
Post No. 14,251
Date uploaded in Sydney, Australia – –28 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
23-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
சுயமுன்னேற்றம்
எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!!
ச. நாகராஜன்
உங்களுடன் பேசுவதையே ஒரு பாக்கியமாக மற்றவர் நினைக்க வேண்டுமா?
அனைவரும் மிக்க நட்புடன் முதல் சாய்ஸாக உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
இதோ இருக்கிறது தங்க விதிகள் ஆறு.
இதைக் கடைப்பிடியுங்கள். அப்புறம் பாருங்கள், நீங்கள் எப்படி மதிக்கப்படுகிறீர்கள் என்று!
1) இடையில் குறுக்கிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்.
நண்பர்களோ அல்லது அலுவலக அதிகாரிகளோ உங்களுடன் பேசும் போது இடையிட்டுக் குறுக்கே பேசுவதை நிறுத்துங்கள். அது மட்டுமல்ல, உங்கள் மனதிற்குள் பேசுவதையும் நிறுத்துங்கள். பேசுபவர் பேசி முடிக்கட்டும்.
மற்றவர்களுக்காக அவர்களது வார்த்தைகளை நாமே உருவாக்கீப் பேசி முடிக்க நாம் எப்போதுமே ரெடி தான். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், என்ன வார்த்தைகளை பயன்படுத்தப் போகிறார்கள் என்று அறியும் மகாத்மாக்ககள் நாம் தான்! – இது தான் எல்லோருடைய பொதுவான அணுகுமுறை. இதை விட்டொழியுங்கள்!
அவர்கள் பேசுவதைப் பேசி முடிக்கட்டும் – அவர்கள் பாணியில், அவர்கள் சொற்களாலேயே!
2) ஓய்வுடன் இருங்கள். மனச்சோர்வு, கவலை, டென்ஷன் ஆகியவை உங்கள் கேட்கும் திறனைப் பெருமளவு இழக்கச் செய்கிறது.
3) எதிரில் பேசுபவரை ஆவலுடன் பேசும்படி செய்யுங்கள். நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள், விருப்பத்துடன் செவி மடுக்கிறீர்கள் என்பதை அவர் நன்கு உணர வேண்டும். அவர் முகத்தைப் பார்க்காமல் அவர் தோளையோ அல்லது எங்கேயோ ஒரு மூலையையோ பார்க்காமல் அவரையே கவனியுங்கள். ஒருவேளை அவர் சொல்வதில் குறிப்புகள் எடுக்க வேண்டுமெனில் அது எவ்வளவு முக்கியமானது என்றும் உங்கள் நினைவாற்றல் திறன் சற்று குறைவு தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். இது அவருக்குப் பெருமையைத் தான் தரும்.
4) நீங்கள் எதிரில் இருப்பவரின் பேச்சைக் கேட்பது அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காகத் தான். அவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராக விவாதத்தில் பயன்படுத்தலாம் என்பதற்காக அல்ல – இதை நினைவில் கொள்ளுங்கள்.
5) உங்களுக்கென்று ஒவ்வொரு விஷயத்திலும் அபிப்ராயம் உண்டு தான்! அது எதிரிலிருப்பவர் சொல்வதற்கு மாறாகவும் இருக்கக் கூடும். ஆகவே உங்கள் அபிப்ராயங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ளார்ந்த முனைப்புடன் அவர் சொல்வதை முழுவதுமாகக் கவனியுங்கள்.
6) தர்க்கரீதியாக மட்டும் கேட்பது போதாது; உணர்ச்சியுடனும் கேட்க வேண்டும். அவர் மூளையிலும் இதயத்திலும் நீங்கள் இடம் பெற வேண்டும். பேசும் போது அவர் சொல்லாமல் விட்டதையும் நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். ஒருவர் சொல்லாமல் விடுவது சொல்வதை விட சில சமயம் முக்கியமானதாக இருக்கக் கூடும். கேட்பது ஒரு உயிருள்ள இயக்கம், அதுவும் ஒருவரை முதல் முறையாக நீங்கள் பார்த்துப் பேசுகிறீர்கள் என்றால் இது மிக மிக முக்கியம். இந்தச் சமயத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதற்கு அதிக நேரம் கொடுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கிக் கொள்ளுங்கள்!
இனி பாருங்கள், நட்பு வட்டம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உங்களின் மதிப்பு எப்படி கூடுகிறதென்று!
திருவள்ளுவர் கூறுவது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது:-
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. குறள் 419
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
**