WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,238
Date uploaded in Sydney, Australia — 24 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயம்
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஜெய் ஜெய் விட்டலா ஜெய ஹரி விட்டலா
பாண்டுரங்க விட்டலா பண்டரிபுர விட்டலா
ஜெய் ஜெய் விட்டலா ஜெய ஹரி விட்டலா
பாண்டுரங்க விட்டலா பண்டரிபுர விட்டலா
ஜெய் விட்டல் மஹராஜ் கீ ஜெய்
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது மகராஷடிரத்தில் உள்ள புகழ்பெற்ற பண்டரிபுரம் திருத்தலமாகும். பந்தர்பூர் என்றும் இது அழைக்கப்படுகிறது
இத்திருத்தலம் சோலாபூரிலிருந்து 76 கிலோமீட்டர் தூரத்திலும் சாங்கியிலிருந்து 136 கிலோமீட்டர் தூரத்திலும் புனேயிலிருந்து 210 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
இது சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது. நதியின் வடகரையில் விட்டலன் கோவில் உள்ளது. நதியின் தென்கரையில் சங்குபாய் கோவில் உள்ளது. இங்கு சக்குபாய் மாவு அரைத்த இயந்திரம் உள்ளது. இங்கு படகு மூலம் செல்லலாம். சந்திரபாகா நதியில் யாத்ரீகர்கள் ஸ்நானம் செய்து பின் விட்டலனை தரிசனம் செய்கின்றனர்.
இறைவர் : பாண்டுரங்கப் பெருமாள்
இறைவி : ருக்மாபாய்.
தீர்த்தம் : சந்திரபாகா நதி மற்றும் கிருஷ்ண தீர்த்தம்
பண்டரி என்ற இடத்தில் நிற்பதால் இவருக்கு பண்டரிநாதன் என்று பெயர்.
ஈட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல்லின் மீது இவர் நிற்பதால் இடோபா என்ற பெயரையும் பெற்றார். இந்த இடோபா தான் விட்டலன் ஆனார்.
பண்டரிநாதன், பாண்டுரங்கன், விட்டல், விடோபா, விதுமாலி என பல பெயர்கள் இறைவனுக்கு உண்டு.
விட்டலன் என்ற பெயருக்கு துகாராம் மஹராஜ் அறிவு வடிவம் என்ற பொருளைத் தருகிறார். இன்னொரு அர்த்தப்படி ‘வி’ என்றால் கருடன் என்றும் ‘தோபா’ என்றால் அமர்ந்திருப்பவர் என்றும் பொருள் கொண்டு விட்டோபா என்றால் கருடன் மீது அமர்ந்திருப்பவர் என்ற அர்த்தம் பெறப்படுகிறது.
பண்டரிபுர கர்பக்ருஹத்தில் விட்டலன் மட்டும் காட்சி தருகிறார். ருக்மிணி மற்றும் சத்தியபாமா இல்லை.
இந்த ஒரே ஒரு திருத்தலத்தில் மட்டும் தான் பக்தர்கள் கர்பக்ருஹத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பாத ஸ்பரிச தரிசனம் என்ற ஒரு தரிசனம் இங்கு மட்டும் தான் உண்டு. அதாவது மேடையின் அடியில் குனிந்து இறைவனின் பாதத்தில் தங்கள் சிரத்தை வைத்து வழிபட முடியும்.
இங்கு வெளியேயும் உள்ளேயும் நான்கு வாயில்கள் உண்டு. கிழக்கு வாயிலுக்கு நாமதேவ் வாயில் என்று பெயர். கையில் தம்புராவுடன் உள்ள நாமதேவரின் பித்தளை சிலை இங்கு உள்ளது. பிரதான வாயிலின் வழியே நுழைந்தால் மகாமண்டபத்தை அடையலாம். இங்கு தத்தாத்ரேயர் மற்றும் கணபதியை வணங்கி விட்டு அடுத்துள்ள அழகிய மண்டபத்தைக் கடந்து கர்பக்ருஹத்தை அடையலாம்.
விட்டலனின் கொவிலுக்குள் 26 சிறிய கோவில்கள் உண்டு. நாமதேவ பயாரி, கணேஷ் மந்திரி, தத்தா மந்திர், கருட மந்திர், மாருதி மந்திர், சௌரங்கி தேவி மந்திர் என இப்படி பல கோவில்கள் உள்ளன.
இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. ஜானு தேவர் சத்யவதி தம்பதிகளுக்குப் பிறந்த புண்டரீகன் என்னும் பெரும் பக்தன் பெற்றோர்கள் மீது மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவன். பகவான் அவனது பக்தியைச் சோதிக்க எண்ணினார்.
புண்டரீகன் வீட்டில் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்திற்காக இந்திரன் ஒரு செங்கல்லாக மாற்றி வைக்கப்பட்டிருந்தான்.
ஒரு நாள் பகவான் அவனது வீட்டிற்கு வந்தார். அப்போது புண்டரீகன் தன் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான். எனவே இந்திரன் செங்கல்லாக மாறி இருந்த அந்தக் கல்லைத் தூக்கிப் போட்டு அதன் மீது பகவானை சற்று நிற்குமாறு வேண்டினான்.
பகவானின் பாதம் பட்டதும் இந்திரன் சாப விமோசனம் பெற்றுத் தனது சுயரூபத்தை அடைந்தான். இந்திரன் பகவானைப் போற்றித் துதித்தான்.
தனது பணிவிடையை முடித்துக் கொண்டு வந்த புண்டரீகன் பகவானை தரிசித்துப் போற்றித் தொழுதான். விட்டலன் என்ற நாமத்துடன் அங்கேயே அவர் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.
அதன்படியே பகவான் விட்டலனாக இன்றளவும் அங்கு காட்சி தந்து அருள்கிறார்..
பண்டரிபுரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கோபால்பூரும் விஷ்ணுபாதமும் அமைந்துள்ளன.
பத்மபுராணம்,ஸ்கந்தபுராணம் உள்ளிட்ட புராணங்களில் இதன் மகிமை விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது புஷ்கரத்தை விட மூன்று மடங்கும், கேதார்நாத்தை விட ஆறு மடங்கும், வாரணாசியை விட பத்து மடங்கும் ஶ்ரீ சைலத்தை விட பல மடங்கும்
அதிக மகிமை வாய்ந்தது என்று ஸ்கந்தபுராணத்தில் பார்வதிக்கு சிவபிரான் கூறுவது குறிப்பிடத் தகுந்தது.
ஆதி சங்கரர் இயற்றி அருளியுள்ள பாண்டுரங்க அஷ்டகம் பிரசித்தி பெற்ற அஷ்டகமாகும்.
புரந்தரதாசரைப் பற்றியும் இந்தக் கோவிலைப் பற்றியும் கூறும் ஏராளமான சம்பவங்கள் உள்ளன. புரந்தரதாசர் இங்கு ஒரு தூணின் அடியில் அமர்ந்து கிருஷ்ணரைப் பற்றியும் பாண்டுரங்கனைப் பற்றியும் ஏராளமான பாடல்களைப் பாடினார். இந்தத் தூணை ஆரத் தழுவினால் தங்கள் பாவம் போகும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் இந்தத் தூணை பாண்டுரங்களை தரிசிப்பதற்கு முன்னர் தழுவிவிட்டுச் செல்வது வழக்கம்.
பெரும் மகானான கிருஷ்ன சைதன்யர் இங்கு விடோபா கோவிலில் ஏழு நாட்கள் இருந்தார். இன்னும் தியானேஷ்வர், பக்த துகாராம், ஏக்நாத், முக்தாபாய், மீராபாய் போன்ற ஏராளமான மகான்கள் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளனர்,
ஜூன்- ஜுலை (ஆஷாட) மாதத்தில் பத்து லட்சம் பக்தர்கள் இங்கு வந்து திரளுகின்றனர்.
மகராஷ்டிர மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகரமாக பண்டரிபுரம் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பாண்டுரங்கனும் தேவி ருக்மிணியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**
TAGS– பண்டரிபுரம் ,பாண்டுரங்கன் ,ஆலயம்