விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4; ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி(Post.14,210)

Written by London Swaminathan

Post No. 14,210

Date uploaded in Sydney, Australia – 16 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4;

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

………..

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

இந்த வரிகளில் தனக்கு என்ன வேண்டும் என்று அவ்வையார் வேண்டுகிறார்.

1.இறைவனே குருவாக வேண்டும்

2.முந்தை வினைகளை நீக்கவேண்டும்

3.உபதேசம் செய்தருளவேண்டும்

4.ஐம்புலன்களை அடக்க அருள்புரியவேண்டும்

5.ஒன்பது வாசல்களைக் கொண்ட உடம்பினை என் வசத்தில் வைத்துக்கொள்ள இவையெல்லாம் தேவை.

இதற்குப்  பின்னர் வரும் வரிகளில் யோக விஷயங்கள், மூச்சுப் பயிற்சி , குண்டலினியை எழுப்புவது முதலியன பற்றி வேண்டுகிறார்

இந்த வரிகளில் 3, 4, 5, 9  ஆகிய எண்களை அவ்வையார் பயன்படுத்துவத்தைக் கவனிக்கவேண்டும் ; இந்த பரிபாஷையை  எல்லா ஆன்மீகப் பாடல்களிலும் , துதிகளிலும் காணலாம். இவை எல்லாம் பகவத் கீதையிலிருந்து துவங்குகிறது அங்கும் ஒன்பது வாயில், மூன்று மலங்கள், ஐந்து புலன்கள் வருகின்றன வள்ளுவனும் துறவு என்னும் பகுதியில் இதை ஜூஸ் பிழிந்து தந்து விடுகிறான்.

நீக்க வேண்டியது மூன்று மலங்கள்

வேண்டிப் பெறுவது நான்கு நலன்கள்

அடக்க வேண்டியது ஐந்து மத யானைகள் (புலன்கள்)–

உடலுக்கு ஒன்பது வாசல்கள் —- அவ்வையார்

****

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே……….

மும்மலங்களுக்கு சைவர்கள் கூறும் விளக்கம் – ஆணவம்,கன்மம், மாயை என்பதாகும் .

இன்னுமொரு விளக்கம் :–

மூன்று மலங்கள் – காமம் க்ரோதம் லோபம் ; அதாவது வேண்டாத ஆசைகள் காமம்; அவை கிடைக்காதபோது ஏற்படும் சினம் என்னும் கோபம்; சிறிது கிடைத்துவிட்ட பின்னர் எழும் பேராசை, குறிப்பாக பண விஷயத்தில்-லோபம் .

த்ரிவிதம் நரகஸ்யேத3ம் த்3வாரம் நாஶனமாத்மன: |

காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் ||16-21||

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: |

काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् || 16-21||

tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ

kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet

த்ரி-விதம்–—மூன்று வகையான; நரகஸ்ய——நரகத்தின்; இதம்–—இது; த்வாரம்——வாயில்கள்; நாஶனம்—— அழிவிற்கு; ஆத்மனஹ–—சுய; காமஹ——காமம்; க்ரோதஹ——கோபம்; ததா——மற்றும்; லோபஹ—-—பேராசை; தஸ்மாத்——எனவே; ஏதத்–—இவை; த்ரயம்——மூன்றை; த்யஜேத்–—கைவிட வேண்டும்- பகவத் கீதை 16-21

சிறைச்சாலைக்குச் செல்லுவோர் பற்றிய செய்திகளைப் படித்தால் எல்லோரும் இந்த மூன்று காரணங்களுக்காகவே சிறையில் அடைக்கப்படுவதைக் காலம்; ஆகையால் கீதையில் கண்ணன் இந்த மூன்றினையும் நரகத்தின் வாசல்கள் என்று வருணிக்கிறான் .

******

chocolate Ganesh 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி….

சரியை, கிரியை, யோகம், ஞானம் இவை நான்கினையும் தந்து அவற்றின் மூலம் சாலோகசாமீப, சாரூப சாயுஜ்ய நிலையை அடைய வேண்டும்.

दर्शनाद् यस्य सालोक्यं

सामीप्यं स्पर्शनात् तथा

सारूप्यं स्नानतो याति

सायुज्यं तन्-निवासतः– கார்க சம்ஹிதா 

darśanād yasya sālokyaṃ

sāmīpyaṃ sparśanāt tathā

sārūpyaṃ snānato yāti

sāyujyaṃ tan-nivāsataḥ

sAlokyam.. சாலோக்யம் – இறைவனை வணங்கும் அடியார் குழாத்தில் சேருதல்; 

sAmeepyam.. சாமீப்யம்- இதன் வாயிலாக இறைவனை நெருங்கிச் செல்லுதல்;

sArupyam.. ஸாரூப்யம்-  அவனது உருவினை அடைதல் ;

sAyujyam..சாயுஜ்யம் –  அவனோடு ஐக்கியமாதல்

சிவன் என்று சொல்லக் சொல்ல சிவமயமாவதை திருமூலரும் பாடுகிறார் .இறுதியில் ஆதி சங்கரர் போதித்த அத்வைத நிலை வரும்; அதாவது

அஹம்  பிரம்மாஸ்மி; தத்துவமசி என்னும் உபநிஷத வாக்கிய நிலை ; நானே கடவுள்; அது நீயே.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்

சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716) திருமூலர் அருளிய திருமந்திரம்.

பாரதியும் இந்த நாலாவது நிலையைப் பாடுகிறான்

பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்

பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்;

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே ;

தத்வமஸி தத்வமஸி நீயே யஃதாம் ;

பூமியிலே நீ கடவு ளில்லையென்று

புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி

ஸதாகாலம் சிவோஹ‘ மென்று ஸாதிப்பாயே.——பாரதி அறுபத்தாறு

*****

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்………………..

முதலில் இறைவனே குருவாக வேண்டும் என்றும் அவ்வை வேண்டுகிறார். இந்த குரு பற்றிய கொள்கை இந்து மதத்துக்கே உரியது அருணகிரிநாதருக்கு முருகனே குரு ஆனான். மாணிக்கவாசகருக்கு சிவனே குரு வடிவில் தோன்றினார்

குரு இல்லாமல் ஆன்மீக முன்னேற்றம் கிடையாது என்பது இந்துக்களின் கொள்கை; அவரிடமிருந்து உபதேசம் பெறவேண்டும் என்பதும் இந்துக்களின் கொள்கை. இதை உபநிஷதங்கள் தெளிவாக இயம்புகின்றன. பிராமணர்கள் இரண்டாவது பிறவி எடுக்கையில்– அதாவது பூணூல் போடுகையில் — தந்தை மூலமாக காயத்ரீ மந்திர உபதேசம் பெறுகிறார்கள்; அப்போது தந்தையே குரு.

பாரதி , திருமூலர் போன்றோர் குருவின் பெருமையை புகல்கிறார்கள்:

காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;

கனமான குருவை யெதிர் கண்ட போதே

மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;

மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;

கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;

குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்;

பேற்றாலே குரு வந்தான்; இவன்பால் ஞானப் [ளே

பேற்றை யெல்லாம் பெறுவோம் யாம்“ என்றெனுள்

சிந்தித்து:— ”மெய்ப் பொருளை யுணர்த்தாயையே!—பாரதியார்

குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.

இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.

கருடன் உருவம் கருதும் அளவில்

பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்

குருவின் உருவம் குறித்த அப்பொழுதே

திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

— திருமூலரின் திருமந்திரம்

*****

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி……………………

ஒன்பது வாசல் வீடு/  நகரம் என்று உடலை வருணிப்பதை வேத மந்திரத்திலேயே காண்கிறோம். பின்னர் தமிழ் அடியார்கள் இதைக் கூறி வந்தனர்.

இதோ அதர்வண வேத மந்திரம்:

ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்து உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)

பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:

இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வாரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)

सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |

नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||

sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī

nava-dvāre pure dehī naiva kurvan na kārayan–(பகவத் கீதை – 5-13)

அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்

15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:

“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

நவத்வாரே சரீரே அஸ்மின் ஆயு: வசதி சந்ததம்

ஜீவததீ த்யத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.

—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957

*****

ஐம்புல அடக்கத்தைப் பாடாத புலவர் இல்லை வள்ளுவன் குறள் இதோ:-

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:24)

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

பரிமேலழகர் உரை: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.

வீட்டு நிலம் – மோட்சம், வீடுபேறு அல்லது மேலான நிலை

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பனனிடத்தில் உலகம்  வசப்படும் ; முனிவர்கள், சாது சந்யாசிகள் இப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவர்களை உலகமே வணங்குவதைக் காண்கிறோம்.

*****

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்………

முன் வினையின் பயனால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடலாம்; அதை நீக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே உண்டு

பிரம்மன் எழுதிய தலை எழுத்து முருகனின் கால் பட்டு அழிந்தது என்று அருணகிரிநாதர் பாடுகிறார் . முந்தை வினையின் முடிச்சை அவிழ்ப்பதை திருமூலரும் பாடுகிறார் கோவிந்தனின் புகழ் பாடினால் அவை எல்லாம் தீயினில் பஞ்சுபோலக் கருகிச் சாம்பலாகும் என்று ஆண்டாளும் உறுதி செய்கிறார்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே– கந்தர் அலங்காரம்

“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்

சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே”.— திருமந்திரம்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்  தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.– ஆண்டாள் பாடிய திருப்பாவை

To be continued………………………………..

Tags-  விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4,  ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி….

Leave a comment

Leave a comment