WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,286
Date uploaded in Sydney, Australia — 10 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை!
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
மருந்து அவை மந்திரம் மறுமை நன் நெறி அவை மற்றும் எல்லாம்
அருந்துயர் கெடும், அவர் நாமமே சிந்தை செய் நன் நெஞ்சமே
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூஞ்
செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது சிவபெருமான் நடனமாடிய ஐந்து தலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி திருத்தலமாகும்.
இது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தத் தலமானது சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்த தலமாகும்.
இறைவன் : நெல்லையப்பர் வேணுவன நாதர் உள்ளிட்ட பல பெயர்கள்
இறைவி: காந்திமதியம்ம, வடிவுடையம்மை
தீர்த்தம் : பொற்றாமரைக் குளம், கருமாரி தீர்த்தம், சிந்து பூந்துறை
தல விருட்சம் : மூங்கில்
இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான பழமையான வரலாறுகள் உண்டு.
திருநெல்வேலி என்ற ஊரின் பெயருக்கான காரணத்தைக் கூறும் மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.
இன்னொரு வரலாறும் உண்டு.
முன்பொரு காலத்தில் ராம கோனார் என்பவர் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார் அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன ராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.
இது ஐந்து கோபுரங்களைக் கொண்டுள்ளது.
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இக்கோவிலின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இங்கு பல அழகிய மண்டபங்கள் உள்ளன.
இங்குள்ள மணிமண்டபத்தின் நடுவில் தொங்கும் மணி ஒன்று உள்ளது. அதன் பெயரால் மணிமண்டபம் என்று இது அழைக்கப்படுகிறது.
இங்கு இசைத் தூண்கள் ஒரு பாறையைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன,
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டதாக விளங்குகிறது.
இங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் 96 தூண்கள் உள்ளன. இவை 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. திருக்கல்யாணத்திற்குப் பிறகு, இறைவனும் இறைவியும் இந்த மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் ஆடுகின்றனர்.
இங்குள்ள சோமாவர் மண்டபம் கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 78 பெரிய தூண்களைக் கொண்டுள்ளது.
இங்குள்ள சங்கிலி மண்டபம் சுவாமி சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் இணைக்கிறது. ஆகவே இது சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் தலம் இது. அருணாசலக் கவிராயர், சொக்கநாத பிள்ளை உள்ளிட்டோர் இறைவனைப் போற்றித் துதித்துப் பாடல்களை இயற்றியுள்ளனர்.
முத்துசாமி தீட்சிதர் இங்குள்ள தேவி சந்நிதியில் தேவி மீது ஹேமாவதி ராகத்தில் “ஸ்ரீ காந்திமதிம்” என்ற கீர்த்தனையைப் பாடியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நெல்லையப்பரும் காந்திமதி அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**