Written by London Swaminathan
Post No. 14,214
Date uploaded in Sydney, Australia – 17 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 16- ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு


முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
மகாகும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிப்பு!
பிரயாக்ராஜ் மகாகும்ப மேளாவில் 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். உலகின் பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமான இந்த எண்ணிக்கை, இந்த விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் மகாகும்ப நகரத்திற்கு வருகை தந்ததால், உலகின் இரண்டு பெரிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமாக இது மாறியுள்ளது. ஒன்றரை மாதங்களில் பிரயாக்ராஜுக்கு வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும் .
ஐம்பது கோடி மக்கள் நேரடியாக பங்கேற்ற உலகின் முதல் விழா இது.
மனித வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் பங்கேற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை
உலகிலேயே மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில் 55 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உ.பி., அரசு கூறியுள்ளது.
‘பூர்ணிமா’ சிறப்பு வாய்ந்த தினம் என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்; பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்து வருகிறார்.
பிப்ரவரி பத்தாம் தேதி கும்பமேளாவுக்கு வந்து திரிவேணி சங்கமத்தில் பாரத ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.
பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதியை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். அவர் அக்ஷயவத் என்னும் புகழ்பெற்ற புனித ஆலமரத்தையும் படே ஹனுமான் கோவில் அனுமனையும் வணங்கினார்
கடந்த 5-ம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். அதற்கு முன்னதாக பூட்டான் மன்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி பவுர்ணமி அன்று தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஒட்டகம், குதிரைகளில் ஊர்வலகமாக வந்து சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீராடி வருகின்றனர்.
****
கும்பமேளாவை ஆடம்பர விழாவாக சித்தரிப்பதற்கு சாதுக்கள் கண்டனம்
மஹா கும்பமேளா என்பது ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கைக்கானது. இதில் தேவையில்லாத விஷயங்களையோ, 5 ஸ்டார் கலாசாரமாகவோ சித்தரிக்க வேண்டாம்’ என, சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்
மாடலாக இருந்து சன்னியாசியான ஹர்ஷா ரிசாரியா, மாலை விற்கும் மோனலிசா, ஐ.ஐ.டி., பாபா அபய் சங், நடிகை மம்தா குல்கர்னி போன்றவர்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதுவா மஹா கும்ப மேளா? மஹா கும்பமேளாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் செயல்படுகின்றன. இது சாதுக்கள், ஆன்மிகவாதிகளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல கூட்டத்தை சமாளிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் நதிக்கரையில், மணலில், திறந்த வெளியில் துாங்குகின்றனர். பஜனை செய்கின்றனர். புனித நீராடிய பின், சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம், புண்ணிய நதியில் நீராடுவதுதான். என்று. ஹிந்து துறவி. மஹந்த் தர்மேந்திர தாஸ் கூறினார்,
*****
மைசூரில் மூன்றுநாள் கர்நாடக கும்பமேளா
மைசூர் கும்பமேளா பிப். 10 ம் தேதி-தொடங்கியது
தெற்கின் பிரயாகராஜ்’ என்று அழைக்கப்படும் டி.நரசிபுரா, திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடினர். முதல் நாளன்றே இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காவேரி-கபில-ஸ்பதிகா, நதிகளின் புனித சங்கமமாக விளங்குவது திருமகூடலி. இங்கு கும்பமேளா பிப்ரவரி பத்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூன்றுநாள் நடந்தது
வெள்ளி ரதத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் ஊர்வலம் வந்தனர். கும்பமேளாவின் இரண்டாவது நாள் பிப்ரவரி. 11 ம் தேதி மாலையில், வாரணாசியில் கங்கை நதியில் நடைபெறுவது போல மஹா ஆரத்தியும் நடத்தப்பட்டது
*******
டில்லி மாநகரத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் புதிய கட்டிடம்
உலகத்திலேயே மிகப்பெரிய இந்து சமய தொ ண்டர் படையான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின்– அதாவது ஆர் எஸ்.எஸ். அமைப்பின்- புதிய கட்டிடம் டில்லி மாநகரத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி திறக்கப்படுகிறது .
புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக டில்லியில், 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு, ஜண்டேவாலா பகுதியின் கேசவ் குஞ்சில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நீடித்த, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அலுவலகம், 4 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் செலவில், தலா 12 மாடிகளைக் கொண்ட மூன்று பிரமாண்ட கட்டடங்களுடன் அமைந்துஉள்ளது.
சாதனா, அர்ச்சனா, பிரேரனா என அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.
சாதனா கட்டடம், நிர்வாக அலுவலகமாக செயல்படும். அதன் 10வது மாடியில் அதிநவீன வசதிகளுடன் நுாலகம் உள்ளது.
இந்த புதிய அலுவலகத்தில் மொத்தம் 300 அறைகள்; 1,300 பேர் அமரும் வகையில் மூன்று அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வளாகத்தில் மையமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்த கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. நாடு முழுதும் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக அர்ச்சனா, பிரேரனா கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வளாகத்தினுள் அனுமன் கோவில், மருத்துவமனை அமைந்துள்ளன. 270 கார்களை நிறுத்தும் வகையிலான பார்க்கிங், 20 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் வசதி என ஏராளமான வசதிகளுடன் அமைந்துள்ள இந்த வளாகத்தில், தினமும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகம் போன்றவற்றை வடிவமைத்த குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் தான், இதையும் வடிவமைத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 75,000 பேரிடம் இருந்து 5 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பெற்ற நன்கொடையில், புதிய அலுவலகத்தை கட்டியதாக ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், வரும் 19ல் திறக்கப்பட உள்ளது.

****
கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை – ஐகோர்ட் அதிருப்தி
கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ. 54 இலட்சத்தை வசூலிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையுள்ள அலுவலர்களே வாடகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன் எனவும், வழக்கு தொடர்ந்த பின்பும் வாடகை பாக்கி செலுத்த கால தாமதமானதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துது.
திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அலுவலக வாடகை பாக்கி ரூ 54,35,660 அரசிடமிருந்து பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
xxxxxxx
அர்ச்சனை தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை அர்ச்சகர்களுக்கு சொந்தமில்லை! வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு!
கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்த கோவிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை புடுங்கி உண்டியலில் போடும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கை இணை உண்டிகளில் செலுத்த உத்தரவிடப்படுகிறது இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வர பெரும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும் தட்டு காணிக்கை உண்டியல் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,
இப்படிக்கு திருக்கோவில் செயல் அலுவலர்”
அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அர்ச்சகர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது .
*****
பக்தர்களை தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கும் தமிழக அரசு : இந்து முன்னணி கண்டனம்!

கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திமுக அரசு தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அறநிலையத்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை உள்ளிட்ட வழிகளில் இந்து சமய அறநிலையத்துறை பல கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ள அவர், தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தர்களை அவதிக்குள்ளாக்கினால் ஏழ்மையான பக்தர்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள் என திமுக அரசு நினைப்பதாக விமர்சித்துள்ள அவர், திமுக இந்து விரோத அரசு என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
*****
திருப்பதி லட்டு கலப்பட புகாரில் நால்வர் கைது

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ராஜசேகரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரித்த நெய்யில் மாட்டு கொழுப்பை கலப்படம் செய்ததாக எழுந்த விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட் மற்றும் தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
லட்டு கலப்பட விவகாரத்தில் விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வ சாவ்டா, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் உள்பட நான்கு பேரை, அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் லட்டு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

*******
பழநி தைப்பூசத் திருவிழா: அண்ணாமலை நேர்த்திக்கடன்

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை,48 நாள் விரதத்தை நிறைவு செய்து பழனி கோவிலில் காவடி சுமந்து வழிபாடு செய்தார்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலை தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள். முருகன் நமக்கு வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

*****
சுருக்கமான செய்திகள்
திருப்பதியில் சொகுசு ஓட்டல்; அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
திருப்பதி திருமலையில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கோவில் அர்ச்சகர்கள் துவங்கினர்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2014 – 2019 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தேவலோகம் என்ற திட்டத்துக்காக திருப்பதி திருமலையில் அலிபிரி அருகே 20 ஏக்கர் அரசு நிலம் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்டது.
அடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிக் காலத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
*****
கோவில் விழாவில் பட்டாசு வெடித்த போது யானைகள் மோதல்- 3 பேர் பலி
கோழிக்கோடு, மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருவிழாவின் போது இரண்டு கோயில் யானைகள் பட்டாசு வெடித்து ஓடிய கொடூரமான சம்பவத்தில் 3 முதியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் குருவங்காட்டைச் சேர்ந்த லீலா மற்றும் அம்முக்குட்டி மற்றும் கொயிலாண்டியைச் சேர்ந்த ராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காயமடைந்த முப்பது பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
வேல் யாத்திரை : பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரையை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை காக்க வலியுறுத்தி சென்னையில் வேல் யாத்திரை நடத்த பாரத் இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டது.
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு ,
பிப்ரவரி 23- ம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
வணக்கம்.
—SUBHAM—
tags-ஞானமயம், வழங்கும், உலக இந்துமத செய்தி மடல், 16-2-2025, (Post.14,214)