ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 23-3-2025 (Post No.14,305)

Written by London Swaminathan

Post No. 14,305

Date uploaded in London –  24 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM NATIONAL NEWSPAPERS AND EDITED BY ME

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 23-3-2025

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும்   வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 23–ம் தேதி 2025-ம் ஆண்டு

****

முதலில் பகவத் கீதை செய்தி

பகவத் கீதை பற்றி சுனிதா வில்லியம்ஸ்

9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் மன அமைதி பெறுவதற்காக விண்வெளிக்கு பகவத் கீதையையும் கொண்டு சென்றார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தனர்.

அவர்களின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மீண்டும் பூமிக்கு திரும்புவதில் தாமதத்தை ஏற்படுத்தின.

இப்போது  இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 17 மணிநேரம் பயணம் செய்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.

புளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும் போது தன்னுடன் பகவத் கீதை மற்றும் சமோசாவை எடுத்துச் சென்றுள்ளார். அதோடு அவர் விநாயகர் சிலையையும் கொண்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து சுனிதா கூறுகையில், “பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. பகவத் கீதையை எனது தந்தை எனக்கு பரிசளித்தார்.

பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது” என்றார். 

****

துளசி செடியை அவமதித்த ஹக்கீம் மீது வழக்கு

புனித துளசி செடி அவமதிப்பு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவு

கேரளாவில் துளசி மாடத்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வீடியோ பதிவேற்றியவர் கைது;

குற்றத்தில் ஈடுபட்டவரை முதலில் கைது செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

“துளசித்தாராவை (துளசி மாடம்) அவமதித்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக “சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க” கேரள உயர் நீதிமன்றம்,  மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. துளசித்தாரா என்பது புனித துளசி செடியைக் கொண்ட வீடுகளுக்கு முன்னால் உள்ள ஒரு உயர்ந்த மேடை ஆகும்.

ஆலப்புழாவைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீராஜ் ஆர்.ஏ.,வின் ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வு காவல்துறைக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது. அப்துல் ஹக்கீம் என்ற நபர் “துளசித்தாராவை அவமதிப்பது” போன்ற வீடியோவை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஸ்ரீராஜ் கைது செய்யப்பட்டார்.

திருச்சூரில் உள்ள குருவாயூரில் உள்ள கோயில் காவல் நிலையத்தில் மதங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் தொந்தரவு செய்ததாக ஸ்ரீராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது மற்றும் அப்துல் ஹக்கீம் இன்னும் சுதந்திரமாக இருக்கும்போது ராஜ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

“துளசித்தாரா இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு புனிதமான இடம். மேற்கண்ட அப்துல் ஹக்கீம் தனது முடிகளைப் பறித்து ‘துளசித்தாரா’வில் வைப்பதை வீடியோவில் காணலாம். இது நிச்சயமாக இந்து மதங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். அப்துல் ஹக்கீம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அப்துல் ஹக்கீம் குருவாயூர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர் என்று தெரிகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், “இப்போது கூட அந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது,. அத்தகைய நபர் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்கப்படுகிறார், மேலும் மனுதாரர் இங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்” என்று நீதிமன்றம் கூறியது.

அப்துல் ஹக்கீம் ஒரு மன உளைச்சலுக்கு ஆளான மனிதர் என்று அரசு தரப்பு வாதிட்டது, ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது, அவர் எப்படி தொடர்ந்து கோவிலின் வளாகத்திற்கு வெளியே செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பியது. “அவர் ஒரு மனநோயாளி என்றால், அவர் எப்படி வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார் என்பதும் புலனாய்வு அதிகாரியால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்” என்று நீதிமன்றம் கூறியது.

*****

வெடிகுண்டுத்  தாக்குதலில் இருந்து தப்பியது  இறைவனின் சக்தியை காட்டுகிறது —சந்திரபாபு நாயுடு பேட்டி

திருப்பதி வெங்கடாசலபதி  கோவிலில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்ற முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.

நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோவில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோவில்கள் நிறுவப்பட வேண்டும்என பல பக்தர்கள் விரும்புகிறார்கள் என்று பத்திரிகையாளருடன் பேசுகையில் தெரிவித்தார்

ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது என்றும் சந்திரபாபு   நாயுடு   கூறினார்  .

*****

ஜெகநாதர் ரத யாத்திரை விவகாரம்: இஸ்கான்- பூரி கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை


ஒடிசாவின் பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இந்த ரத யாத்திரையானது இந்து நாட்காட்டியின் ஆஷாட மாதத்தில் வேத வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். பூரியில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை ரத யாத்திரை நடைபெற்றது. பூரி நகரில்ரத யாத்திரை நடைபெறும் போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை நடத்தப்படும். இஸ்கான் அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த  காலகட்டத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை நடத்தப்படும்.

வெளிநாடுகளில் இஸ்கான் நடத்தும் ஜெகநாதர் ரதயாத்திரையானது, பூரி ரத யாத்திரை மரபுகளில் இருந்து விலகி, வேதப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாள் அல்லாமல் வேறுநாட்களில் நடத்தப்படுகிறது. இந்து இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக பூரி கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு மெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நவம்பர் 9-ம் தேதி நடத்தவிருந்த ரத யாத்திரை, பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் பூரி மன்னரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டத.

இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, மரபுகளின் படி ஒரே நாளில் ரத யாத்திரையை நடத்துவது தொடர்பாக இஸ்கான் அமைப்புடன் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பூரி மன்னர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜெகநாதர் கோவில் நிர்வாகிகள் மற்றும் இஸ்கான்     பிரதிநிதிகள் பங்கேற்றனர். காலந்தவறி ரத யாத்திரையை நடத்துவது, கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது .

இதுபற்றி ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது.எங்கள் கவலைகளை இஸ்கான் பிரதிநிதிகளிடம் தெரிவித்தோம். மேலும் பூரியில் நடத்தப்படும் ரத யாத்திரை அட்டவணைப்படி உலகம் முழுவதும் நடத்தும்படி கேட்டுக் கொண்டோம்  என்று அரவிந்த பதி சொன்னார்.

*****

அறநிலையத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:

ஹிந்து சமய அறநிலைய துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விபரம்:

பெயர் – தற்போது பணிபுரியும் இடம் – புதிய பணியிடம்

ஜோதி – அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை – கடலுார்

பரணிதரன் – கடலுார் – அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை

மாரியப்பன் – அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் – மதுரை

செல்லதுரை – மதுரை – ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

சிவராம்குமார் – ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் – அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

*****

கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக் கோவில்களை சூறையாடி விக்கிரகக்ங்களை உடைத்து தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் கஜினி நகருக்கு எடுத்துச் சென்றவன் கஜினி முகமது .

உத்தரப்பிரத்தேசத்தில்  உள்ள சம்​பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்​டு​தோறும் முஸ்​லிம்​கள் ஒரு விழா நடத்​துகின்​றனர். இந்த விழா​வானது சையது சாலார் மசூத் காஜி என்​பவர் பெயரில் கடந்த 47 ஆண்​டு​களாக நடக்​கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்​பல் மாவட்ட காவல் துறை அனு​மதி அளிக்க மறுத்​துள்​ளது. இதற்கு நம் நாட்​டின் மீது படையெடுத்​தவர்​களை​யும், கொள்​ளை​யடித்​தவர்​களை​யும் கொண்​டாட தேவை​யில்​லை” என்று காரணம் கூறி​யுள்​ளது.

கஜ்​னா​வி​யில் இருந்து இந்​தி​யா​வுக்கு படையெடுத்து வந்த முஸ்​லிம் மன்​னர் முகமது கஜினி​யின் சகோ​தரி மகன்​தான் சாலார் மசூத் காஜி. கஜினி​யின் படை தளப​தி​யாக​வும் இருந்​தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்​நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்​ளை​யடித்​த​தாக வரலாற்று பதிவு​கள் உள்​ளன. அப்​போது கஜினி​யுடன் அவரது மரு​மகன் சாலார் மசூதும் இருந்​துள்​ளார்.

பிறகு ஒரு தனிப்​படை​யுடன் தற்​போதைய உ.பி.க்​கும் சாலார் மசூத் வந்​தார். சம்​பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்​னனை கொன்​றார். இந்த வெற்​றி​யின் நினை​வாகவே அவரது பெயரில் சம்​பலிலும், அரு​கிலுள்ள முரா​தா​பாத் மற்​றும் சஹரான்​பூரிலும் நேஜா விழா நடத்​தப்​படு​கிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்​லை​யில் உள்ள பைரைச்​சிற்​கும் சென்​றார்.

இன்​றைய உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள பைரைச்​சில் அப்​போது குறுநில மன்​னர் சுஹல்​தேவ் ஆட்சி இருந்​தது. தம்​முடன் மேலும் 21 குறுநில மன்​னர்​களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்​கொண்​டார் சுஹல்​தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படை​யால் சாலார் மசூத் கொல்​லப்​பட்​டார். அப்​போது பைரைச்​சிலேயே சாலார் மசூத் உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது. அந்த கல்​லறை மீது 1250-ல் துக்​ளக் வம்​சத்​தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்​டி​னார். தற்​போது, முஸ்​லிம்​கள் இடையே பிரபல​மான சாலார் மசூத் தர்கா​வுக்கு ஆண்​டு​தோறும் உருஸ் எனும் சந்​தனக்​கூடு விழா நடை​பெறுகிறது.

இந்த விழாவுக்கு நிரந்தர தடை​வி​திக்க கோரி இந்​து அமைப்​பினர் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்துக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர்.

*****

R S S ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் தொடக்கம்!

பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்- என்னும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.

பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், மார்ச்  23ம் தேதி வரை ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வந்த அவர், பாரத மாதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 450 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள் .

இந்த ஆண்டு ஆர் எஸ் ஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது

உலகிலேயே மிகப்பெரிய தொண்டர் அமைப்பு ஆர் எஸ் எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும்   வாசித்த செய்தி மடல்

அடுத்த ஒளிபரப்பு

மார்ச் 30 –ஆம் தேதி லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—subham—

TAGS ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 23-3-25

Leave a comment

Leave a comment