WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,191
Date uploaded in Sydney, Australia – –10 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
9-2-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழ் பாடல்களை உலகெங்கும் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகளைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
வள்ளிமலை ஸ்வாமிகள் 1870ம் ஆண்டு கோவை மாவட்டம் பூனாச்சி புதூரில் பிறந்தார். குழந்தைக்கு அர்த்தநாரி என்று பெற்றோர் பெயரிட்டனர்.
இளமையிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. குழந்தைகளும் பிறந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனைவியும் குழந்தைகளும் இறந்தனர். இன்னொரு திருமணமும் நடைபெற்றது. ஆனால் அந்த மனைவியும் அவர் பெற்றெடுத்த குழந்தைகளும் கூட இறந்தன.
இதனால் மனம் நொந்தார் அர்த்தநாரி.
மைசூர் அரண்மனையில் அவர் வேலை பார்க்க ஆரம்பித்தார். அப்போது தீராத வயிற்றுவலி அவரைப் பீடித்து ஆட்டியது. இதனால் பல வைத்தியங்களை அவர் மேற்கொண்டார். ஆனால் பலன் ஒன்றும் இல்லை.
ஒரு நாள், கூட இருந்த அரண்மனைப் பணியாள் ஒருவன், அவரிடம், “நீங்கள் ஏன் பழநி சென்று முருகப் பெருமானைத் தரிசிக்கக் கூடாது? அவர் அனைத்து நோயையும் தீர்ப்பவர் ஆயிற்றே! ” என்று கூறினான்.
உடனே அர்த்தநாரி பழநி சென்று அங்கேயே இருந்து அபிஷேகத்திற்குத் தீர்த்தம் கொண்டுவருவது உள்ளிட்ட சேவைப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். விரதம் மேற்கொண்டார். அதன் பலனாக அவரது தீராத நோய் தீர்ந்தது.
அங்குள்ள உற்சவ காலத்தில் ஒருநாள் தேவதாசி ஒருத்தி திருப்புகழ் பாடல் ஒன்றைப் பாடினாள்.
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலை குழலாரமொடு தோள் புரள
வண்காதிலோலை கதிர் போலவொளி வீச இதழ் மலர்போல\
என்று தொடங்கும் அந்தப் பாடலைக் கேட்ட அர்த்தநாரி மனம் உருகினார்.
சிங்கார ரூப மயில் வாகந!\ நமோ நமென
சுந்தா குமார சிவ தேசிக! நமோ நமென
ஸிந்தூர பார்வதி ஸுதாகர நமோநமென விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவ நமோநமென
கங்காள வேணிகுருவானவ நமோநமென
திண்சூரராழி மலை தூள்படவை வேலை விடு முருகோனே
(திருப்புகழ் பாடல் 823)
இந்தப் பாடலைக் கேட்ட அர்த்தநாரி திருப்புகழின் பால் பெரிதும் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு அங்கிருந்த சிறுவன் ஒருவன் தமிழைக் கற்றுக் கொடுக்க முன் வந்தான். அவன் மூலம் தமிழை நன்கு கற்ற அவர் திருப்புகழ் பாடல்கள் அனைத்தையும் ஓதலானார்.
இனிமையான குரலில் அழகான ராகங்களுடன் அவர் திருப்புகழ் பாடல்களைப் பாட, அதை கேட்க மக்கள் பெரும் திரளாகக் கூடலாயினர். திருப்புகழைக் கேட்டு இன்புற்றனர்.
அப்போது அவருக்கு வயது 42.
தெய்வ பக்தியில் ஊறித் திளைத்த அர்த்தநாரி தலம் தலமாகச் சென்று இறைவனை வழிபடலானார்.
24-12-1912 அன்று அவர் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
அங்கு பகவான் ரமண மஹரிஷியை தர்சனம் செய்தார்.
மஹரிஷி அவரை ஒரு கணம் பார்த்தார். அவ்வளவு தான், அர்த்தநாரி மெய்மறந்தார்.
அங்கேயே ரமணருக்குப் பணிவிடைகளைச் செய்யலானார் அவர்.
திருப்புகழ் பாடல்களை அவர் முன் பாடியவாறு இருந்தார்.
ஒருநாள் ரமணமஹரிஷி , “மலையை விட்டு இறங்கிக் கீழே போ” என்றார்.
‘ஒரு தவறும் செய்யவில்லையே,ஏன் மஹரிஷி நம்மை மலையை விட்டுக் கீழே இறங்கச் சொல்கிறார்’ என்று எண்ணிய அவர் மஹரிஷியின் கட்டளையின் படி கீழே இறங்கலானார்.
அங்கே வழியில் பெரும் அருளாளரான சேஷாத்ரி ஸ்வாமிகள் எதிரில் வந்து அவரை ஆட்கொண்டார்.
ஆதி சங்கரரின் சிவமாநஸ பூஜா ஸ்தோத்ரத்தில் நான்காவது ஸ்லோகத்தைக் கூறிய ஸ்வாமிகள் அதனுடைய அர்த்தத்தை விளக்கினார். பின்னர் இதே போல அர்த்தம் தரும் திருப்புகழ் பாடல் உள்ளதா என்று கேட்டார்.
உடனே அர்த்தநாரி, “எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவநாதீத மருள்வாயே (அமல வாயு எனத் தொடங்கும் பாடல் எண் 1283) என்ற திருப்புகழ் பாடலை எடுத்துக் கூறினார்.
இதனால் மகிழ்ந்த சேஷாத்ரி ஸ்வாமிகள், “திருப்புகழே மகாமந்திரம். அதுவே உனக்குப் போதுமானது. வள்ளிமலை சென்று அங்கு தவத்தைச் செய்” என்று கூறி அருளினார்.
அப்போது தான் அர்த்தநாரிக்கு ரமண மஹரிஷி தன்னை ஏன் கீழே போகச் சொன்னார் என்பது புரிந்தது.
இரு பெரும் மகான்களின் ஆசியைப் பெற்ற அவர் நேராக வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு பர்வதராஜன் குன்று என்ற இடத்தைத் தனது தவத்திற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தார்.
அன்று முதல் அவர் பெயர் வள்ளிமலை ஸ்வாமிகள் என்று ஆயிற்று.
வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் வள்ளிமலை என்று அழைக்கப்படும் இந்த அழகிய குன்று வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள இடமாகும்.
பல சித்தர்கள் வாழ்ந்த சித்தர் மலையான வள்ளிமலையில் நிறைய சுனைகளும் குகைகளும் உண்டு. இங்குள்ள கோவிலில் முருகன் வள்ளி தெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார். கோவிலுக்குப் பின்புறம் சரவணப் பொய்கை என்ற குளம் உள்ளது.
இங்கு வள்ளி மஞ்சள் அரைத்த பாறையும் முருகன் மரமாய்த் தோன்றிய இடமும் உள்ளன.
இங்கு சூரியன் காணாச் சுனை என்று ஒரு சுனை உள்ளது. இதில் சூரியனின் கிரணங்களே படாது என்பது ஒரு அதிசயம். இந்த இடத்தில் தான் வள்ளியிடம் முருகன் தேனும் தினைமாவும் கேட்டுப் பெற்றாராம். அவருக்கு விக்கல் ஏற்பட, சூரிய ஒளி படாத நீர் வேண்டும் என்று கேட்க இந்த சுனை நீர் தான் தரப்பட்டதாம். அவர் விக்கலும் நின்றாதாம். இந்த தீர்த்தம் புனிதமானது என்பதால் அனைவரும் இந்த தீர்த்தத்தை எடுத்துத் தலையில் தெளித்துக் கொள்கின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவனை தந்து அருளுமாறு முருகனை இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
**