விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5 ; என்னை யறிவித்து எனக்கருள் செய்து (Post.14,216)

Written by London Swaminathan

Post No. 14,216

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5;

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

…….

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

*****

இந்த வரிகளில் அவ்வையார் நிறைய யோக ரகசியங்களை சொல்கிறார். இங்கும் எண்களைப் பயன்படுத்துகிறார் . மிகவும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் — நமது உடலில் மூலாதாரத்தில் பாம்பு போல ஒரு மாபெரும் சக்தி உறைந்து  கிடக்கிறது ; அதை மூச்சுப் பயிற்சியின் மூலம் மேலே கொண்டுவந்தால் முக்தி கிடைக்கும்; அது நடக்கும் காலத்திலேயே பல அற்புகங்களும் நடக்கும். இது பற்றி எழுதுவோரும் பேசுவோரும் லட்சக் கணக்கில் உள்ளனர் . இதை அனுபவத்தில் செய்து காட்டியோர் வெகு சிலரே.

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

இதில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியில் வரும் சொற்கள் வருகின்றன ; இடகலை, பிங்கலை, சுழுமுனை , மூலாதாரம் ஆறு ஆதாரம், சதுர்முக சூக்கம், குண்டலினி , அசபை .

இவைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இந்த வரிகளை விளங்கிக்கொள்ள முடியாது. ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியிலும் விவேகானந்தர் ராஜ யோக புஸ்தகத்திலும் விளக்கங்கள் உள்ளன. அவர்கள் அனுபவித்து எழுதியவர்கள்; மற்றோர் பிறர் சொன்னதை — என்னைப் போல — கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்கின்றனர்.

அவ்வையார் வேண்டுவது குண்டலினி சக்தியை எழுப்பி அதை மேலே செலுத்தி முக்தி பிற அருளுக என்பதாகும்.

குண்டலினி சக்தி பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது அனுபவங்களின் வாயிலாக விரிவாக எழுதியுள்ளார் .

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம்ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

முதலில் சொற்களின் பொருளைக் காண்போம் . இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது; அவர்களே அனுபவிக்கும்வரை புரியவும் புரியாது

*****

ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்

xxxxxx

இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்

பிங் கலை  வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்

சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி

xxxx

பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி

அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

xxxxxx

யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.

எட்டு என்பது- ஓசை, ஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.

xxxx

புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக. ஆத்மலிங்கம் பஜரேஅதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை  நினைத்தே!

xxxx

கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன்.  உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.

xxxx

மூன்று மண்டலம் என்பது உடலிலுள்ள சந்திர, சூரிய அக்கினி மண்டலம் என்பர் ஆன்றோர்.

ஆதித்தன்- சூரிய மண்டலம், குமுதா சகாயம்- நிலவின் தோழன் குமுதா மலர்= சந்திர மண்டலம் .

ஈரெட்டு நிலை = பதினாறு கலை= பிராணாயாமம் செய்வோரின் அகரத்தியில் உள்ள சொல்.

சண்முக = ஆறு+ சதுர் முக = நான்கு ; ஆறு பருமைப் பொருள்; நான்கு நுண்மைப்பொருள்

எண்முக= எண்சாண் உடம்பு   .

காலால் எழுப்பி = காற்றுப் பொய்யெச்சியால் குண்டலினியை எழுப்பி;  

****

இவை பற்றி ஏராளமானோர் எழுதுகின்றனர் ; அவை எல்லாம் வேற்றுப் பேச்சு உண்மையில் இவைகளை பயின்று அனுபவித்த ராமகிருஷ்ணர், விவேகானந்தர் , சுவாமி சிவானந்தர் ஆகியோர் எழுதியதை மட்டும் படித்தறிய வேண்டும்.

தாயுமானவர் பராபர்க் கணினியிலும், பட்டினத்தாரிபூரண மாலையிலும் இவை பற்றிப் பாடியுள்ளனர்.

இவ்வாறு குண்டலினி என்னும் பாபிம்பினை — அக்கினியை எழுப்பி உடலிலுள்ள ஆறு சக்கரங்களை வழியாக தலைக்கு கொண்டு சென்றால் ஆயிரம் இத்தலத் புகழ்  தாமரை போலுள்ள சஹஸ்ராரத்தை அடைந்தவுடன் அமுதம் சுரப்பதால் எல்லையில்லாத ஆனந்தம் சுரக்கும்; இறைவனும் காட்சி தருவான்; சமாதி நிலை ஏற்படும்  என்பது அனுபவித்த யோகியர் வாக்கு

******

என்னை அறிவித்து — இது உபநிஷத கட்டளை

இதை சாக்ரடீஸ் பின்பற்றி உன்னையே நீ அறிவாய் என்கிறார் .

இதை திருமூலர் இதை அழகாக தூய தமிழில் சொல்கிறார்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.

—-திருமூலரின் திருமந்திரம்:

தன்னை அறிந்தால் என்ன பலன் ?

முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்

பின்னை வினையைப் பிடித்துப் பிசையலான் என்கிறார் திருமூலர்

இவையெல்லாம் பகவத் கீதையிலுந்து லிருந்து வந்த கருத்துக்கள்

கீதையில் கிருஷ்னும் தானே தனக்கு நண்பன் என்கிறார்

BG 6.5: உங்கள் மனதின் சக்தியால் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்ஏனென்றால் நீங்களே உங்களுக்கு நண்பன்நீங்களே உங்களுக்கு எதிரி.

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् |
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: || 6-5||

uddhared ātmanātmāna nātmānam avasādayet
ātmaiva hyātmano bandhur ātmaiva ripur ātmana

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத் |

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||6-5||

இதனால்தான் அவ்வையாரும்

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

என்கிறார் .

தொடரும்…………………..

Tags-விநாயகர் அகவல் ,ஆராய்ச்சிக் கட்டுரை-5, என்னை யறிவித்து ,எனக்கருள் செய்து

Leave a comment

Leave a comment