கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 2 (Post No.14,220)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,220

Date uploaded in Sydney, Australia – –19 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

16-2-2025அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 2

ச. நாகராஜன்

கம்பன் சீதையை அறிமுகப்படுத்தும் அறிமுகக் கவிதை இது:

பொன்னின் ஜோதி போதினி னாற்றம் பொலிவே போல்

தென்னுன் டேனிற் றீஞ்சுவை  செஞ்சொற் கவியின்பம்

கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோடு

அன்னம் மாடு முன் துறை கண்டாங் கயனின்றார்

(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் செய்யுள் 23)

தனது காவிய நாயகியை அறிமுகப்படுத்தும் கம்பன் ‘செம் சொல் கவி இன்பம்’ போல கவிதை இருக்க வேண்டும் என்று சொல்வதை இங்கேயே தானே கையாண்டு காண்பிக்கிறான்.

தங்கத்தின் ஜோதியென மின்னும் தகதகப்பு, மலர்கள் தரும் சுகந்த மணம், வண்டுகள் உண்ணும் தேனின் இனிமையான சுவை, கவிஞர்கள் இயற்றும் கவிதையில் தரப்படும் செம் சொல் கவி இன்பம் இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?

ஒளி, நாற்றம், சுவை, ஓசை இந்த நான்கு புலனின்பத்தையும் உதாரணம் காட்டி விட்டான் கம்பன் – தங்க ஒளி, மலர் வாசம், தேனின் சுவை, இனிய கவிதையின் ஓசை – கண்ணுக்கு ஒளி, நாசிக்கு வாசம், வாய்க்கு சுவை, காதுக்கு ஓசை என நான்கு புலன் இன்பத்தையும் கூறியவன் ஊற்றின்பத்தை மறைமுகமாக அறிய வைக்கிறான்.

உருக்கமான ஒரு இடத்தை அவன் தனது கவிதா வரிகளினாலேயே காண்பிக்கிறான் இப்படி:


‘”
கண்ணே வேண்டும்” என்னினும்ஈயக் கடவேன்என்
உள் நேர் ஆவி வேண்டினும்இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!- பெறுவாயேல்,
மண்ணே! கொள் நீமற்றையது ஒன்றும் மற‘ என்றான். 32

கெஞ்சுகின்ற சந்தத்தில், ராமனை காட்டுக்கு அனுப்பாதே என்று சொல்லக் கூட முடியாமல், மற்றைய வரத்தை மட்டும் மற என்கிறான்மன்னன்  தசரதன்.

ஆங்காங்கே நகைச்சுவையையும் அவன் தருவதற்குத் தவறவில்லை.

எடுத்துக்காட்டாக அனுமன் ராவணனிடம் வாலியைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். வாலி தன் வாலில் ராவணனைச் சுற்றிச் சுழற்றிக் கொண்டு போனான். ஆகவே ராவணனுக்கு வாலியின் வால் மீது பயம்.இது அனுமனுக்குத் தெரியும்.

ஆகவே ராவணனிடம் வாலியைப் பற்றி அவன் கூறும் போது.,

அஞ்சலை அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே

வெஞ்சின வாலிமீளான்வாலும் போய் விளிந்ததன்றே”

என்கிறான்.

வாலி போய் விட்டான். மீளமாட்டான். அவன் வாலும் போய் விட்டதுபயப்படாதே என்று ராவணனைக் கிண்டல் செய்கிறான் அவன்.

இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகை பற்றிய காவலைச் சொல்கிறான்.

அந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை அவன் சொல்லும் போது நகைச்சுவையும் தவழ்கிறது; இலங்கையின் அளப்பற்ற வீர பராக்ரம காவலும் புரிகிறது.

ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க

மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்

ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர்

காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

               ஊர்தேடு படலம் பாடல் எண் 139

வாள் முதலிய ஆயுதங்களைக் கொண்ட பெரிய கைகளை உடையவர்கள் ,பிறைச் சந்திரன் போன்ற வக்கிரமான பற்கள் வெளியே விளங்க இருப்பவர்கள் அதாவது சிரித்தவாறு புன்முகத்துடன் இருப்பவர்கள், பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்

இந்திரஜித்தின் வீட்டைக் காவலர்கள் காவல் காத்த லட்சணம் இது தான். 

கம்பன் கையாண்ட வண்ணங்கள் 96

10569 பாடல்களில் அவன் சுமார் 43 வகையான விருத்த வகைகளைக் கையாளுகிறான்.

கம்பனில் திளைத்துக் குளிக்கும் கவியான கே.என். சிவராஜ பிள்ளை கவி இலக்கணமாகச் சுட்டிக் காட்டுவது ஏழு பண்புகளை.

மாதுரியம், தெளிவு, வளம், பாவிகம் (Idealisation), அணி, இசை, தொனிப்பொருள் ஆகிய அந்த ஏழையும் கம்பன் தன் காவியத்தில் எப்படிக் கட்டிக் காத்து பரிமளிக்க வைத்தான் என்பதை கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை என்ற நூலில் அவர் 36 பாக்களில் விளக்குகிறார்.

கம்பனது கவிதைளில் தமிழ் யாப்பிலக்கணம் விவரிக்கும் 120 அணிகளையும் கணலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு யமகப் பாடலைப் பார்ப்போம்

சுந்தரகாண்டத்தில் ஊர் தேடு படலத்தில அடுத்தடுத்து நான்கு யமகப் பாடல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று இது.

அஞ்சு வணத்தி னாடை யுடுத்தா ளரவெல்லாம்                  

அஞ்சு வணத்தின் வேக மிகுத்தா ளருளில்லாள்                  

அஞ்சு வணத்தி னுத்தரி யத்தா ளலையாரும்                       

அஞ்சு வணத்தின் முத்தொளி ராரந் தணி கொண்டாள் 

இலங்கா தேவியின் தோற்றத்தை கம்பன் இந்தப் பாடலில் வர்ணிக்கிறான்.

பாடலின் பொருள்:

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் – வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை ஆகிய ஐந்து நிறங்கள் கொண்ட ஆடையை உடுத்தி இருந்தாள்

அரவெல்லாம் அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் – பாம்புகளெல்லாம் கண்டு பயப்படும் கருடனைப் போன்ற கடும் வேகம் கொண்டவள்

அருள் இல்லாள் – இரக்கம் என்பதே சற்றும் இல்லாதவள்

அம் சுவணத்தின் உத்தரியத்தாள் – அழகிய பொன்னாலான மேலாடையை உடையவள்

அலை ஆரும் – அலை பொருந்திய

அம் – கடல் நீரில்

சு – அழகான

வள் – ஒளி பொருந்திய

நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சங்கினின்று பிறந்த முத்துக்கள் ஒளி வீசும் மாலையாகிய அணிகலனைத் தரித்திருந்தாள்.

எப்படி இலங்கா தேவியின் வர்ணனை?

ராவணனின் பெருமை, ராம ராவண யுத்தம், வாலி வதம், அனுமனின் சொல் நயம், பரதனின் மாண்பு, லட்சுமணனின் சேவை, குகனின் நட்பு என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து அவனது கவி நயத்தைச் சொல்லப் போனால் நாள் ஆயிரமும் போதாது; நா ஆயிரமும் போதாது.

கம்பன் திருவரங்கத்தில் தன் கவிதையை அரங்கேற்ற விரும்பினான். ஆனால் அங்குள்ளவர்கள் தில்லை திட்சிதர்கள் ஒப்புக் கொண்டால் இங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்றனர். தில்லை சென்ற கம்பன் அங்குள்ள 3000 தீட்சிதர்களையும் எப்படி ஒருங்கே கூட்டுவது என்று திகைத்தான். ஆனால் அங்கு ஒரு குழந்தை இறக்க 3000 தீட்சிதர்களும் ஒருங்கே கூடினர்.

நாகபாசப்படலத்தைக் கம்பன் பாட இறந்த குழந்தை உயிர் பிழைத்தது. இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய  அனுமதியும் கிடைத்தது. அரங்கேற்றமும் தடையின்றி நடந்தது. கம்பனின் வாழ்வில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் உண்டு. இவற்றைப் பலத் தனிப்பாடல்கள் விளக்குகின்றன.

சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி, மும்மணிக்கோவை உள்ளிட்ட பல நூல்களையும் கம்பன் படைத்துள்ளான்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்

என இவ்வாறு ராம நாமத்தின் சிறப்பைக் கம்பன் கூறுகிறான்..

ராம நாமத்தைத் துதிப்போம்; அதன் பெருமையை உணர்த்தும் கம்பனைப் போற்றுவோம்.

நன்றி வணக்கம்.

Leave a comment

Leave a comment