
Post No. 14,299
Date uploaded in London – –23 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 4-3-25 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
வெற்றிக்கு பெங்சுயி வழியைக் காட்டும் லில்லியன் டூ!
ச. நாகராஜன்

உலகின் ஆகப் பெரும் பெங்சுயி நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கிறார் மலாசியாவைச் சேர்ந்த லில்லியன் டூ (LILLIAN TOO).
பெங் சுயி பற்றி 200க்கும் மேற்பட்ட வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களை எழுதியவர் இவர்.
இவரது புத்தகங்கள் 30 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
சுமார் 60 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.
ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார் லில்லியன் டூ. பின்னர் சாதாரண வங்கி ஊழியராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் அவர்.
பெங்சுயி பற்றி அவருக்கு ஆர்வம் எழுந்தது. அதை நன்கு கற்றார். வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றார். தனது வெற்றியை மற்றவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பெங்சுயி பற்றிய வகுப்புகளையும் இன்று வரை நடத்தி வருகிறார்.
தனது வெற்றிக்கான முக்கியமான காரணங்களாக அவை கூறும் காரணங்கள் இரண்டு:
1) “ஓம் மணிபத்மே ஹூம்” என்ற மந்திரத்தை 10 லட்சம் முறை ஜபித்தது முதல் காரணம்.
2) அடுத்த காரணம் சீனர்கள் புனிதமாகக் கருதக் கூடிய ‘டிராகன்’ வடிவுடைய அரவணா என்ற மீனை வளர்த்தது.
மணிபத்மே ஹூம் மந்திரம் வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்த்தும் புத்தமத மந்திரம் ஆகும். அது அதிக செல்வத்தையும் தரும். இதை ஜபிக்க ஆரம்பித்தவுடன் ஹாங்காங்கில் வேலை பார்த்து வந்த அவர் வேலையை விட்டு விட்டு பெரும் பெங்சுயி நிபூணராக மாறினார். வாழ்க்கையின் குறிக்கோள்,, அதை அடையும் வழி ஆகியவற்றை உணர்ந்தார்.
அரவனா மீன் என்பது செல்வத்தையும் அதிகாரத்தையும் குறிக்கும் ஒரு வகை மீனாகும். அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஒருங்கே சேர்த்து இது தரும். இந்த மீனை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்தாலேயே பணம் வந்து குவியும் .புகழ் பெருகும்.
மீனைக் கடையில் வாங்கி உரிய முறையில் வளர்த்தால் இதன் பலனை நேரடியாக அனுபவிக்கலாம். இல்லையேல் முதலில் அந்த மீனின் சின்னத்தை வாங்கி அதை வீட்டில் வைத்துப் பார்த்து நல்ல பலனைப் பெறலாம்.
பணத்தோடு வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தை அளிப்பதால் இதை பேரரசர் என்று சீனாவில் அழைப்பது வழக்கம்.
இப்படி மந்திரத்தாலும் அரவணா மீனாலும் பெரும் புகழ் பெற்ற லில்லியன் டூ மற்றவர்களுக்கும் தான் உணர்ந்த உண்மைகளைக் கூற ஆர,ம்பித்தார்.
ஒருவனின் உள்ளத்தூய்மையும் மனப்பாங்கும் அவனது உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது இவரது கொள்கை.
வீட்டில் வேண்டாத பொருள்களை வெளியே தூக்கி எறி என்பது இவர் செல்வம் பெறக் கூறும் முதல் வழி. DECLUTTERING என்னும் வேண்டாத குப்பையை அகற்றும் வழி மகத்தான ரகசியத்தைக் கொண்ட வழி. அதே போல உள்ளத்திலிருந்தும் கசப்புகளையும் அழுக்குகளையும் வெளியே தூக்கி எறி என்கிறார் இவர்.
ஒருவர் இவரிடம் வந்து ,”மேடம், நீங்கள் கூறியபடி என் எண்ணத்தைச் சீராக்கி உள்ளேன். எனக்கு ஒரு கார் வேண்டும். இதை அடைவது தான் என் லட்சியம்” என்றார்.
உடனே லில்லியன் டூ. அவரிடம்,” கட்டாயம் கிடைக்கும். கார் வேண்டும் என்பதை மனதில் புரோகிராம் செய்யுங்கள். கிடைத்தால் எப்படி எல்லாம் இருப்பீர்கள் என்பதை கற்பனை செய்து மகிழ்ச்சியை உணருங்கள்’ என்றார்.
அவரும் அப்படியே செய்தார்.
லில்லியன் டூவுக்கு ஒரு போன் வந்தது – அவரிடமிருந்து.
“கார் கிடைத்து விட்டது” என்று மகிழ்ச்சியுடன் அவர் கூவினார்.
அத்தோடு அவர் கேட்டார்: “மேடம், நான் இதற்குத் தகுதி உடையவன் தானா? என்று.
லில்லியன் டூ, “நீங்கள் தகுதி உள்ளவர் என்பதால் தானே இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அனுபவியுங்கள்: என்றார்.
ஆனால் தொடர்ந்து அவர் தான் அந்தக் காரைப் பெறத் தகுதி இல்லாதவன் என்றே நினைத்தார்.
விளவு இன்னொரு போன் அவரிடமிருந்து லில்லியன் டூவுக்கு வந்தது; “மேடம்! கார் திருடு போய்விட்டது!” என்று.
மனதின் சக்தி மகோன்னதமானது. அதன் சக்தி ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.
இதை உணர்பவர்கள் வெற்றி பெறுவர். இதற்கு நூற்றுக் கணக்கான் பெங்சுயி வழிமுறைகள் உதவி புரிகின்றன.
அவற்றைக் கற்று கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் லில்லியன் டூ!
***