WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,213
Date uploaded in Sydney, Australia — 17 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-2-2025 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
முத்து ஏர் நகையாள் இடமாகத் தம் மார்பில் வெண்நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி
தெத்தே என முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது கொங்கு நாட்டில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் கொண்டுள்ள திருநணா திருத்தலமாகும். பவானி என்று இப்போது இந்தத் தலம் அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் பவானி நகரம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வடமேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்றது இந்தத் திருத்தலம்.
இறைவர் : சங்கமேஸ்வரர் (அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு)
இறைவி : வேத நாயகி, பவானி, சங்கமேஸ்வர், பந்தார் விரலம்மை உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.
தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் உள்ளிட்டவை.
,
தல விருக்ஷம் : இலந்தை
திருநணா என்றும் பவானி முக்கூடல் என்றும் புராணங்களால் இத்தலம் சிறப்பிக்கப் பெறுகிறது. வானி என்பது பவானி நதியின் பழம் பெயராகும். பவானி, காவிரி, மற்றும் மறைந்திருக்கும் அமுத நதி ஆகிய மூன்றின் சங்கமமே பவானி சங்கமம் ஆகும். இது தட்சிணப் பிரயாகை என்றும் கூடுதுறை என்றும் அழைக்கப்படுக்கிறது.
இத்தலமானது சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதும கிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இருப்பதால் பஞ்சகிரி மத்தியப் பிரதேசம் என்றும் குறிக்கப்படுகிறது.\
இங்கு சுவாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் இடையே முருகன் சந்நிதி இருப்பதால் இது சோமாஸ்கந்த மூர்த்தி சிறப்புடையதாக ஆகிறது.
இக்கோவிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. வடக்கு நோக்கியே பிரதான வாயிலான ராஜ கோபுரம் உள்ளது. இது ஐந்து நிலை கோபுரமாகும். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வாயிலின் மேற்புறம் ராஜ விநாயகரும், கீழ்ப்புரம் முத்துகுமாரசுவாமியும் காட்சி அளிக்கின்றனர்.
அடுத்து மேல்புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் சௌந்தரவல்லித் தாயார் கோயிலும் உள்ளன.
இந்தத் திருத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
குபேரன் ஒரு நாள் தன் விமானத்தில் வரும் போது இங்கு காவிரியாற்றின் கரை ஓரத்தில் புலி, மான், பசு, யானை, சிங்கம் உள்ளிட்டவை பகை இன்றி இருப்பதைப் பார்த்தான். அங்கு ஒரு இலந்தை மரத்தையும் பார்த்தான். அப்போது தெய்வீக அசரீரி ஒன்று “இந்த இலந்தை மரத்தின் அடியில் ஜோதி மயமான லிங்கம் இருக்கிறது. இதை வழிபடுவாயாக” என்றது.
அதன்படி குபேரன் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை வழிபட சிவபிரான் அவனுக்கு காட்சியளித்து அருளினார். அவனது வேண்டுதலின்படி அழகாபுரியைப் போல இத்தலம் திகழ ஆரம்பித்தது. இது தட்சிண அளகை என்ற திருப்பெயரைப் பெற்றது. இறைவனுக்கு அளகேசன் என்ற நாமமும் உண்டாயிற்று.
இத்தலத்தைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
1802ம் ஆண்டில் இங்கு கலெக்டராக இருந்தவர் வில்லியம் காரோ என்னும் ஒரு துரை. அவர் இங்கு பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் பதவி புரிந்ததால் கூடுதுறை மகத்துவமும் வேதநாயகியின் பெருமையும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. சுவாமியை தரிசிக்க அவர் விரும்பினாலும் ஆங்கிலேயர் என்பதால் கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி இல்லை.
இதனால் வேதநாயகி சந்நிதிக்கு எதிரே மதிலில் மூன்று துவாரங்களைச் செய்து அதன் வழியே அம்மனை தரிசிக்கலானார்.
ஒரு நாள் இரவு வேதநாயகியைப் போல அலங்காரம் கொண்ட பெண் ஒருத்தி அவர் கனவில் வந்து அவரை வெளியே போகும் படி சொல்ல அவரும் எழுது வெளியே சென்றார். சில நிமிடங்களில் அந்த பங்களாவின் கூரை இடிந்து கீழே விழுந்தது. அவர் தனது உயிர் தப்பியது வேதநாயகின் கருணையினால் தான் என்பதை உணர்ந்தார்.
உடனே தந்தத்தினாலேயே ஒரு கட்டிலை – அதாவது பல்லக்கு ஊஞ்சலைச் செய்து காணிக்கையாகக் கோவிலுக்கு அளித்தார். அது கொடுக்கப்பட்ட தேதி 11-1-1804 என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இன்றும் கோவிலின் உள்ளே காணலாம்.
இந்தக் கோவிலில் இன்னொரு அதிசயம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவானின் ஒளியானது, மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாளன்று, சங்கமேஸ்வரர், சுப்ரமண்யர், வேதநாயகியம்மன் சந்நிதிகளில் காலை நேரத்தில் பூஜை செய்வது போல மூர்த்திகளின் மீது படுகிறது.
இங்குள்ள கூடுதுறையில் ஒவ்வொரு அமாவாசையன்றும் பக்தர்கள் திரளாக வந்து குளிப்பது வழக்கம். ஆடி பதினெட்டாம் நாளில் ஆயிரக்கணக்கில் இங்கு மக்கள் குழுமி நீராடுகின்றனர்.
இங்குள்ள அபிஷேக மண்டபத்தின் வடபால் அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. அமுதமே இங்கு லிங்கமாக மாறியிருக்கிறது. இந்த அமுதலிங்கம் அதற்குரிய ஆவுடையாரின் மேல் இருக்கிறது. எளிதிலே இதை எடுக்கலாம்; திரும்பவும் வைக்கலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து இந்த அமுதலிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு மகப்பேறு அடைவதற்காக கோயிலை வலம் வருகின்றனர். இப்படிச் செய்வதால் மகப்பேறு அடையமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தை இந்தத் தலத்தில் அருளியுள்ளார்.
இன்னும் ஏராளமான சிறப்புகளையும் புராண வரலாறுகளையும் இந்தக் கோவில் கொண்டிருக்கிறது.
அவற்றை அருணகிரிநாதரின் திருப்புகழ், பவானி கூடல் புராணம், வேதநாயகி பிள்ளைத் தமிழ், வேதநாயகி அம்மன் சதகம் உள்ளிட்ட பல நூல்களின் வாயிலாக அறியலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சங்கமேஸ்வரரும் அன்னை வேதநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**
tags–பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்