட்சியை அருள்கிறார்.

இங்குள்ள அம்பிகை நான்கு கரங்களுடன் சுவாமிக்குப் பின்புறமாக தெற்கு நோக்கி இருந்து காட்சி தருகிறாள். விநாயகரும், முருகனும் கிழக்கு நோக்கி உள்ளனர். இங்குள்ள கோஷ்டத்தில் உள்ள கடவுளரின் வரிசையும் மாறி உள்ளது. இங்கு காவலுக்கு திண்டி-முண்டி ஆகியோர் உள்ளனர்.

சிவபிரானின் தலையிலிருந்து தெறித்த ஐந்து நீர்த் துளிகள் ஜன்ம நாசினி, காம நாசினி, பாப நாசினி, ஞான தாயினி,  மோக்ஷ தாயினி ஆகிய ஐந்து தீர்த்தங்களாயின. கிழக்கு வாயிலில் உள்ள ஜன்மநாசினி இந்திரனின் பாவத்தைப் போக்கியது. இது சித்திரைக் குளம் என்ற பெயருடன் இன்று விளங்குகிறது.மடப்பள்ளியில் உள்ள கிணறாக உள்ள காமநாசினி சந்திரன் தன் ஒளியைத் திரும்பிப் பெறச் செய்த தீர்த்தமாகும்.

மடப்பள்ளி கிணறு மோக்ஷதாயினி என்றும் அறியப்படுகிறது. பாபநாசினி என்பது கோவிலின் கிழக்கு கோபுரத்தின் அருகே உள்ள குளமாகும். ஞானதாயினி தீர்த்தம் இப்போது இல்லை.

ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் இரண்டு ஐந்து நிலை கோபுரங்களைக் கொண்டுள்ளது.

இந்தக் கோவிலின் பிரதான மண்டபம் 51 தூண்களுடன் அமைந்துள்ளது. தியாகராஜ மண்டபம் மூன்று வரிசையில் பத்துத் தூண்களுடனும் இன்னொரு நான்கு தூண்கள் கடைசியிலும் அமைந்திருக்க 34 தூண்களுடன் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு ஸோமாஸ்கந்தர் சிலை உள்ளது. சுப்ரமண்யர், விநாயகர்,கஜலக்ஷ்மி, தன்வந்திரி, சரபேஸ்வரர், நரசிம்மர், உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் இங்கு உள்ளன.

அம்மன் சந்நிதியில் உள்ள பிரதான மண்டபத்தின் மேற்கூரையில் பல்வேறு அழகிய சித்திர வேலைப்பாடுகள் உள்ளன.

 இங்கு மருந்தீஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் மிக அருகில் வால்மீகி முனிவருக்கான ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்தக் கோவில்.

இத்தலத்தில் திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர். சேக்கிழார், அருணகிரிநாதர், வண்ணசரபம் தண்டபாணி ஸ்வாமிகள், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் உள்ளிட்ட பல தெய்வீக மகான்கள் இத்தலத்தைப் பற்றிப் பாடல்கள் புனைந்துள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரரும் அன்னை திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment