
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,329
Date uploaded in London 31 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 30-3-25 அன்று ஒளிபரப்பான உரை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.
– ஆண்டாள் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது மஹாலக்ஷ்மியின் அவதாரமான ருக்மிணி தேவியின் ஆலயமும் த்வாரகா ஈசனாக உள்ள ஶ்ரீ கிருஷ்ணரின் ஆலயமும் அமைந்துள்ள த்வாரகா திருத்தலமாகும்.
த்வாரகா திருத்தலம் குஜராத் மாநிலத்தில் மேற்குக் கடற்கரையில் கோமதி (GOMTI RIVER) நதிக்கரையில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. அஹமதாபாத்திலிருந்து இது 167 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மதுராவில் பிறந்த ஶ்ரீ கிருஷ்ணர் கம்ஸனை வதம் செய்த பின்னர் த்வாரகாவில் தனது நகரை அமைத்துக் கொண்டு அரசாண்டார் என்பதை மஹாபாரதம் விரிவாக எடுத்துரைக்கிறது.
அவர் பூமியை விட்டுச் சென்ற பின்னர் த்வாரகா கடலால் மூழ்கடிக்கப்பட்டது என்பது வரலாறு.
சமீபத்தில் நடந்த பல அகழ்வாராய்ச்சிகள் த்வாரகா நகரின் பாகங்கள் கடலுக்கடியில் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.
ருக்மிணி தேவியின் ஆலயம் த்வாரகா நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமாகும்.
இங்குள்ள ருக்மிணி தேவியின் விக்ரஹம் அழகிய சலவைக் கல்லால் ஆனது. ருக்மிணி தேவி நான்கு திருக்கரங்களில் சங்க, சக்ர, கதா, பத்மத்துடன் திகழ்கிறாள்.
இந்தக் கோவிலில் பக்தர்கள் ஜல தானத்தைக் கோவிலுக்குச் செய்கின்றனர்.
ஆலய கோபுரத்தில் தெய்வங்களின் சிற்பங்களும் யானைகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
த்வாரகா நகருக்கு வருகை புரிவோர் இந்த ஆலயத்தில் ருக்மிணி தேவியை வழிப்பட்ட பிறகே அவர்களின் யாத்திரை பூர்த்தி பெறும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயம் பற்றிய பழம் பெரும் வரலாறுகள் உள்ளன.
ஶ்ரீ கிருஷ்ணரின் ஆலயம் சற்று தூரத்தில் ஏன் உள்ளது என்பதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.
ஒரு முறை துர்வாச மஹரிஷியை கிருஷ்ணரும் ருக்மிணி தேவியும் தங்கள் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தனர். செல்லும் வழியில் தனது தாகத்தைத் தணிக்க, தண்ணீரை ருக்மிணி கிருஷ்ணரிடம் கேட்க அவர் தனது பாதத்தால் தரையை அமிழ்த்தி கங்கையை வெளிவரச் செய்து ருக்மிணி தேவி அருந்தக் கொடுத்தார்.
ஆனால் துர்வாஸ மஹரிஷி முதலில் தனக்கு நீரை அருந்த ருக்மிணி கொடுக்கவில்லை என்பதால் கோபமுற்றார். ஆகவே அவர் ருக்மிணி தனது கணவருடன் சேர்ந்து இல்லாமல் இதே இடத்தில் தனியே இருப்பாள் என்று சாபம் கொடுத்தார். ஆகவே கிருஷ்ணரும் ருக்மிணியின் 12 வருடங்கள் தனித்தனியே வசித்தனர்.
ருக்மிணி தனியே வசித்த இடமே இப்போது ஆலயம் இருக்கும் இடமாகும். 12 வருடங்கள் தவம் புரிந்து தனது சாபத்தை ருக்மிணி போக்கிக் கொண்டாள் என்று புராண வரலாறு கூறுகிறது.
ஜகத் மந்திர் என்று பிரபலமாக அழைக்கப்படும் த்வாரகாதீஷ் ஆலயம் கிருஷ்ணருக்கான ஆலயமாகும். த்வாரகாவின் அரசன் என்ற பொருளைத் தரும் த்வாரகா ஈசன் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

ஐந்து அடுக்கு ஆலயமான இது 72 தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.
இது சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆலயம் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆதி சங்கரர் இங்கு விஜயம் செய்து தங்கியுள்ளார்.
“சார் தம்” என்ற நான்கு தலங்களுக்குச் செல்லும் யாத்திரையில் த்வாரகா யாத்திரையும் ஒன்றாகும்.
த்வாரகா, ராமேஸ்வரம், பத்ரிநாத் மற்றும் பூரி ஆகிய நான்கு தலங்களின் யாத்திரை சார் தம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
த்வாரகாதீசர் தலமானது 108 வைணவ திவ்ய தலங்களில் விஷ்ணுவின் 98 திவ்ய தேசமாக வழிபடப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் இந்த ஆலயம் மேற்கு நோக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்பக்ருஹத்துடன் ஒரு கீழ் தளமும் இங்கு உள்ளது. 95 அடி நீளமும் 75 அடி அகலமும் உள்ள இந்த ஆலயம் அழகிய சலவைக்கல்லால் ஆன ஒன்றாகும்.
மோக்ஷ த்வாரம் என்ற பிரதான நுழை வாயிலையும் ஸ்வர்க த்வாரம் என்ற வெளியே போகும் வாயிலையும் இது கொண்டுள்ளது. இந்த வாயிலிலிருந்து 56 படிகள் மூலம் கோமதி நதியை அடையலாம்.
இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தூபி 256 அடி உயரம் உள்ளது. இதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள கொடியில் சந்திர மற்றும் சூரிய பிம்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சூரிய சந்திரர் உள்ள வரையில் இங்கு கிருஷ்ணர் இருப்பதை இது சுட்டிக் காட்டுவதாக ஐதீகம்.
முக்கோண வடிவில் உள்ள இந்தக் கொடியின் நீளம் மட்டும் 50 அடியாகும்.
ஒரு நாளைக்கு நான்கு முறை இந்த ஸ்தூபியில் புதுக் கொடி ஏற்றப்படுகிறது. புதுக் கொடியை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி ஏற்றுகின்றனர்.
ஹர்யானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரம், உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா குஜராத்தில் உள்ள த்வாரகாதீசர் தலம் ஆகிய மூன்றும் கிருஷ்ண பக்தர்கள் மேற்கொள்ளும் மூன்று திவ்ய கிருஷ்ண தல யாத்திரை தலங்களாகும்.
ராஜபுத்ர மஹாராணியான பக்த மீரா இந்தத் திருத்தலத்திலேயே இறைவனுடன் ஒன்றாகக் கலந்தாள் என வரலாறு கூறுகிறது.
சப்த பூரி ஸ்தலங்களுள் ஒன்றாகவும் த்வாரகா அமைகிறது.
ஆதி சங்கரர் ஸ்தாபித்த நான்கு மடங்களுள் த்வாரகா மடமும் ஒன்று என்பது குறிப்பிடத் தகுந்தது.
அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் உள்ள வோர்ல்ட் டேலண்ட் ஆர்கனைசேஷன் த்வாரகாவை 2021 மார்ச் 22ம் தேதி உலகின் அற்புதமான இடம் WORLD AMAZING PLACE என்ற நற்சான்றிதழை வழங்கிக் கௌரவித்துள்ளது.
எல்லையற்ற பெருமையைக் கொண்ட இந்தத் திருத்தலம் இந்து மதத்தின் புனிதமான தலமாகும். மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட நூல்களில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நூல்கள் மூலம் இதன் பெருமையைச் சிறிது தெரிந்து கொள்ளலாம்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ கிருஷ்ணரும் ருக்மிணி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**