
Post No. 14,312
Date uploaded in London – 26 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைப்பட்டு கிராமத்துக்கு அருகில் மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் ஆஸ்ரமம் உளது; அங்கு மார்ச் மாதம் 18- ஆம் தேதி (2025) சென்று சுவாமிகளைத் தரிசனம் செய்தேன். இதன் வாயிலாக எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.
லண்டனுக்கு சுவாமிகளின் சீடர் ராமானுஜம் பரப்புரை செய்ய வந்த தருணங்களில் நானும் என்னால் இயன்ற பங்களிப்பினைச் செய்தேன். அப்போது அவரது சீடர்கள் மஹாரண்யத்துக்குச் சென்று சுவாமிகளை நேரில் தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லிவந்தனர் . ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் சென்றபோதும் மனதில் நினைத்தேன்; ஆனால் செயலில் இறங்கவில்லை. இந்த ஆண்டு நல்ல வாய்ப்பு கிடைத்தது. நங்க நல்லூர் ஆஞ்சனேயர் கோவில், மற்றும் புதிய ராஜ ராஜேஸ்வரி கோவில் ஆகியவற்றுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு காரில் சிட்டாகப் பறந்தேன். பெரிய ஏமாற்றம்! ஆஸ்ரமக் கதவு பூட்டியிருந்தது.கட்டுப்படுத்தப்பட்ட அனுமதி RESTRICTED ENTRY என்று வெளியேயுள்ள போர்டில் எழுதி இருந்தனர். அப்போதுதான் புரிந்தது போன் செய்யாமல் வந்தது தவறு என்று .

ஆஸ்ரமத்தை அடுத்து நல்ல அமைதியான சூழ்நிலையில் பெருமாள் கோவில் உள்ளது; பெருமாளை சேவித்தபின்னர் ஒரு தொன்னையில் நல்ல வெண்பொங்கல் பிரசாதமும் கிடைத்தது . அங்குள்ள பட்டர், போன் செய்துவிட்டு இங்கே அமருங்கள் என்றார் போன் செய்தபோது ரிகார்டட் மெஸேஜ் RECORDED MESSAGE வந்தது. அதில் நான் லண்டனி லிருந்து தரிசனத்துக்கு வந்த செய்தியை ரெகார்ட் செய்தேன் அதைக் கேட்டார்களோ இல்லையோ தெரியவில்லை சுவாமிகளே கோவிலுக்குள் பிரவேசித்தார் .
அடடா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது என்று எண்ணி இறும்பூது எய்தி அவரை நமஸ்கரித்தேன்; . லண்டனில் அவரது சீடர்களுடன் உள்ள தொடர்பினைச் சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டன் செல்லும் வழியில் குல தெய்வம் வைத்தீஸ்வரனைத் தரிசிக்க இந்தியாவுக்கு வந்த செய்தியினைத் தெரிவித்தேன் .
உடனே ஒரு சீடரை அழைத்து இவரை ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்வித்து, பின்னர் ஆஸ்ரமத்தைச் சுற்றிக் காட்டிவிட்டு சாப்பாடு செய்வித்து போஜனம் முடித்தவுடன் அழைத்து வாருங்கள் என்றார் .
அருகில் அருமையான அனுமார் கோவில்; அதி உயரமான பெரிய கருப்பு நிற அனுமார் சிலை.. அங்கு எனக்காக சிறப்பு தீவாராதனை காட்டி ஆஸ்ரமத்துக்குள்ள அழைத்துச் சென்றார்கள் அங்கே கோ சாலை, வேத பாட சாலை, போஜன சாலை, நூலகம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டேன். பின்னர் மீண்டும் சுவாமிகளைத் தரிசித்தேன். சீடரிடம் ஆஸ்ரமத்துக்குச் சிறிய நன் கொடையை கொடுத்துவிட்டு சுவாமிகள் அனுமதியுடன் அவரது புகைப்படத்தை எடுத்தேன் . பின்னர் அவர் ஆஸ்ரமத்துக்குள் சென்ற பின்னர் நானும் சென்னைக்குப் புறப்பட்டேன்.அன்று மாலையே எனது நண் பர் ராமானுஜம், நாரத கான சபாவில் பேசவிருப்பதாகவும் சுவாமிகளும் அப்போது இருப்பார் என்றும் சீடர் சொன்னார். ஆனால் அடுத்த நாளில் லண்டன் பயணம் இருந்ததால் போக இயலவில்லை . என்னை ஆஸ்ரமத்தைச் சுற்றிக்காட்டிய இளைஞர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இருப்பதாகச் சொன்னார். அவரது அர்ப்பண மனப்பான்மை சுவாமிஜியின் நற்பணிக்கு ஒரு அத்தாட்சி.
****
சுவாமிகளின் கொள்கை என்ன ?
நாம சங்கீர்த்தனத்தின் மூலம்- அதாவது, இறைவனின் நாமமான ஹரே ராம ஹரே க்ருஷ்ண — என்ற பெயரை பக்தியுடன் உச்சரிப்பதன் மூலமே இறைவனை அடையாலாம் ; கலியுகத்தில் இதுதான் எளிதான வழி ; மேலும் சனாதன தர்மத்தின் ஆணி வேரான வேதங்களை பாதுக்காகவேண்டும் கோ மாதா என்னும் பசுக்களை பாதுகாக்கவேண்டும் என்பதே முக்கியக் கொள்கை . இதை நடை முறையில் கொண்டு வருவதற்காக சுவாமிகள் பல்வேறு இடங்களில் வேத பாடசாலைகளை நடத்துகிறார். நல்ல சொற்பொழிவுகளால் நாம சங்கீர்த்தனத்தைப் பரப்புகிறார். நாமத் வார் –நாமத்தின் மூலம் இறைவனை அடையும் வாயில்- என்பது இவர் பயன்படுத்தும் சொல். அமெரிக்கா , பிரிட்டன், பல ஐரோப்பிய நாடுகளில் இவரது பக்தர்கள் கிளைகளை நடத்தி ராம – கிருஷ்ண நாமத்தின் பெருமையைப் பரப்புகிறார்கள்
வேத பாட சாலை,
அங்கு ஏகாதசி நாட்களில் பெரிய வழிபாடுகள் நடை பெறுகின்றன. அடுத்தமுறை சென்னை சென்றால் மலைப்பட்டு கிராமம் வரை செல்லுங்கள். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நல்ல சாமியார்களின் ஒருவர் ஸ்ரீ முரளீதர சுவாமிகள் . ஏனைய ‘பாபா’க்கள், ‘குரு’க்கள் போல கல்ட் CULT –புதிய சம்பிரதாயம்- எதுவும் இல்லாமல் ஒரிஜினல் இந்து மதக் கொள்கைகளை வலியுறுத்துபவர். ஆகையால் தயக்கமின்றி செல்லலாம். முடிந்தவரை நன்கொடை கொடுத்து அரிய வேதங்களைப் பாதுகாக்க உதவுங்கள் .
–சுபம்–
முரளீதர சுவாமிகள், மலைப்பட்டு, மஹாரண்யம், நாமத் துவார், நாம சங்கீர்த்தனம், வேத பாட சாலை, கோ சாலை