ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 9-2-2025 (Post.14,189)

Written by London Swaminathan

Post No. 14,189

Date uploaded in Sydney, Australia – 10 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-2-2025 (Post.14,189)

collected from popular dailies and edited for broadcast.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ;  பிப்ரவரி 9- ஆம் தேதி தேதி ; 2025-ம் ஆண்டு

முதலில் மஹா கும்பமேளா செய்திகள்

கும்பமேளாவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

மகாகும்பமேளா  விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அத்துடன் நதியில் நின்றவாறு ருத்ராட்ச மாலையை கையில் வைத்தபடி மந்திரங்கள் சொல்லியும் அவர் வழிபட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம்,மகாகும்ப நகரில் நடைபெற்று வரும் உலகளவில் புகழ்பெற்ற மகாகும்பமேளா      விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகில் புறப்பட்டார்.

அங்கு கங்கா,யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கத்தில் புனித நீராடினார். அதனைத் தொடர்ந்து நதியில் நின்றவாறு கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தியபடி, கண்களை மூடி மந்திரங்கள் ஜெபித்தப்படி சில நிமிடங்கள் அவர் வழிபட்டார். மாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினத்தில் கங்கையில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்

முன்னதாக, கங்கையில் புனித நீராட வந்த பிரதமர் மோடியை, அரளி கரைப் பகுதியில் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் கும்பமேளாவுக்கு வந்து சித்தானந்த் சரஸ்வதி சுவாமிகளை  சந்தித்து ஆசிபெற்றார்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா இந்த ஆண்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி (ஜன.13) தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

*****

மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 42 கோடி பக்தர்கள் இதுவரை மகாகும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியுள்ளதாக, உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது

வசந்த பஞ்சமி நாளில் 5 கோடி பேர் புனித நீராடல்

வசந்த பஞ்சமி தினத்தில் மட்டும், ஐந்து கோடி பேர் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து நாட்களிலும், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர். அதே நேரத்தில், சில முக்கிய நாட்களில், அகாராக்கள் எனப்படும் பல மடங்களைச் சேர்ந்தவர்கள், ‘அமிர்த ஸ்னான்’ எனப்படும் புண்ணிய நீராடுவர்.

இந்த நாட்களில், மடாதிபதிகள், சன்னியாசிகள், துறவிகள் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர். முன்னதாக, நாகா சாதுக்கள் புடைசூழ இவர்கள் பேரணியாக, திரிவேணி சங்கமத்துக்கு வருவர்.அதிகாலை 4:00 மணிக்கு புண்ணிய நீராடல் துவங்கியது. ஒவ்வொரு அகாராவுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பேரணியாக வந்து, அந்தந்த அகாராவைச் சேர்ந்தவர்கள் புண்ணிய   நீராடினர்.

இதற்கடுத்து, பிப்ரவரி  12ம் தேதி  பவுர்ணமி, 26ம் தேதி மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில், அமிர்த ஸ்னான் நிகழ்ச்சிகள் நடக்கும்.

.பூடான் மன்னர்

 பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு ‘அர்க்யம் ‘ கொடுத்தார் .

திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.10ம் தேதி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*****

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை

புதுடில்லி: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஸ்ரீ சனாதன தர்ம கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கூறி தன் உரையை தொடங்கினார்.

இந்த விழாவில், இந்தோனேசியா அதிபர் பிரபோ சுபியன்டோ, முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹாசிம், நிர்வாக கமிட்டி தலைவர் டாக்டர் கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடி பேசுகையில், ”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு, வெறும் புவி அரசியல் தொடர்பானது மட்டும் அல்ல. பல்லாயிரம் ஆண்டு காலமாக நீடிக்கும் கலாசாரத்தின் அடிப்படையிலானது. அதன் தொடர்ச்சியாகவே இந்த விழா நடக்கிறது.இந்த தொடர்பானது, முருகக்கடவுள், பகவான் ராமர், பகவான் புத்தரை உள்ளடக்கியது. இந்தியாவில் இருந்து யார் இந்தோனேசியா பிரம்பனம் கோவில் வந்தாலும், அவர்கள் காசி, கேதார்நாத் வந்ததை போலவே ஆன்மிக உணர்வு பெறுவர்,” என்றார். 

******

ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதி: ஹிந்து அல்லாத மத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, 18 ஊழியர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது

திருப்பதி தேவஸ்தான வாரியம், ஹிந்து ஊழியர்கள் மட்டுமே இங்க பணியாற்ற முடியும் என்று முன்பு கூறியிருந்தது. இவ்வாறு இருந்த போதிலும், இந்த 18 ஊழியர்கள் ஹிந்து அல்லாத மரபுகளைப் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் வாரியத்தின் தீர்மானத்தின்படி, கோவில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள இந்த 18 பேர், தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.ஊழியர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகளுக்கு மாற்றுதல் அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய வாய்ப்புகள் வழங்கப்படும்.

1989ம் ஆண்டு அறக்கட்டளைச் சட்டத்தின்படி, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஹிந்து பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தலைவரும் தேவஸ்தான வாரிய உறுப்பினருமான பானு பிரகாஷ் ரெட்டி இந்த நடவடிக்கையை ஆதரித்தார்.

*****

காசியில் அன்னப்பூர்ணேஸ்வரி கும்பாபிஷேகம்

ஸ்ரீ சாரதா பீடாதீஸ்வர சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார்  ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் நல்லாசியுடன்  ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள்  வாரணாசியில் சங்கர மடத்தில் உள்ள  பகவதி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கும்பாபிஷேகத்தை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தி வைத்தார். முன்னதாக உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில்,  சிருங்கேரி சங்கராச்சாரியார்  ஜனவரி 24 முதல் 31 வரை கும்பமேளாவில் பங்கேற்று  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சங்கர மடத்தில், ஆயுத மோதக கணபதி ஹோமம், சஹஸ்ரசண்டி மஹா யஜ்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மஹாருத்ர மஹாயஜ்ஞம், சதுர்வேத பாராயணம், மற்றும் லோக கல்யாண பாராயணம் உட்பட பல பூஜைகளும் நடந்தன. நாடு முழுவதிலும் இருந்து, 485 வேத பண்டிதர்கள் பங்கேற்றனர்.

****

ஆதியோகி ரத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.ஆதியோகி ரதம் பிப்.3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது.

தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.” 

*****

இந்து முன்னணி தலைவர் கைது

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தடையை  மீறி நுழைய முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள்   கைது செய்யப்பட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போடப்பட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை: பிப். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

******

முருகன் தலங்களில் தைப்பூச விழா

இந்த ஆண்டில், தைப்பூசம் பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.

இந்த நாளில் முருக  பக்தர்கள் விரதமிருந்து    முருகப் பெருமானை வழிபடுகிறார்கள் .

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிமலை கோவிலில். இந்த திருவிழாவுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதனை சுற்றியுள்ள செட்டிநாட்டு நகரத்தார்கள், 425 வது ஆண்டாக 329 காவடிகள் சுமந்து பாதயாத்திரையாக குன்றக்குடி வந்தடைந்தனர்.

அங்கிருந்து கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி வழியாக சுமார் 180 கிலோ மீட்டர் கடந்து வரும் 10ஆம் தேதி பழனி சென்றடைவர். வரும் 13ஆம் தேதி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அதன் பின் அனைத்து நகரத்தார்களும் பழனியிலிருந்து பாதையாத்திரையாகவே சொந்த ஊர் திரும்புகின்றனர்.

இதே போல மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள்  43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள பத்து கேவ்ஸ் ,சிங்கப்பூரில்  ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில்,

இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள்

,தென்னாப்ரிக்கா,  மொரீஷியஸ் , செஷெல்ஸ், பிஜி நாடுகளில் உள்ள கோவில்களில்   தைப்பூசம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

****

பிப்ரவரி 10 பள்ளிகல்லூரிகள் விடுமுறை… நாகை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அதேசமயம் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும். இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலின் மூலவர் காயாரோகணேசுவரர். இதில் சிவன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். .

*****

நிம்மதி கிடைத்ததுஆன்மிக அனுபவத்தை மனம் உருகி பகிர்ந்தார்  ரஜினி!

தியானம் செய்வதன் மூலம் கிடைத்த மன அமைதி, நிம்மதி குறித்து நடிகர் ரஜினி காந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். நான் இப்போது ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா (Y.s.s) ஆசிரமத்தில் இருக்கிறேன். இந்த ஆசிரமத்திற்கு மூன்றாவது முறையாக வந்துள்ளேன். முதலாவதாக 2002ம் ஆண்டு வந்தேன். இரண்டாவது முறையாக வந்த போது கூட இவ்வளவு அமைதியை நான் பார்க்கவில்லை.

தற்போது, இரண்டு நாட்கள் தங்கி இருந்து, நிறைய நேரம் ஆசிரமத்தை முழுவதுமாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் ரொம்ப சிறப்பு குருவின் அறையில் உட்கார்ந்து தியானம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. நேற்று காலை தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. தியானம் செய்த ஒரு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. அந்த அதிர்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்பொழுது என்னை பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பார்த்தாலே ‘பாசிடிவ் வைப்’ வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதன் சீக்ரெட் வந்து, நான் தியானம் செய்து கொண்டு இருப்பது தான். நான் தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனை எவ்வாறு சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அது ஒரு விதமான அமைதி. 2002ம் ஆண்டு தியானம் செய்ய ஆரம்பித்தேன். இப்பொழுது 21 வருடங்கள் கழிந்து விட்டன. தினமும் செய்து கொண்டே இருந்தேன். முதலில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் ஒழுக்கமாக தினமும் தியானம் செய்து கொண்டே இருந்தேன். சில நேரங்களில் எனக்கு டவுட் வரும்.

என்னடா இவ்வளவு தியானம் செய்கிறோம் ஒரு மாற்றமும் நிகழவில்லையே என்று சந்தேகம் வந்தது. சரி இருந்தாலும் ஓகே என்று தியானம் செய்து கொண்டே இருந்தேன். இதன் பிறகு 10 முதல் 12 வருடங்களுக்குப் பிறகு எனக்கு மாற்றங்கள் தெரிந்தது. இதனுடைய தாக்கம் தெரியவந்தது. அது எனக்குள்ளே ஒரு மாதிரியான நிம்மதி, எப்போதுமே அமைதி ( peace). இதனால் கஷ்டப்படாமலே பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த குருக்கள் ஒருமுறை நமது கையைப் பிடித்து விட்டால், நாம் தாமாக விட்டு விட்டால் கூட அவர்கள் விடமாட்டார்கள். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

பிப்ரவரி 16 – ம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம்.

—SUBHAM—

Tags-ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல்,  9-2-2025

Leave a comment

Leave a comment