விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-1 ; சீதக் களபச் செந்தாமரைப்பூம் (Post No.14,200)

Written by London Swaminathan

Post No. 14,200

Date uploaded in Sydney, Australia – 13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

***

விநாயகர் அகவல் துதியில் எத்தனை வரிகள் உள்ளன ?

72 வரிகள் உள்ளன .

****

இந்தத் துதியைப் பாடியவர் யார் ?

அவ்வையார் .

****

எந்தக் காலத்தில் பாடினார் ?

ஆறு அவ்வையார்களில் கடைசியாக வந்த ஆறாவது அவ்வையார் பாடினார்; தமிழ் நடையிலிருந்தும், ஸம்ஸ்க்ருதச் சொற் பிரயோகத்திலிருந்தும், யோக ரகசிய விளக்கத்திலிருந்தும் இவர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று துணியலாம்.

****

இது பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894- 1994) என்ன சொன்னார் ?

இதைப் படிக்கப் படிக்க உங்களுக்கே பொருள் விளங்கும் என்று சொன்னார்

அதாவது இதற்கு எத்தனை விளக்க உரைகள் இருந்தாலும் தினமும் அதிகாலையில் படித்துக் கொண்டே வந்தால் இதன் உண்மைப்பொருள் விளங்கும் .

****

இந்தத் துதியை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம் ?

1.பிள்ளையாரின் — கணபதியின்– விநாயகரின் — தோற்றம்  – முதல் 15 வரிகள் .

2.எனக்கு வேண்டியது என்ன —அடுத்த 15 வரிகள்

3.குண்டலினி முதலிய யோக விஷயங்கள் – வரி 55 வரை

4.பலன் என்ன —  கடைசி 17 வரிகள்.

****

முதல் இரண்டு வரிகளில் பாதச் சிலம்பு பற்றி ஏன் பாடினார் ?

இந்துக்களுக்கு ஒரு விதி உண்டு ; இதை ஸம்ஸ்க்ருத  , தமிழ்ப் புலவர்கள் பாடல்களில் காணலாம் ; பெண்களைப் பாடுகையில் முடி முதல் அடி வரை பாட வேண்டும் ; இறைவனைப் பாடுகையில் அடி முதல் முடி வரை பாட வேண்டும் ; அதாவது பெண்களின் கூந்தல் அழகினை வருணித்து விட்டு கால்களில் அணிந்த ஆபரணங்கள், அவளது அன்ன நடை பற்றிச் சொல்லலாம்.

இறைவனைப் பாடுகையில் முதலில் பாதங்களையே பாட வேண்டும் அவரது கண்களின் பார்வையை நாம் தாங்க முடியாது ; அதன் வீரியத்தைக் குறைத்து கடைக் கண்களால் மட்டுமே அவர் நம்மைக்  காண வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோளாக இருக்க வேண்டும்.

ஒருவரை இந்துவா அல்லது பிற மதத்தினரா என்பதைக் கண்டுபிடிக்க இது உதவும்.

தமிழ்ப் புலவன் திருவள்ளுவன் ‘பக்கா’ இந்து ; அதனால் முதலில்  கடவுள் வாழ்த்துப் பாடினான்; புத்தர்களும், சமணர்களும் கடவுள் பற்றிப் பேசவில்லை  ; முதல் பத்து குறள்களில் ஏழு குறள்களில் பாதம் பற்றிப் பாடினான் வள்ளுவன் ; இதனால் அவனைத் தீவிர இந்து என்று அறிகிறோம்; அவனைப் பின்பற்றி அவ்வையும் பாதச்  சிலம்பு பற்றிப் பாடினார். இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத மதக் கடவுளருக்கு உருவம் கிடையாது.

****

மேலும் இறைவனின் கால் பட்டால் முக்தி கிடைக்கும் ; அது விதியை வெல்ல உதவும் என்று அருணகிரி நாதரும் பகர்ந்தார்

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.–கந்தரலங்காரம்-40

(சேல் என்னும் மீன்கள் துள்ளித் திரிந்ததால், செந்தூர் வயல் பொழில்கள் அழிந்தன; தேன் கடம்ப மரத்தின் மலர்கள் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனங்கள்; மா மயில் வாகனனின் வேலாயுதம் பட்டு அழிந்தது வேல் என்னும் கடலும் சூரனும் வெற்பு என்னும் மலையும்; அவனின் கால் என்னும் திருவடிகள் என் தலைமீது பட்டு அழிந்தது, அயன் என்னும் பிரம்மன் எனக்கு எழுதிய என் தலையெழுத்து).

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி

வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே—அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  – 70

****

களபம் என்றால் என்ன?

குட்டி யானைக்கும் வாசனை மிகுந்த குளிர்ச்சி தரும் கலவைக்கும் களபம் என்று பொருள் ; அதனால் அவ்வையார், சீத/ குளிர்ச்சிமிக்க களபம் என்று அகவலைத் தொடங்குகிறார்

சீத+ உஷ்ணம் = சீதோஷ்ணம் ஸம்ஸ்க்ருதச் சொல் .

அவ்வையார் ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் அகவலைத் துவங்கியதைக் கவனிக்கவேண்டும் ஆனால் வள்ளுவனும் திருக்குறளை ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் துவங்கி ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் நூலை முடிப்பதையும் நாம் காண்கிறோம். இது ஒரு குற்றமில்லை. நூலின் சிறப்பினை உயர்த்த வள்ளுவனும் அவ்வையும் கண்ட உத்தி!

*****

திருப்புகழில் களபம்

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய

     பவனி வரும்படி …… யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய

     இருளை விடிந்தது …… நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது

     வரிசை தரும்பத …… மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு

     மகிழ வரங்களு …… மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி

     அடியர் பணிந்திட …… மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத

     குறமக ளிங்கித …… மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும

     களபம ணிந்திடு …… மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி

     யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.

****

களபம் ஒழுகிய புளகித முலையினர்

     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்

          கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்

     பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு

          தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடிப்…….

இது போல நிறைய பாடல்களில் காணலாம்………..

முதல் இரண்டு வரிகளைக் கண்டோம் ; மேலும் காண்போம் .

தொடரும்…………………

Tags- விநாயகர் அகவல், ஆராய்ச்சிக் கட்டுரை-1, சீதக் களபச் செந்தாமரைப்பூம் 

Leave a comment

Leave a comment