Post No. 14,193
Date uploaded in Sydney, Australia – –11 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
9-2-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 2
1916ம் ஆண்டு முதல் 1929ம் ஆண்டு வரை வள்ளிமலை ஸ்வாமிகள் இந்த இடத்திலும் சென்னையிலுமாக மாறி மாறி வசிக்கலானார்; திருப்புகழைப் பரப்பும் தொண்டை மேற்கொண்டார்.
ஸ்வாமிகளுக்கு பொங்கி அம்மனின் தரிசனமும் அருளும் இந்தக் காலத்தில் கிடைத்தது.
சென்னையில் ஒரு சிறுமி ஸ்வாமிகளின் வெற்றிலைப் பெட்டியைக் கேட்க அவர் அதைத் தந்தார். ஆனால் அதைத் திருப்பி வாங்க மறந்து விட்டார். பின்னர் வள்ளிமலைக்கு அவர் வந்த போது ஒரு பாறையின் மேல் அவரது வெற்றிலைப் பெட்டி இருந்தது. அதிசயித்த அவர், யார் இப்படிச் செய்தது என்று நினைத்தார். “நான் தான் பொங்கி அம்மன்” என்று அசரீரியாக பதில் கிடைத்தது.
வள்ளிமலையில் ஒரு சிறுமி ஆடிப்பாடி இருப்பதைக் கண்ட வள்ளிமலை ஸ்வாமிகள் அந்த சிறுமியிடம்,, “நீ யார்?” என்று கேட்க, “நான் யார் என்பது ஒரு புறம் இருக்கட்டும், எனது பாட்டால் உனது உள்ளம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது இல்லையா?” என்று அவள் கேட்டாள். அன்று முதல் ராக தாளத்துடன் திருப்புகழைப் பாட ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.
தனக்கு சிறுமி வடிவில் தரிசனம் தந்த பொங்கி அம்மனுக்கு அவர் வள்ளி என்ற பெயரைத் தந்தார். அங்குள்ள பாறையில் பொங்கியைப் பிரதிஷ்டை செய்தார். அது பொங்கிப் பாறை என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது.
அந்தக் காலத்தில் ஆங்கில முறைப்படி புத்தாண்டு தொடங்கும் தினமான ஜனவரி முதல் தேதியன்று அதிகாரிகளை சந்திப்பது அவர்களின் கீழ் வேலை பார்ப்பவர்களின் வழக்கமாக இருந்தது.
இதைக் கண்ணுற்ற ஸ்வாமிகள் முருகனை அல்லவா தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார்.
1917 டிசம்பர் 31ம் தேதியன்று திருத்தணி படிகளில் ஆறு பேருடன் முருகனின் புகழ் பாடியவாறே ஏறலானார். 1918 ஜனவரி முதல் தேதியன்று இப்படிப் படித் திருப்புகழ் என்னும் ஒரு புதிய வழக்கத்தை ஸ்வாமிகள் தொடங்கி வைத்தார்.
இன்று அது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படியேறி முருகனைத் துதிக்கும் வழக்கமாக, பெரிய திருவிழாவாகவே ஆகி விட்டது.
வள்ளிமலை ஸ்வாமிகள் திருப்புகழைப் பரப்ப பல நூல்களைத் தொகுத்து அருளினார்.
இரண்டாம் உலக மஹா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் பல நாடுகளின் மீது குண்டுகளை வீசின. அப்போது இந்தியாவிலும் மக்கள் யுத்த பீதியால் பயந்தனர். அதைப் போக்க திருப்புகழ்ப் பாராயண குண்டு என்று ஒரு நூலைத் தொகுத்து 1942 ஜனவரியில் வெளியிட்டார்.
‘இத் திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்க வல்ல பேராற்றல் வாய்ந்த எதிர்குண்டு.
சூர சம்ஹார காலத்தும் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால் போர்க்களத்திலும் மற்றும் எவ்விடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் சுகம் பெறலாம்” என்றார் அவர்.
அடுத்து 1944, ஜனவரியில் அநுஷ்டானத் திருப்புகழ் என்னும் ஒரு நூலைத் தொகுத்து அவர் வெளியிட்டார். காலையில் படுக்கையை விட்டு எழும் போது சொல்ல வேண்டியது, நீராடல், திருநீறிடல், உணவுண்ணல், வழிநடை,செல்லல், தனிவழி நடத்தல், தும்மல், நோய் நீக்கம் வேண்டல், இஷ்ட காரிய சித்தி வேண்டல், படுக்கைக்குச் செல்லல் முதலிய காலங்களில் ஓத வேண்டிய திருப்புகழ் பாடல்களைப் பட்டியலிட்டு அநுஷ்டானத் திருப்புகழாக அதை அளித்தார்.
அடுத்து மெய்க்காவல் எனப்படும் வேல்மாறல் என்ற தொகுப்பை அவர் அருளினார். இதில் அருணகிரிநாதர் பாடிய வேல் வகுப்பின் 16 அடிகளை முன்னும் பின்னுமாகவும் மேலும் கீழுமாகவும் மாற்றி அமைத்து 64 அடிகளாக ஆக்கி அதற்கு வேல் மாறல் என்ற பெயரைத் தந்தருளினார்.
ஸ்வாமிகள் பசுக்களை பூஜிப்பதில் மிகவும் விருப்பம் உள்ளவர். தினமும் காலை, மாலை வேளைகளில் பசுக்களைப் பூஜிப்பதற்காக உள்ள பாடல்களைத் தொகுத்து ‘திருப்புகழ்க் கோ பூஜை என்று அதற்குப் பெயரிட்டு ஒரு நூலை 1946 ஜனவரியில் அவர் வெளியிட்டார்.
வள்ளியை ஜீவாத்மாவாகவும் முருகனை பரமாத்மாவாகவும் வள்ளியானவள் முருகனை திருமணம் செய்தலையே ஜீவ- பிரம்ம ஐக்கியமாகவும் வைத்து ‘திருப்புகழ் ஞான ஸச்சிதானந்த வல்லி சரிதம்’ என்ற ஒரு நாடக வடிவிலான நூலை 1935க்கு முன்னமேயே ஸ்வாமிகள் எழுதினார்.
இந்த வள்ளி திருமண கதாகாலக்ஷேபத்தை 10 நாட்கள் மற்றும் 16 நாட்கள் என்ற அளவில் விரித்து அனைவரும் ரசிக்கும் படி அவர் உரையாற்றியுள்ளார்.
திருப்புகழுக்கு ராக, தாளங்களையும் ஸ்வாமிகள் அமைத்தார்.
ஸ்வாமிகளின் இடைவிடாத முயற்சியால் ஆங்காங்கே திருப்புகழ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
4-1-1929 அன்று ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். அப்போது வள்ளிமலை ஸ்வாமிகள் அங்கு சென்று சமாதி காரியங்களில் கலந்து கொண்டார்.
அடுத்து 14-4-1950ல் பகவான் ரமண மஹரிஷி சமாதி அடைந்தார். தன் இரு குருமார்களான சேஷாத்ரி ஸ்வாமிகள் மற்றும் ரமணர் சமாதி அடைந்த பின்னர் ஸ்வாமிகளும் தனது தேகத்தை விடுக்க எண்ணினார்.
வள்ளிமலையிலிருந்து கீழிறங்கி வந்த அன்பரிடம் கார்த்திகை – கார்த்திகை என்று ஸ்வாமிகள் கூறினார். அதன்படியே கார்த்திகை மாதம் கார்த்திகை தினத்தன்று அவர் சமாதி அடைந்தார்.
22-11-1950ல் அவர் இறைவனுடன் கலந்தார்.
வள்ளிமலையில் எந்த குகையில் அதிக காலம் தங்கி தவம் புரிந்து திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்தாரோ அதே குகையில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது.
அவரது சமாதி தினம் குருபூஜை நாளாக அன்பர்கள் அனைவராலும் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
என்று முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு என் உரையை முடிக்கிறேன்.
வள்ளிமலை ஸ்வாமிகள் அடி போற்றி!
**
tags-ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 2