Post No. 14,249
Date uploaded in Sydney, Australia – 27 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எல்லோருக்கும் முன்னுதாரணமான மனிதன் என்றும் கடவுள் என்றும் பல புலவர்கள் ராமனை வருணித்தனர் . கம்பன் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம் .

ராமபிரான் பற்றி கம்பன்
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்–
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்
****
இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.
****
பிராமணர்கள் செய்யும் தர்ப்பண மந்திரத்தில் ராமன் என்ற நாமத்தைச் சொன்னால் எல்லா பபாவங்களும் அகன்றுவிடும் ; சந்தேகமே இல்லை என்று சொல்லி ஸங்கல்பம் செய்கின்றனர்
தர்ப்பண மந்திரம்
தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரை, பிராமணர்கள் சொல்லுகிறார்கள்:
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம
பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.
****
தியாகராஜர், பத்ராசலம் ராமதாசர் ஆகியோர் ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்டனர் .

மஹாத்மா காந்தி தனக்கு கஷ்டம் நேரிட்டபோதெல்லாம் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று சொன்னார் .
ராம நாமம் பற்றி மஹாத்மா காந்தி பொன்மொழிகள்
இறைவனை அறிய பிரம்மச்சர்யம்
மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது; மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக் காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.
என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம் தீர்வு தரும்; யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.
இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர் கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம் இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும் ஒன்றே அல்லவா ?
மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்.
–ஹரிஜன் இதழ் 22-6-1947
****
ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது!
என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் ; அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .
****
ராமனும் யமனும்!

யார் யாருக்கு ராம பிரான் எதிரி/ யமன் ஆனார் என்று புரந்தரதாசர் ஒரு பட்டியலே தருகிறார்! இதோ அவரது கீர்த்தனை:
யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா
யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)
யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்
ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்
நம்பித விபீஷணகே ராமனாதா
நம்பதித்த ராவணகே யமனாதா (யமனெந்து)
நம்பித அர்ஜுனகே மித்ரனாதா
நம்பதித்த துர்யோதனகே சத்ருவாதா (யமனெந்து)
(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்
நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார் (யமனெந்து)
நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்
நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)
நம்பித ப்ரஹ்லாதனிகே ஹரியாதா
நம்பதித்த ஹிரண்யக்கே குறியாதா (யமனெந்து)
நம்பித உக்ரசேனகே ப்ருத்யனாதா
நம்பதித்த கம்சக்கே சத்ருவாதா (யமனெந்து)
நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்
நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார் (யமனெந்து)
நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்
நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)
நம்பிக்கொள்ளி பேக ஸ்ரீ கிருஷ்ண தேவனா
கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன (யமனெந்து)
ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்
சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள் (யமனெந்து)
–subham—
Tags– ராமன் , யாமன், ராம நாமம் , காந்திஜி, கம்பர், புரந்தரதாசர்