
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,317
Date uploaded in London – –28 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
சாயி–கியாட்ரி என்பது என்ன? ஒரு சைக்கியாட்ரிஸ்டின் அனுபவமும் விளக்கமும்!
ச.நாகராஜன்
உலகப் பெரும் சைக்கியாட்ரிஸ்ட் நிபுணர் சாமுவேல் ஹெச். சாண்ட்விச் (SAMUEL H. SANDWEISS) ஆவார்.
அவர் தனது உளவியல் அனுபவங்களுடனும் மெத்தப் படித்தப் படிப்புடனும் புட்டப்பர்த்தியில் இருந்த ஶ்ரீ சத்யசாயி பாபாவை அணுகினார்.
ஆனால், என்ன ஆச்சரியம்! பாபாவிடம் அவர் ஒரு புது வித சைக்கியாட்ரியைக் கண்டார்.
பல்வேறு செய்திகளை அவர் சேகரித்தார். பல வித அனுபவங்களை அவர் பெற்றார். அவற்றையெல்லாம் தொகுத்து “சாயிபாபா தி ஹோலி மேன்… அண்ட் தி சைக்கியாட்ரிஸ்ட்” – (SAIBABA THE HOLY MAN… AND THE PSYCHIARRIST) என்ற புத்தகத்தை எழுதினார்.
கல்லுக்குள் இருக்கும் கடவுள்!
ஹோவர்ட் மர்பெட் எழுதிய சாயிபாபா – மேன் ஆஃப் மிராகிள்ஸ் என்ற நூலிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவத்தைத் தருகிறார் சாண்ட்விச்.
டாக்டர் ஒய்.ஜே. ராவ் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் ஜியாலஜி பிரிவின் தலைவராகப் பணியாற்றுபவர்.
அவர் பாபாவை ஒரு சமயம் புட்டபர்த்தி சென்று தரிசித்தார்.
பாபா அங்கிருந்த ஒரு உடைந்த பாறாங்கல் துண்டு ஒன்றை கையில் எடுத்தார். அதை ராவின் கையில் கொடுத்த பாபா, “இதில் என்ன இருக்கிறது? என்று கேட்டார்.
ராவ் தான் நிலவியல் நிபுணராயிற்றே! அந்தப் பாறாங்கல்லில் இருந்த கனிம தாதுக்களை எல்லாம் விவரித்தார்.
பாபா, “அதை நான் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள்” என்றார்.
ராவ் சற்று யோசித்து விட்டு, “மாலிக்யூல், அணுக்கள், எலக்ட்ரான், புரோடான்” என்றார்.
பாபா, “இன்னும் ஆழமாக….” என்றார்.
ராவ், “எனக்குத் தெரியாது ஸ்வாமி” என்றார்.
பாபா ராவின் கையில் இருந்த அந்தத் துண்டுக் கல்லை வாங்கினார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாயால் ஒரு ஊது ஊதினார். என்ன ஆச்சரியம். ஒழுங்கற்ற வடிவமத்தில் இருந்த கல் இப்போது கிருஷ்ணரின் சிலையாக மாறி இருந்தது!
நிலவியல் நிபுணர் அந்தக் கல்லின் நிறம் மாறி இருந்ததையும் அதன் தாதுக்கள் மாறி இருந்ததையும் நுட்பமாகக் கவனித்தார்; பிரமித்தார்!
பாபா: “பார்த்தீர்களா? உங்களது அணு,த்திரள், அணுக்கள் ஆகியவற்றை எல்லாம் கடந்து உள்ளே கடவுள் இருக்கிறார். கடவுள் இனிப்பானவர். ஆனந்தம் தருபவர். இதை உடைத்துப் பாருங்கள்; இதன் ருசியைப் பாருங்கள்!
திகைத்துப் போன ராவ் கிருஷ்ணரின் பாதத்தில் இருந்த ஒரு துணுக்கை எடுத்து வாயில் போட்டார். அது இனித்தது!
“இதிலிருந்து சொல்லுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய உண்மையை நான் கண்டு கொண்டேன்.,. நவீன அறிவியல் முதல் வார்த்தையைத் தான் தருகிறது. ஆனால் ஆன்மீகப் பெரியார்களோ அதன் கடைசி வார்த்தை வரை அனைத்தையும் அறிந்தவர்கள்” என்றார் ராவ்!
ராவ் பெற்ற அனுபவங்களைப் போலவே விதவிதமான அனுபவங்களைப் புட்டபர்த்தியில் பெற்ற சாண்ட்விச் திகைத்தார்; பிரமித்தார்.
இறுதியில் அவர் கூறினார் இப்படி: “ உளவியலின் லட்சியம் மதத்தின் லட்சியம் போல இறைவனை உணர்வது தான். இதை அன்பின் மூலமாக அடைய முடியும். பாபாவினுடனான எனது அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் போது இவரது அறிவியலை “சாயி-கியாட்ரி” (Sai-chiatry) என்றே சொல்வேன்.
ஆத்மாவைப் பற்றிய – பிரக்ஞையைப் பற்றிய இதை அன்பின் சாயிகியாட்ரி (Sai-chiatry of Love ) என்றே சொல்வேன்.
அறிவியலுக்கும் அப்பாற்பட்டது தான் சாயிகியாட்ரி!
இதை உலகின் பெரும் சைக்கியாட்ரி நிபுணர் அனுபவித்துக் கூறிய போது பக்தர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்!
***