Post No. 14,297
Date uploaded in London – 22 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செங்குத்தாக ஏறும் 272 படிகள் !
140 அடி உயர தங்க நிற முருகன்!!
40 அடி நீள துர்க்கை!!!
BATU CAVES NEAR KUALA LUMPUR IN MALAYSIA
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது சிங்கப்பூரில் இறங்கி முத்துமாரியம்மனைத் தரிசித்தோம். ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்குத் திரும்பிச் செல்லுகையில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தங்கி அங்கு பத்துமலைக் குகையில் Batu Caves உள்ள முருகனைத் தரிசித்தோம்.
நாங்கள் அங்கே சென்ற தேதி 13-3-2025
அங்கே மலைமீது முருகன் குடிகொண்டுள்ளார். கீழேயோ ஏகப்பட்ட சாமிகள்; கோவில்கள் .
நீங்களும் பத்து மலை முருகனைத் தரிசிக்க சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்
இது இருக்கும் பகுதியை செலாங்க்கூர் என்று அழைப்பார்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தங்க நிற முருகன் பொம்மையின் உயரம் 140 அடி.
குகைகளும் மலையும் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையான இயற்கை அமைப்பு ஆகும் ; இதை கால்சிய உப்பு மலைகள் என்பர்
நகரின் மையப்பகுதியிலிருந்து காரில் செல்ல அரைமணி நேரம் தான் ; நல்ல பார்க்கிங் Parking வசதி இருப்பதால் காரை நிறுத்திவிட்டு மலையில் ஏறலாம். மலேசியா துலுக்க பூமி. ஆனால் கோவில் வளாகத்திலுள்ள உணவுவிடுதிகள் அனைத்தும் நல்ல சைவ– வெஜிட்டேரியன் உணவகங்கள். நாங்கள் முருகனைத் தரிசித்த பின்னர் சாப்பிட்டோம்.
மலைக்குப்போகும் முன்னர், கீழே கணபதியைத் தரிசித்தூப். பின்னர் முருகனைப் பார்க்க மலையில் ஏறினோம். உயரமான படிகள் ; நமது வீடுகளில் பத்து அல்லது இருபது படிகள் இருந்தால் கூட வயது ஆக ஆக நாம் கஷ்டப்படுவோம். பத்து மாலையிலோ சுமார் 272 படிகள். அதுவும் உயர உயர போய்க்கொண்டே இருக்கிறது .ஆங்காங்கு உள்ள மேடையில் தங்கிச் செல்லவேண்டும்.
மேலே செல்லும்போது குரங்குத் தொல்லை மிக அதிகம். என் கைப் பையை குரங்குகள் இரண்டு முறை சோதனை செய்தன நான் விரட்ட வேண்டியதாயிற்று.
நாங்கள் சென்றபோது போட்டோ எடுக்காத ஆளே இல்லை ; செல்பி எடுக்காத ஆட்கள் இல்லை. பக்தர்கள் பாதி என்றால், வேடிக்கை பார்க்கவந்த டூரிஸ்டுகள் பாதி; அவர்கள் வெளிநாட்டினர் மற்றும் சீனர்கள் ஆவர்.
மலை உச்சிக்குச் சென்ற பின்னர் முருகன் , சிறிய கோவிலில் உள்ளார். படாடோபம், பந்தா எதுவுமில்லை. எனக்கு எனது மதுரை அருகிலுள்ள பழமுதிர்ச் சோலையை நினைவுபடுத்தியது . மலையின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மொட்டை மலை. அதிகம் செடி கொடிகள் இல்லை கீழே இறங்குவதும் கடினம்தான் இதற்குக் காரணம் செங்குத்தாக இறங்கும் படிகள்
தைப்பூசத் திருநாளின்போது போனால் கோவிலை நெருங்க முடியாது .
கீழே வந்தவுடன் பெருமாள் கோவில், அனுமார் கோவில், துர்கா கோவில்களைத் தரிசித்தோம். எந்தக் கோவிலுக்கும் நுழைவுக் கட்டணம் கிடையாது .
அனுமார் கோவில் அருகில் கட்டணம் கொடுத்துப் பார்க்கக்கூடிய ராமாயணக் காட்சி சாலை, கீதோபதேசக் காட்சிகள் உள்ளன. எங்களுக்கு நேரம் இல்லாததால் பார்க்கவில்லை இது தவிர ஐயப்பன் கோவிலும் உளதாம் ஆண்டுதோறும் அய்யப்பன் சீசனில் இரு முடி கட்டுவது அங்குதான்.
****
நாற்பது அடி துர்க்கை
துர்க்கை கோவிலில் தமிழ் நாட்டிலுள்ள கோவில் போல அழகான துர்க்கை விக்கிரகம். எல்லா இடங்களிலும் இந்திய அர்ச்சகர்கள்தான் அந்தக் கோவிலில் சந்நிதிக்கு வெளியே ஒரு அன்பர் நாற்பது அடி நீளமுள்ள துர்க்கை பொம்மையை வைத்துள்ளார் .
பக்தர் கூட்டத்துக்கும், குரங்குக்கு கூட்டத்துக்கும் போட்டோ எடுக்கும் டூரிஸ்ட் கூட்டத்துக்கும் குறைவில்லாத இடம்! கீழே கூண்டுகளில் பறவைகள் வைக்கப்பட்டுள்ளன. மயில்களையும் வைத்துள்ளார்கள் லண்டன் ட்ரபால்கர் ஸ்கொயர் போல ஏராளமான புறாக்கள் வேறு உள்ளன. மயில்கள் அகவும் ஒலி யையும் கேட்கலாம்
பத்து மலை என்றவுடன் தங்க நிறத்தில் நிற்கும் பிரம்மாண்டமான முருகன் சிலைதான் நம் மனக் கண் முன் வரும். அது வெறும் அலங்கார உருவமே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ஆனால் மலை மீதுள்ள முருகனோ உருவத்தில் சிறியவர். அவரை வணங்கத்தான் இத்தனை கூட்டம்!
பல காரணங்களை சொல்லி பத்துமலையை மட்டம் தட்ட, அதாவது உயரத்தைக் குறைக்,க இந்து விரோத சக்திகள் குரல் கொடுத்தன . ஆயினும் இது வரை முருக பக்தர்கள் கை ஓங்கியே இருக்கிறது எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று சொல்வதற்கில்லை . விரைவில் தரிசித்துவிடுங்கள்.
மலைக்குச் செல்லும் வழியில் உள்ள மயில் பொம்மைகள் , பெருமாள் கோவில் மலைக்கு அருகில் உள்ள பெரிய கருடன் பொம்மை, மிக உயரமான அனுமார் சிலை ஆகியன பார்த்து ரசிக்க வேண்டியவை .
–subham—
Tags- பத்து மலை, மலேசியா, முருகன் , பார்க்க வாருங்கள்,
செங்குத்தாக ஏறும் 272 படிகள் , 140 அடி உயர தங்க நிற முருகன்,
40 அடி நீள துர்க்கை, குகைக் கோவில்