
Written by London Swaminathan
Post No. 14,207
Date uploaded in Sydney, Australia – 15 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை–3
மூஷிக வாகனம் ஏன்?
எலி என்பது மனிதனின் ஆசைகளையும் புலன் இன்ப வேட்கையையும் குறிக்கும். அதைக் கட்டுப்படுத்த வல்லவர் விநாயகர் ; வீடுகளில் எலியைக் கண்டோருக்கு அதன் ஆசையும் இனப்பெருக்க வேகமும் நன்றாகவே விளங்கும். கணபதியை வணங்குவோருக்கு அந்தக் கட்டுப்பாடு வரும். ஏனெனில் கணபதி ஆஞ்சனேயரைப் போலவே பிரம்மச்சாரி. தெற்கிலும், வடக்கிலும் பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் மனைவியராகக் காட்டுவது அவர்களின் சக்தி ரூபம்; உண்மையில் மனைவியர் இல்லை ஆகவே பிரம்மசாரி கடவுளை வணங்குவோருக்கு ஆசை மீது கடிவாளம் போட முடியும் என்பதைக் காட்டவே அவர் எலி வாகனதாரியாக நம்மிடையே காட்சி தருகிறார். எலி என்பது நம்முடைய அஹம்காரத்தைக் குறிக்கும் என்று ஒரு விளக்கமும் உண்டு
அஹங்காரம் , மம காரம் இரண்டையும் கட்டுப்படுத்துவோர் சொர்கத்துக்குப் போகமுடியும் என்று வான்புகழ் வள்ளுவனும் தேன் இனிய தமிழில் செப்புகிறான்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்– (அதிகாரம்: துறவு குறள் எண்:346)
யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை நீக்கியவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்வான்.
இன்னும் ஒரு விளக்கம் – எலியைப் போல அவர் எங்கும் செல்வார் ; அவர் இல்லாத இடம் OMNIPRESENT இல்லை; இது எல்லாக் கடவுளருக்கும் பொருந்தும் .
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
மூஷிக = எலி , மூஞ்சூறு
முப்பழம் = மா, பலா, வாழை ; இது தமிழருக்கே உரித்தான வசனம். ஏனெனில் இவை தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டலத்தில் வளரும் மரங்கள்; பழங்கள். முத்தமிழ் போன்று இனிமையானவை ; இவை விநாயகரின் கை நிறைய இருப்பதை திருப்புகழில் பாடுகிறோம்; அருணகிரிநாதரும் கைத்தல நிறை கனி என்று பாடி பிள்ளையார் துதியைத் துவக்குகிறார்.
****
சொற்பதம் கடந்த – இது உபநிஷத வாக்கியம் ; வேத்தின் ஞான காண்டம் உபநிஷத் என்னும் பகுதி; அவைகளில் வெறும் சடங்குகளினாலோ துதிகளாலோ மட்டும் இறைவனை அடைய முடியாது; அவைகள் படிக்கட்டுகள்தான்; ஏணிதான் ; அதை பயன்படுத்தி மேல் நிலைக்குச் சென்றால் சொற்கள் அடங்கிவிடும்; பேசா அனுபூதி பிறந்து விடும்; ஏனெனில் அவனைக் கண்டவர் விண்டிலர்;அப்ரமேயம் என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லும்; பகவத் கீதையில் விஷ்வ ரூப தரிசனம் இதை உணர்த்தும் ஆகையால் இறைவனை சொற்களால் வருணிக்க இயலாது ; இதை அவ்வையார் அழகாக சொற்பதம் கடந்த என்று சொல்லிவிட்டார் வக்ர துண்டம்/ வளைந்த துதிக்கை மூலம் நமக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கணேசன் நினைவு படுத்துவதால் துரியமெய்ஞ் ஞான அற்புதம் என்கிறார் அவ்வை.
நூலறிவால் இறைவனை அடைய முடியாது; நுண்ணறிவினாலேயே அவனை அடையமுடியும் ; இதை அருணகிரிநாதரும் புகல்கிறார்.
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாததுநெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாததுவிந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானதுகண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதுமயங்கலாமோ– திருப்புகழ்
அபிராமி பட்டரும் இதையே மொழிகிறார்
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே- பாடல் 87, அபிராமி அந்தாதி
*****

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
அவ்வையாரின் இந்த வரிகளில் மாணிக்க வாசகரின் திருவாசகத்தின் தாக்கத்தைக் காணலாம்.
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!
………..
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
……..
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!— திருவாசகத்தின் சிவ புராண வரிகள்.
சைவத் திருமுறைகள் அனைத்தும் நம சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மகிமையைப் போற்றுகின்றன ; வேதங்களில் யஜுவ்ர் வேதத்தின் ருத் ரம் சமகம் பகுதியில் முதல் தடவையாக நமச்சிவாய என்பதைக் கேட்கிறோம். பின்னர் இதை சைவ அடியார்களின் தேவார, திருவாசக, திரு மந்திர நூல்களில் படிக்கிறோம்
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும். 15 – நல்வழி
என்று அவ்வையார் நல்வழி நூலிலும் பகர்ந்தார்

திருமூலரின் திருமந்திரமும் சிவ என்ற இரண்டெழுத்தே போதும் என்கிறது :
சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
துவனச் சடைமுடித் தாமரையானே. (கடவுள் வாழ்த்து. 4)
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716)
TO BE CONTINUED……………………………………
TAGS- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-3, மூஷிக வாகனம் ஏன்?, மாயப் பிறப்பு, சொற்பதம் கடந்த