Post No. 14,254
Date uploaded in Sydney, Australia – –1 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரதத் துளிகள்!
ச.நாகராஜன்
மூன்று வில்கள்: பினாகம், சார்ங்கம், காண்டீவம்!
உமா தேவிக்கு சிவபிரான் உரைத்தது:
முன்னொரு யுகத்தில் கண்வர் என்னும் ஒரு மஹரிஷி இருந்தா. அவர் அற்புதமான தவம்செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு கடும் தவம் செய்யும் போது அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டாயிற்று. புற்று இருந்ததனால் அவர் தலையில் மூங்கில் முளைத்தது. அவற்றையெல்லாம் அவர் தாங்கிக் கொண்டு முன் போலவே தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்மதேவர் அவருக்கு வரங்கொடுக்கப் போனார். அவர் அவருக்கு வரம் அளித்த பிறகு, அந்த மூங்கிலைப் பார்த்து அதனால் உலகிற்கு உபயோகம் செய்வதைக் குறித்து ஆலோசித்தார்.
ஆலோசித்தபிறகு, அந்த மூங்கிலை எடுத்து வில்லாகச் செய்வித்தார்.
உலகங்களைப் படைத்தவராகிய பிரம்மதேவர் அப்போது விஷ்ணுவிடத்திலும் என்னிடமுத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து விஷ்ணுவுக்கும் எனக்குமாக இரண்டு விற்களைத் தந்தார்.
பினாகமென்பது என் வில்.
சார்ங்கமென்பது விஷ்ணுவின் வில்.
மிகுதியுள்ள மூங்கிலினால் காண்டீவம் என்னும் மூன்றாவது வில் உண்டாயிற்று. அதைச் சந்திரனுக்குக் கொடுத்து ப்ரம்மா திரும்பத் தன் உலகம் சென்றார்.
– அநுசாஸன பர்வம் அத் 206
சிவபிரானைத் தொழுவதால் ஏற்படும் பலன்கள்!
யுதிஷ்டிரரிடம் கிருஷ்ணர் தனக்கு உபமன்யு கூறியதை விளக்குகிறார் இப்படி: (அநுசாஸனபரவம்ம் 49வது அத்தியாயம்)
மனத்தினாலாவது சிவனைச் சரணம் அடையும் மனிதர்கள் எல்லாப் பாவங்களையும் நீக்கித் தேவர்களுடன் வசிப்பர். குளம், ஆறு முதலியவற்றின் கரைகளைப் பலமுறை இடித்தும் இவ்வுலகம் அனைத்தையும் தீயில் போட்டும் இருப்பவனும் ஈஸ்வரரைப் பூஜை செய்வானாயின் அவனை அப்பாவம் பற்றாது.
எல்லா நற்குணங்களும் குன்றி எல்லாப் பாவங்களோடும் சேர்ந்திருந்தாலும் சிவனை மனத்தினால் தியானிப்பவன் அந்தப் பாவங்கள் அனைத்தையும் ஓட்டி விடுகிறான். மகாதேவரைச் சரணம் அடைந்த புழு, பக்ஷி, விட்டில், மிருகங்கள் இவற்றிற்கும் கூட எங்கும் பயம் இராது. ஆப்படியே பூமியில் சிவபக்தியுள்ள மனிதர்கள் சம்சாரத்திற்கு உட்படமாட்டார்கள்.”
எந்த திசையில் யாருக்கு பலி போட வேண்டும்?
பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு வாசுதேவருக்கும் பூமி தேவிக்கும் நடந்த ஒரு உரையாடலைத் தெரிவிக்கிறார்.
பூமிதேவி மாதவரிடம் கூறுகிறாள் “மாதவரே! தெற்கில் யமனுக்கும் மேற்கில் வருணனுக்கும் வடக்கில் சந்திரனுக்கும் நடுவீட்டில் பிரம்மதேவருக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் கிழக்கில் இந்திரனுக்கும் வீட்டின் வாயிலில் மனிதர்களுக்கும் என்று சொல்லிப் பலி போடச் சொல்லுகின்றனர். மருத்துக்களுக்கும் தேவர்களுக்கும் பலியை வீட்டின் உட்புறத்தில் போட வேண்டும். விசுவதேவர்களுக்கு பலியை ஆகாயத்தில் போட வேண்டும். இரவில் சஞ்சரிக்கும் பேய், பிசாசுகளுக்கு பலியை இரவில் போட வேண்டும். இவ்வாறு பலியை நன்றாகப் போட்ட பிறகு பிராம்மணனுக்கு பிக்ஷையிட வேண்டும். பிராம்மணன் கிடைக்காத போது முதல் அன்னத்தை எடுத்து அக்னியில் போட வேண்டும்.
– அநுசாஸன பர்வம் 154வது அத்தியாயம்
***