கனவுகள் பலிக்குமா? (Post No.14,223)

 Carl Jung

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,223

Date uploaded in Sydney, Australia – –20 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

17-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை! 

ஸ்வப்ன சாஸ்திரம்

கனவுகள் பலிக்குமா? 

ச.நாகராஜன் 

கனவுகள் பலிக்குமா?

காலம் காலமாகக் கேட்கப்படும் கேள்வி இது.

நமது சாஸ்திரங்கள் கனவுகளின் பலன்களை வெகுவாக விரித்துக் கூறுகின்றன.

அன்றாட சூரிய வழிபாட்டில் துர் ஸ்வப்னத்தைத் தராதே என்று தொழுது வேண்டிக் கொள்கிறோம்.

சுமார் 15000 ஸ்லோகங்கள் கொண்ட அக்னி புராணம் 229ம் அத்தியாயத்தில் கனவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி நம்மை பிரமிக்க வைக்கிறது.

நல்ல கனவுகள் வந்தால் பின்னர் தூங்கக் கூடாது என்பது அது தரும் அறிவுரை. முதல் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் ஒரு வருடத்திலும், இரண்டாம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் ஆறு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் மூன்று மாதத்திலும் நான்காம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் 15 நாட்களிலும் சூரிய உதய சமயத்தில் காணப்படும் கனவுகள் பத்து நாட்களிலும் பலிக்கும் என்கிறது இந்த புராணம்.

கனவில் யானை,குதிரை, தங்கம், எருது அல்லது பசுவைப் பார்த்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதே போல்ச சுஸ்ருத சம்ஹிதாவும் கனவின் பலன்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

கனவுகள் இல்லாத இலக்கியமே இல்லை.

சிலப்பதிகாரத்தில் கனாத்திறம் உரைத்த காதை என்றே ஒரு காதை இருக்கிறது. அதில் கண்ணகி நடக்கப்போவதைக் காண்கிறாள்.

சீதை அசோகவனத்தில் துன்பத்துடன் வருந்தும் போது திரிஜடை தான் கண்ட கனவை சீதையிடம் கூறி ஆறுதல் தருவது பிரசித்தமானது.

பத்து இடங்களில் கனவு என்னும் சொல்லை ஆளும் திருவள்ளுவர் கனவு நிலை உரைத்தல் என்ற ஒரு அதிகாரத்தையே கனவிற்காக ஒதுக்குகிறார்.(குறட்பாக்கள்: 819,1054,1211,1213,1214,1215,1216,1217,1219,1220

உலகின் ஆகப் பெரும் கணித மேதையான ராமானுஜன் “நாமகிரி அம்மன் கனவில் எனக்கு உள்ளொளி தருகிறாள்” (Namagri would bestow insight in dreams) என்று கூறி தனது கணிதக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் கனவுகளே என்கிறார்.

ஆப்ரஹாம் லிங்கன் 1865ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கண்ட கனவை நண்பர்களிடம் விரிவாகக் கூறினார். அதன்படி தனது மாளிகையில் கிழக்கே இருந்த அறையை நோக்கி அவர் செல்கையில் அங்கு ஏராளமானோர் குழுமி இருக்க சவப்பெட்டி ஒன்றையும் அவர் காண்கிறார். யார் அது என்று கேட்டபோது ஜனாதிபதி என்ற பதில் வருகிறது. தனது மரணத்தை முன்பாகவே கனவில் காண்கிறார் லிங்கன். இதை  வார்ட் ஹில் லமோன் என்பவர் ரிகலெக் ஷன்ஸ் ஆஃப் லிங்கன் என்ற நூலில் விவரிக்கிறார்.

கனவு பற்றி வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்த, வித்தியாசமான பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் கார்ல் ஜங். (பிறப்பு 1875 மறைவு 1961)

ஒரு சமயம் அவரிடம் சிகிச்சை பெற வந்த பெண்மணி தான் கண்ட கனவை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் தனது கனவில் ஒரு மதிப்புள்ள நகை தனக்குத் தரப்பட்டிருந்ததையும் அது வண்டு போலச் செய்யப்பட்ட அணிகின்ற கல் என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜன்னலை யாரோ தட்டும் சப்தத்தைக் கேட்ட ஜங் ஜன்னலைத் திறக்க அவர் கையில் ஒரு பொன்வண்டு வந்து உட்கார்ந்தது. “இதோ நீங்கள் கூறும் வண்டு” என்று ஜங் அந்தப் பெண்மணியிடன் அந்த வண்டைக் காட்ட தான் கனவில் கண்ட அதே வண்டை அவர் பார்த்து பிரமித்து விட்டார்.

ஜங் தன்னிடம் வருவோரிடம் அவர்கள் கண்ட கனவுகளைப் பற்றித் தீவிரமாக விசாரிப்பார். அதற்குத் தக சிகிச்சையை அளிப்பார். ஏராளமான சுவையான கேஸ்கள் அவரிடம் வந்தன. அதையெல்லாம் பார்த்து வியந்த அவர் கனவிற்கான பலன்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

உலகெங்கிலுமிருந்து அவருக்குப் பேசுவதற்கான அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அங்கெல்லாம் அவர் தனது ஆய்வைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

அறிவியலும் நமது சாஸ்திரங்களும் ஆமோதிக்கும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று கனவு!

நல்ல கனவைக் காணலாம்;  “கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே” என்று கூடப் பாடலாம்!

***

Leave a comment

Leave a comment