கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1 (Post No.14,217)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,217

Date uploaded in Sydney, Australia – –18 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-2-2025அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது. 

கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1 

ச. நாகராஜன் 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம். 

தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தந்த கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி இன்று சிந்திப்போம்.

புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியாரால் போற்றிப் புகழப்பட்ட கவிச்சக்கரவர்த்தியைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.

 சோழநாட்டுக் காவிரித் தென்கரையில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஊர் தேரழுந்தூர் அல்லது திருவழுந்தூர் என்னும் திருத்தலத்தில் கம்பர் அவதரித்தார்.

 கம்பன் பிறந்த ஊர் காவேரி தங்கும் ஊர்

கும்பமுனி சாபம் குலைந்த ஊர் – செம்பதுமத்

தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா

ஓதகத்தார் வாழும் அழுந்தூர்

என்று தமிழ் நாவலர் சரிதை (பாடல் 185) பெருமையோடு திருவழுந்தூரைப் பற்றி விவரிக்கிறது.

  இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்த பெரும் வள்ளலான சடையப்ப வள்ளல் என்பார். சேர சோழ பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவரும் ஒருவருக்கொருவர் போர் புரிந்து வந்த காலத்திலும் அவர்கள் மூவரையும் தன் இல்லத்திற்கு ஒருங்கே அழைத்து விருந்து வைத்த பெருந்தகை சடையப்ப வள்ளல் ஆவார்.

 இவர் வாழ்ந்த காலத்திலேயே குலோத்துங்கள் சோழ நாட்டை ஆண்டு வந்தான்; அவரது அவையை ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் புலவர் அலங்கரித்தார். இதே காலத்தில் நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவரும் வாழ்ந்து வந்தார்.

 இந்த வரலாற்றுச் செய்திகள் மூலம் கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது.

 சிறு வயதிலிருந்தே இராமன் பால் பெரிதும் ஈர்ப்புக் கொண்டிருந்த கம்பன் வால்மீகியின் ராமாயணத்தை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தான்.

தமிழ் மற்றும் வடமொழியில் வல்லவனாக இருந்ததாலும் திருவருள் பெற்றமையாலும் இராமாயணத்தைப் பாடுவது என்று உறுதி கொண்ட அவன் அற்புதமான இராமாயணத்தைத் தமிழில் இயற்றித் தமிழுக்கு ஏற்றமும் பெருமையும் அளித்தான்.

 வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச் செய்தான்

ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி

மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்

என்பது கம்பனின் வாக்கு.

 வால்மீகியில் ஊறித் திளைத்த கம்பன் அவரது நான்கு பாதங்கள் கொண்ட ஸ்லோகத்தில் ஒன்றில் கூட ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான். அதைப் பருகிப் பருகி உளம் களித்த அவன் அன்பு என்னும் தேனைக் குடித்து ஒரு ஊமை உளறுவதைப் போல உளறலானேன் என்று அவையடக்கமாகக் கூறுகிறான்.

நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்

இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்

தொடை நிரம்பிய தோமறு மாக்கதை

சடையன் வெண்ணெய்நல்லூர் வயின் தந்ததே

என்ற கம்பராமாயணப் பாயிரச் செய்யுள் மூலம் இக்காவியத்தை இயற்ற ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் சடையப்ப வள்ளலே என்பது தெரிய வருகிறது.

 உத்தரகாண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களைக் கம்ப ராமாயணம் கொண்டுள்ளது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10569 அல்லது 10576 வரை உள்ளன.

இவற்றின் அருமையையும் பெருமையையும் முற்றிலுமாக உரைத்தவர் இதுவரை இல்லை. அவ்வளவு அற்புதமான சொற்சுவை மற்றும் பொருள் சுவை கொண்ட பாடல்கள் இவை.

கம்பனின் எல்லையற்ற தன்மையை விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டு கம்பனின் infinity தன்மையைக் கூறுகிறார்

கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:

சொல் கண்டார் சொல்லே கண்டார்சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!! (பாடல் 72)


சொல்வளம் பெரிதென்கோ யான்சொல்லினுட் டுளும்பு ஞான

நல்வளம் பெரிதென்கோ யான்நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென்கோ யான்வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்! (பாடல் 51)

கம்பனது சமயக் கொள்கை சிவ விஷ்ணு பேதத்தைத் தாண்டிய அற்புதமான கொள்கை என்பதை அவன் கிட்கிந்தா காண்டத்தில் நாடவிட்ட படலத்தில் நிலை நிறுத்துகிறான்.

அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்

பரகதி சென்றடைவரிய பரிசே போல் புகலரிய பண்பிற்றாமால்

சுரநதியின் அயலது வான்றோய் குடுமிச் சுடர்த் தொகைய தொழுவோர்க்கெல்லாம்

வானதிகந் தருந்தகைய வருந்ததியா நெடுமலையை வணங்கி அப்பால்”

என்பது கம்பனின் வாக்கு.

அருந்ததி என்னும் மலையைக் குறிப்பிட வந்த கம்பன் சிவன் பெரியவன்; இல்லை விஷ்ணு பெரியவன் என்று சண்டை போடுகின்ற அறிவிலோர்க்கு – முட்டாள்களுக்கு – பரகதி – முக்திப் பேறு அடையவே முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறான்.

கம்பனின் சொல்நயமும்நாடகபாணியில் ஒவ்வொரு காட்சியையும் அவன் சித்தரிப்பதும் நம்மை பிரமிக்க வைக்கும்.

கோசல நாட்டை வர்ணிக்கும்போது நம்மை திடுக்கிட வைக்கிறான்.

அங்கு வண்மை இல்லைதிண்மை;உண்மை இல்லைஒண்மை இல்லை. ஏன் என்று காரணத்தை அவன் விவரிக்கும் போது நாம் களிப்படைகிறோம்.

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்

ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”

இப்படி ஒரு வர்ணனையை எந்த இலக்கியத்திலும் காண முடியாது.

எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ என்று சுருக்கமாகச் சொல்லி நம்மை வியக்க வைக்கிறான்.

**

to be continued 

tags—கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1 

Leave a comment

Leave a comment