மகிழ்ச்சி அலைகள் வீசும் கோவா கடற்கரைகள்! (Post.14,308)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,308

Date uploaded in London – –25 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-3-2025 மாலைமலரில் வெளியாகியுள்ள கட்டுரை!

சுற்றுலா இடங்கள்! 

மகிழ்ச்சி அலைகள் வீசும் கோவா கடற்கரைகள்! 

ச. நாகராஜன் 

கோடையின் உக்கிரம் தாங்க முடியாத நிலையில் சற்று உடலும் மனமும் ஓய்வெடுக்க உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவசியமே!

கடற்கரையும் இருக்க வேண்டும்; நீர் வீழ்ச்சியும் வேண்டும்; பல சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டைகளையும் பார்க்க வேண்டும், தவறாமல் சுவாமி தரிசனமும் செய்ய வேண்டும் – ஒரு இடம் சொல்லுங்கள் என்றால் நம் கண் முன் பளிச்சென்று தோன்றுவது கோவா தான்!

துடிப்பும் உல்லாசமும் உள்ள கேளிக்கை நகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கோவா ஒரு சொர்க்கம் தான்!

இந்தியாவின் மேற்குப் பக்க கடற்கரையாக அரபிக் கடலோரம் அமைந்துள்ளது கோவா.

மகராஷ்டிர மாநிலம் வடக்கிலும், கர்நாடக மாநிலம் தெற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கிலும் அரபிக் கடல் மேற்கிலும் அமைந்திருக்க இந்தியாவின் 25வது மாநிலமாகத் திகழும் கோவாவிற்கு பஸ், ரயில், விமானம் மூலமாக எளிதில் பயணப்பட்டு அடையலாம்.

கோவாவின் தலை நகர் பஞ்சிம்.இது பங்களூரிலிருந்து 592 கிலோ  மீட்டரிலும் மும்பையிலிருந்து 593 கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது.

கோவா இரு பகுதிகளாக வட பகுதி என்றும் தென் பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை அவரவர் பட்ஜெட்டையும்,  விடுமுறை நாட்களையும் பொறுத்துத் திட்டமிட்டுப் பார்க்கலாம்.

முக்கியமான சில இடங்களை இங்கு பார்ப்போம்.

சுற்றுலா பயணிகள் முக்கியமாக வருவது இங்குள்ள பல கடற்கரைகளுக்காகத் தான்! சுமார் 77 மைல் நீளமுள்ள கடற்கரைப் பகுதி இங்கு உள்ளது.

சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் பயணிகள் இங்கு வருகின்றனர். இவற்றில் அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர்கள்.

கோல்வா பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்தக் கடற்கரையில் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளோர் செல்லலாம். ஜெட் ஸ்கீயிங், ஸ்பீட் போட்டிங் உள்ளிட்ட அனைத்தும் இங்கு மிகவும் பிரபலம். கூட்டமோ கூட்டம் என்று ஜே ஜே என்று இருக்கும் இந்த பீச் மனதிற்கு இதத்தைத் தரும் இடமாகும். வெண்மணல் கடற்கரையுடன் தென்னந்தோப்புகளும் உள்ள இது சால்செட் என்ற ஊரில் உள்ளது. இங்கு தேனிலவு கொண்டாட வருபவர்கள் அதிகம்.

பலோலம் பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்த பிறை வடிவிலான பீச் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இடம். இயற்கை எழிலை அமைதியாக ரசிக்கலாம்.

மோர்ஜிம் பீச்: இது வட கோவாவில் அமைந்துள்ளது. இங்கு ரஷிய பயணிகள் அதிகம் வருகின்றனர். ஆகவே இது குட்டி ரஷியா என அழைக்கப்படுகிறது. இது ஆலிவ் ரிட்லி என்ற ஆமைகள் வாழும் இடமும் ஆகும்.

பாகா பீச்: வட கோவாவில் உள்ள இந்த பீச்சிலும் நீர் விளையாட்டுகள் உள்ளன.

பஞ்சிம் பேருந்து நிலையத்திலிருந்து இது 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ள கடற்கரைகள் கண்டோலிம் மற்றும் கலங்குட் கடற்கரைகள்!

கண்டோலிம் பீச்: கடற்கரையில் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்க வசதியாக இங்கு படுக்கைகள் உள்ளன. கட்டணம் செலுத்தி இவற்றைப் பயன்படுத்தலாம். வாடகைக்குக் கிடைக்கும் இரு சக்கர வாகனங்களைஎ எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லலாம்.

அயல்நாட்டினர் அதிகமாக வரும் கடற்கரை இது.

அஞ்சுனா பீச்: வட கோவில் உள்ள இந்த பீச் பார்டிகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு ஏராளமான கடைகளும் உணவகங்களும் உள்ளன. விதவிதமான பொருள்களை வாங்குவதற்கான ஷாப்பிங் இடம் இது தான்.

அகுவாடா கோட்டையும் கடற்கரையும்:  போர்த்துகீசியரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இது. இங்குள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரையைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.

மோலெம் தேசியப் பூங்கா: இது ஒரு வனவிலங்கு சரணாலயம். வனப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பார்க்க சஃபாரியில் செல்லலாம்.

தூத்சாகர் நீர்வீழ்ச்சி:  கோவா செல்பவர்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இது. தூத் சாகர் என்றால் பால் கடல் என்று பொருள். மண்டோவி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 1017 அடி உயரம் கொண்டது. பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மொல்லம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது இது. நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

காவேலம் ஶ்ரீ சாந்த துர்க்கா கோவில்:  வட கோவாவில் போண்டா நகருக்கு அருகில் காவேலம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் பழமையான புராண வரலாறைக் கொண்டது. சிவனுக்கு விஷ்ணுவுக்கும் ஒரு காலத்தில் நடந்த போரில் துர்க்கா தேவி இருவரையும் ஒவ்வொரு கரத்தில் பிடித்து சமாதானத்தை ஏற்படுத்தினார் என்கிறது ஐதீக வரலாறு. இங்குள்ள பிரமிடு வடிவிலான முகப்பு மண்டபமும் சபா மண்டபமும் அழகிய வடிவமைப்புக் கொண்டவை. ஏராளமான பக்தர்கள் கூடும் இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

சப்போரா கோட்டை மற்றும் கடற்கரை: வட கோவாவில் பர்தேசு பகுதியில் உள்ள சப்போரா கோட்டை சப்போரா நதியருகில் உயர்ந்து அமைந்துள்ள கோட்டையாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கோட்டையை அக்பர் தனது தளமாக ஆக்கிக் கொண்டு போர்த்துக்கீசியரை எதிர்த்தார். எல்லாத் திசைகளையும் பார்க்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது இது. கோட்டைக்கு அருகில் உள்ளது சப்போரா கடற்கரை.

அர்வேலம் குகைகள்:  இந்தக் குகைகளில் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது தங்கி இருந்ததால் இந்தக் குகைகள் பாண்டவர் குகைகள் என அழைக்கப்படுகின்றன. சின்குவேரிம்  கடற்கரைக்கு அருகில் உள்ளது இது.

தேவாலயங்கள்:  கோவாவில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பாம் ஜீசஸ் பசிலிக்கா எனப்படும் குழந்தை ஏசு பசிலிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமாகும். உலகப் பாரம்பரியங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்றுள்ள இதில் தான் புனிதர் பிரான்ஸிஸ் சேவியரின் உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது.

கோவாவிற்குச் செல்ல விரும்பும் பயணிகள் தங்கள் திட்டத்தை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளா அல்லது இரு நாட்களா அல்லது பல நாட்கள் தங்கப் போகிறோமா என்று தீர்மானித்து விட்டால் பத்து இடங்களைப் பார்ப்பது முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களைப் பார்க்கலாம்!

கோவா இனிப்பான பால்கோவா தான்!

***

Leave a comment

Leave a comment