
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,233
Date uploaded in Sydney, Australia – –23 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
18-2-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
வியக்க வைக்கும் டிடிகாகா ஏரி!
(TITICACA LAKE)
ச.நாகராஜன்
தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பொலிவியாவிற்கும் பெரு நாட்டிற்கும் இடையே உள்ள எல்லையில் ஆண்டஸ் மலையின் மேலே 3200 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது டிடிகாகா ஏரி. (TITICACA LAKE)
பழம் பெரும் இங்கா நாகரிகம் தோன்றிய இடம் டிடிகாகா என்ற இடம் தான் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
சூரிய பகவான் தனது குழந்தைகளை எங்கு ஒரு தங்கத்தினால் ஆன தடி பூமியில் ஊடுருவி இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று வசிக்குமாறு கூற அவர்களும் அப்படியே வந்து டிடிகாகா பகுதியில் அதைக் கண்டனர். அங்கேயே வசிக்கலாயினர். புது நாகரிகம் உருவாயிற்று. இது தான் டிடிகாகா பற்றிய பழம் வரலாறு.
ஆண்டஸ் மலையில் 12500 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த ஏரி உலகத்திலேயே உயரமான இடத்தில் உள்ள ஏரிகளுள் ஒன்று என்ற பெருமையைப் பெறுகிறது. 177 கிலோமீட்டர் அகலம் கொண்டிருப்பதால் உலகின் மிக அகலமான ஏரி என்ற பெருமையும் இதற்கு உண்டு.
1862ம் ஆண்டு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட யாருவி என்ற நீராவிக் கப்பலே முதன் முதலாக இதில் செலுத்தப்பட்ட கப்பலாகும்.
இதன் அதிக ஆழம் 922 அடி. சராசரி ஆழம் 351 அடி.
பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இதன் கரையோரப் பகுதி இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் முதல் மார்ச் வரை மழைக்காலம் என்பதால் ஏரியின் மட்டம் 16 அடி வரை உயரும்! இந்த ஏரியின் பெரும்பகுதி நீர் மழையினாலேயே பெறப்படுகிறது. மீதி நீர் பல்வேறு நதிகளாலும் நீரோடைகளாலும் கொண்டு வரப்படுகிறது.
டிடிகாகா ஏரி உள்ள இடத்தின் உஷ்ணநிலை 11 டிகிரி சென்டிகிரேட். எவ்வளவு குளிரான ஏரி இது என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஆகவே இந்தக் குளிர் பிரதேசத்தில் அவ்வளவாக மலர்க்கொடிகளும் செடிகளும் இல்லை.
மீன்களின் வகையும் இந்த ஏரியில் குறைவு தான்!
இதன் அடியில் ஆய்வு செய்யச் சென்ற ஆய்வாளர்கள் இரண்டு அடி நீளமுள்ள ஏராளமான தவளைகளைக் கண்டு அதிசயித்தனர். தன் தோல் பகுதி மூலம் இவை சுவாசிப்பவை என்பதால் இவை ஏரியின் மேல்பகுதிக்கு வருவதே இல்லை. அரிதாகவே காற்றை சுவாசிக்க வரும்.
இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் நாணலினால் (REED) ஆன படகுகள் மூலமாகவே பயணத்தை மேற்கொள்வது வழக்கம். பழைய கால தோணிகள் போல் வடிவமைப்பைக் கொண்ட இந்த நாணல் படகுகள் பழைய கால எகிப்திய நாகரிகத்தை நினைவு படுத்துகிறது.
ஆகவே, தோர் ஹையர்தால் என்ற நார்வே நாட்டு ஆய்வாளர், இந்த நாகரிகம் எகிப்திலிருந்தே இங்கு பரவி இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
நாணலை வைத்து எப்படிப் படகுகள் செய்ய முடியும் என்று திகைப்பவர்கள் ஆறரை அடி கனமுள்ள நாணல்கற்றைகளால் அமைக்கப்படும் படகைப் பார்த்தால் பிரமித்துப் போவர். நகரும் தீவுகள் போல இவை செயல்பட்டு அங்குள்ளவர்களின் வாழ்வாதாரங்களைப் பெற வழி வகுக்கின்றன.
இங்குள்ள நகரும் தீவுகள் யூரோஸ் (UROS) என்று கூறப்படுகின்றன.

இதில் என்ன அதிசயம் என்றால் இந்த நகரும் தீவுகளுக்குள்ளேயே பள்ளிக்கூடம், சர்ச் மற்றும் வீடுகள் உள்ளன. இதில் மணலைப் பரப்பி செடிகளை நட்டு பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
பல்லாண்டுகளாக இப்படி இந்த மக்கள் வாழ்ந்து வருவது உலகின் மிகப் பெரிய அதிசயமாகக் கருதப்படுகிறது!
பிரமிக்க வைக்கும் டிடிகாகா, வேறு உவமையே கூறமுடியாத டிடிகாகா தான்!
***