WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,230
Date uploaded in Sydney, Australia – –22 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
16-2-25 கல்கிஆன்லைன் -இல் பிரசுரமாகியுள்ள கட்டுரை
ஆஹா ஏஐ AI!
ஐயையோ ஏஐ AI !!
ச. நாகராஜன்
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி நாளுக்கு நாள் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
நோபல் பரிசு பெற்ற மேதைகள் உட்பட பலரும் ஐயையோ ஏஐ என்று பயப்படக் காரணம் உண்டுங்க!
சுற்றுப்புறச் சூழலுக்காக நீங்கள் கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று AI CHATBOT சொல்ல ஒரு நல்ல மனிதன் தற்கொலையே செய்து கொண்டான்..
DEEPFAKE பெண்களுக்கு மிக ஆபத்தானது என்று விவரிக்கும் பெண்கள் அது முகங்களை FAKE செய்யும் என்றும் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்றும் கூறுகின்றனர். சில நாடுகளே சட்டபூர்வமான நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்கின்றன என்று கூறும் இந்தப் பெண்கள் ஆபாசமான போர்ன் வீடியோக்கள் உலவ ஆரம்பித்து விட்டன என்கின்றனர்.
படைப்பாளிகளோ – இசை அமைப்பாளர்களாகட்டும், பாடகர்களாகட்டும் – தங்கள் படைப்புகளையும் குரலையும் செயற்கை நுண்ணறிவு காப்பி அடிப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர்.
சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எந்தக் காலத்தில் கேஸ் முடியும்? எவ்வளவு செலவாகும்?
DEEPFAKE உண்மையைத் திரித்து வெளியிடும். இது உலகிற்கே ஆபத்தாக முடியும்.
மக்கள் குழப்பமடைவர். முக்கியமானவற்றை சுலபமாக நழுவ விடுவர். முக்கியமல்லாதவற்றை எடுத்துக் கொண்டு போராட்டத்தில் இறங்குவர்.
படைப்பாற்றல் கொண்டவர்களை இமிடேட் செய்து அவர்களைத் தவிக்கவிடும் AI.
மனிதர்களுக்குத் தேவையானவற்றை எதிர்த்து புது லட்சியங்களை AI உருவாக்கிவிடும்.
தீர்ப்பைத் தருகிறேன் என்று AI தவறான தீர்ப்புகளை அளிக்க ஆரம்பித்தால் மனித குலமே அவ்வளவு தான்!
AIக்கு ஆதரவு தருவோர் அது மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்றோரை உருவாக்கும் என்கின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அதே AI ஒரு ஹிட்லரையோ, ஒரு ஸ்டாலினையோ ஒரு மாசேதுங்கையோ உருவாக்கி விட்டால் ஒட்டு மொத்த மனித குலமே போய்விடுமே என்கின்றனர்!
AIக்கு ஒழுக்கம் அறவுணர்வு MORAL – என்பதே கிடையாது.
டிராக்கில் கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ஒரு டிராலி அதே பாதையில் சென்றால் ஐந்து பேரைக் கொன்று விடும். அந்த ஆபத்தைப் பார்த்து அதை வேறு டிராக்கில் செலுத்தினால் ஒருவன் மட்டுமே கொல்லப்படுவான். என்ன செய்வது?
அற உணர்வின் படி ஒருவன் சாவது சரி, டிராக்கை மாற்றலாம் என்று சொல்லும் போது AI தனக்குக் கொடுத்த கட்டளையின் படி அதே டிராக்கில் தான் டிராலி போக வேண்டும் என்று முடிவு எடுத்தால், ஆறு பேரும் கொல்லப்படுவர்.
இப்படி ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.
AI எவ்வளவு உதவி செய்கிறது தெரியுமா? இந்திய போலீஸ் பத்தாயிரம் குற்றவாளிகளை ஃபேஸ் ரிகாக்னிஷனைப் பயன்படுத்திப் பிடித்திருக்கிறது என்று ஆஹா AIகாரர்கள் வாதிக்கின்றனர்.
அடடா, 50 குறிப்புகளைக் கொடுத்தால் அது 1000 வார்த்தைகள் கொண்ட கட்டுரையைத் தருகிறது என்கின்றனர் அவர்களில் இன்னும் பலர்!
இதே AI பல்வேறு புலனாய்வுக் குழு போலச் செயல்பட்டு டிஜிடல் அரெஸ்ட் செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் செய்திகள் தினமும் எத்தனை வெளி வருகின்றன, அதைப் பாருங்கள் என்கின்றனர் ஐயையோ AIகாரர்கள்.
முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஐக்கியநாடுகளின் சபையை அணுகி இதைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றன.
இதையும் AI தடுத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று ஐயையோ AIகாரர்கள் புலம்புகின்றனர்.
நீங்கள் எந்தப் பக்கம் சார்?!
ஆஹா ஏஐ AI யா?
ஐயையோ ஏஐ AI யா??
***