Post No. 14,215
Date uploaded in Sydney, Australia – 17 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25
சிட்னி மாநகரிலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் மிண்டோ( Minto, NSW 2566) என்ற நகரினை அடையலாம் அங்கு அமைதியான சூழ்நிலையில் ஒரு அழகான சிவன் கோவில் இருக்கிறது. நான் என் குடும்பத்துடன் பிப்ரவரி 16 ஆம் தேதி (2025) அங்கு சென்றேன். சூலூர் சிவ சண்முக குருக்கள் எங்களை வரவேற்று நல்ல தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார்; பிரசாதமும் கிடைத்தது .
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குஜராத் மாநில மக்கள் கட்டிய இந்தக் கோவில் வடக்கத்திய தெற்கத்திய கோவில்களின் அம்சத்தைக் கொண்டு விளங்குகிறது.
இலங்கைத் தமிழர்களும் இங்கு ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். நாங்கள் சென்றபோது நிறைய நேபாள இந்துக்களும் ஆஸ்திரேலிய நகரத்தார் சமூக மக்களும் வந்திருந்தனர் . அவர்களுடைய வருடாந்திர காவடி உற்சவம் நடந்ததால் முருகப்பெருமானின் உற்சவ கோலத்தையும் பக்தர்களின் காவடியையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியது
கோவிலின் அமைப்பு
கோவில் பிரதான சந்நிதி காசி விஸ்வநாதர் ஆவார். பெரிய, அழகான சிவலிங்க உருவத்தில் அவரைத் தரிசிக்கலாம். இந்த விக்கிரகத்துக்கு மட்டும் தமிழ் ஆகம கோவில்களைப் போல அபிஷேக ஆராதனைகள் உண்டு அவருக்கு ஒரு புறம் அஷ்ட தச
புஜ துர்க்கையும் மறு புறம் ராம லெட்சுமணர் சீதாதேவி அனுமன் சகிதமும் காட்சி தருகின்றனர். இந்த துர்கா, ராம பரிவார் வடக்கத்திய பாணியில் உள்ளன. வெறும் உடை அலங்காரம் மட்டுமே .
கோவிலுக்குள் நுழையும் போதே கணபதியையும் முருகனையும் தரிசிக்கலாம்.முக்கிய சந்நிதிதிகள் மூன்றினைத் தவிர குட்டி சந்நிதிகளில் கிருஷ்ணர், புவனேஸ்வரி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், கால பைரவர் முதலானோரின் விக்கிரகங்களும் இடம்பெற்றுள்ளன .
கோவிலின் தனிச் சிறப்பு
வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இங்கே காணப்படுகின்றன. மிகப்பெரிய சிவன் சிலையும் அனுமன் சிலையும் கோவிலுக்கு மெருகு ஊட்டுகின்றன. அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிலைகளை படம் பிடிப்பதோடு செல்பி எடுக்கவும் தவறுவதில்லை .
இவை தவிர இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாடலும் ஒரு மண்டபத்தில் இருக்கின்றன. இந்தியா சென்று தரிசிக்க முடியாதவர்கள் இந்த மண்டபத்தை வலம் வந்தால் போதும்; கோவிலில் யாக சாலை இருப்பதோடு எதிர்கால விரிவாக்கத் திட்டங்களும் உள்ளன .
****
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !
நாங்கள் சென்ற நாளில், நகரத்தார் சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தும் காவடி, பால்குட நிகழ்ச்சியும் நடந்தது ; நூற்றுக்கும் மேலானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பெண்களும் ஆண்களும் காவடி மந்து வர, முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியும் வலம் வந்தார் . சூலுர் சிவ சண்முக குருக்கள் சொன்ன நீண்ட தமிழ் சங்கல்பத்தை அவர்கள் பக்தி சிரத்தையோடு சொன்னார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில், லண்டன் முருகன் கோவிலில் நடந்த நகரத்தார் உற்சவத்துக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்து சொற்பொழிவாற்றச் சொன்னார்கள். இன்றைய உற்சவத்தைப் பார்த்தபோது அந்த நினைவலைகள் உள்ளத்தில் கிளர்ந்து எழுந்தன
சிவராத்திரி நிகழ்ச்சிகள்

அடுத்து வரப்போகும் சிவராத்திரி நாளில் சிவனுக்கு பக்தர்களே பாலபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கணபதி ஹோமம் முதல் ஏகாதசரருத்ர ஹோமம் /அபிஷேகம் வரை நடத்தும் அறிவிப்புகளையும் கோவில் வெளியிட்டுள்ளது சென்ற ஆண்டு தமிழ் அன்பர்கள் அங்கு திருவாசக முற்றோதலையும் நடத்தி இருக்கிறார்கள் . எல்லா சமூகத்தினரும் கோவிலைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பு .சிட்னி நகருக்கு வரும் அன்பர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்து பார்க்க வேண்டிய கோவில் இது
இதோ கோவிலின் முகவரி :
The full address of the temple is
Shri Shiva Mandir
Address: 201 Eagleview Rd,
Minto New South Wales 2566
—subham—
Tags- ஆஸ்திரேலியாவில், அழகான சிவன் கோவில் -25
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25, மிண்டோ( Minto, NSW 2566