
Vel Yatra
Post No. 14,330
Date uploaded in London – 31 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30–ம் தேதி 2025-ம் ஆண்டு
****
முதலில் ராம நவமி செய்தி
அயோத்தியில் ஏப்ரல் ஆறாம் தேதி ராம நவமி உற்சவம்

இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ராமபிரானின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும். ராம நவமி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களில் ராம நவமி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் சிறப்பு ஊர்வலங்கள், பஜனைகள் மற்றும் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப்.6ம் தேதி நடைபெற உள்ள ராம நவமி விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால் அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
ராம நவமி, ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் ஹிந்து மதத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு வருகை தருகிறார்கள் .
உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி. குமார், ராம நவமிக்கு முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொண்டார், இதன் மூலம் பண்டிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தார்.
கொண்டாட்டங்களின் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.
மேலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கோவில் சுற்றுவட்டார பகுதியை கண்காணிக்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
****
வேல் யாத்திரைக்குஉச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலையில், ஹிந்து கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. ஆனால், இந்த மலையை இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
****
காஞ்சி சுவாமிகள் திருப்பதி விஜயம்
காஞ்சி சங்கராசார்யார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மார்ச் 21-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆந்திரப் பிரதேச காளஹஸ்தி திருத்தலத்தில் தங்கி சந்திர மெளலீஸ்வர பூஜை செய்தார் காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு அவர் வந்த போது அவரை தக்க மரியாதைகளுடன் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர் .
அவர் காளஹஸ்தி நகரிலிருந்து திருப்பதிக்கு விஜயம் செய்துள்ளார் அங்கு வசந்த நவராத்ரி பூஜைகளை நடத்துவார் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதிவரை வசந்த நவராத்ரி பூஜைகள் சங்கர மட்டத்தில் நடைபெறும். விசுவாவசு புது வருடம் மற்றும் யுகாதியை ஒட்டி சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறும் .
****
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி எப்போது? கோவில் நிர்வாகம் விளக்கம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி எப்போது என்று கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை நிர்வாக அதிகாரி அலுவலகம் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி எப்போது என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக 2025 மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பசுவான் புண்ணியத் திருத்தலம்”வாக்கிய பஞ்சாங்கம்” முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெர்விக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபசுனா திருந்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் தேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,
*****
அம்ரூத் திட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ., பழநியில் வளர்ச்சிப்பணிகள்

தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் அம்ருத்2.0 திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்களில் ஒருங்கிணைந்த முழுமை வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கபோகின்றன.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவாகமக்கள் வசிக்கும் 51 நகரங்களில், அம்ரூத் 2.0 திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளந . இங்கு அடுத்து வரும் 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு தேவையான ரோடு, வாறுகால், குடிநீர், பூங்காக்கள், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான முழுமை திட்டம் உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இத்திட்டம் செயல்படுத்த முழுமையான திட்டம் தயாரிக்கும் பணியில் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
****
மருதமலை கோவில் குடமுழுக்கு; வேள்வியில் தமிழுக்கு முன்னுரிமை
கோவை மருதமலை முருகன் கோவிலில், ஏப்.4ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. அதில், தமிழில் மந்திரங்கள் ஓத கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்பாபு, விஜயராகவன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்
அதில்,’குடமுழுக்கு விழாவில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர், தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருபுகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும். யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக, தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாக பூஜையின்போது, 36 யாக குண்டத்தில் தமிழிலும், 36ல் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
****
திருப்பதி -அன்னதான நன்கொடை இருப்பு ரூ.2,200 கோடி

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது:
திருமலையிலுள்ள வெங்கடாசலபதி அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எஸ்.வி.அன்னதான அறக்கட்டளைக்கு இதுவரை 9.7 லட்சம் பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இதுவரை 249 பக்தர்கள் ரூ.44 லட்சம் வீதம் நன்கொடை வழங்கி உள்ளனர். 139 பக்தர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கி உள்ளனர். தற்போது இத்திட்டத்தில் ரூ.2,200 கோடி நன்கொடை இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருப்பதியில் தரிசன முறையில் மாற்றம்
திருப்பதியில் மார்ச் 25 ஆம் தேதி, மார்ச் 30ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. வார நாட்களில் 65 ஆயிரத்திற்கு மேலான பக்தர்களும் வார இறுதி நாட்களில் 80 ஆயிரத்திற்கு மேலானவர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்தது.
சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
****
100 ஆண்டு பழமையான இந்துக் கோவில் இடிப்பு? : மலேசியாவில் பதற்றம்!

மலேசியாவில் நான்காவது பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.3 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவார்கள். மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் தான் பெரும்பாலான இந்துக்கள் வாழ்கின்றனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் மையப்பகுதியில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான இந்து கோவில், இடிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. மசூதி கட்டுவதற்காக இந்து கோவிலை இடம் மாற்றுவது பொதுமக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், ஸ்ரீ கந்தசுவாமி கோவில், சுந்தரராஜப் பெருமாள் கோவில், பத்துமலை முருகன் கோவில் என 50க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் மலேசியாவில் உள்ளன.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே,1894 ஆம் ஆண்டு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், மலேசியாவில் கட்டப்பட்டது. பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இக்கோயில், பிரபலமான ஜேக்கல் மால் தெருவின் குறுக்கே அமைந்துள்ளது.
தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில் இருக்கும் நிலம் இரண்டு பகுதியாக உள்ளது. ஒன்று தனியாருக்குச் சொந்தமானது மற்றும் மற்றொன்று அரசுக்குச் சொந்தமானது ஆகும்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அரசு நிலத்தில் தான் உள்ளது. 2014ம் ஆண்டு, கோயில் அருகே உள்ள தனியார் நிலம், பிரபல ஜவுளி தொழில் நிறுவனமான ஜேகல் டிரேடிங் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. நிறுவனத்தின் மறைந்த நிறுவனர் முகமது ஜாகல் அகமது, இந்து கோயில் உள்ள இடத்தில், பெரிய மசூதியைக் கட்டி இஸ்லாமியர்களுக்கு பரிசளிப்பதற்காக இந்த கோயில் நிலத்தை வாங்கினார் என்று கூறப்படுகிறது.
இந்துக் கோவில் இருந்த இடத்தில், பெரிய மசூதியைக் கட்டுவதற்கு 2021 ஆம் ஆண்டு, மலேசிய அரசும், கோலாலம்பூர் நகர சபையும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கோயிலை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப் பட்டது.
தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவிலை இடமாற்றம் செய்வதற்கான மொத்த செலவுகளையும் ஜேகல் டிரேடிங் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவும் முன்வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்ர காளி அம்மன் கோயில் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோவிலுக்கான மாற்று இடங்களை தூரம், நிலத்தின் அளவு மற்றும் வெள்ள அபாயம் ஆகியவற்றின் காரணமாக, கோவில் நிர்வாக குழு நிராகரித்துள்ளது.
இதற்கிடையே கோவில் இடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில், அந்தப் பகுதியில் 4 மசூதிகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இந்து கோவில்தான் உள்ளது. அதுவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது. எனவே இந்துக்களின் உணர்வை மலேசிய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என இந்து மக்கள் விரும்புகின்றனர்.
*****
இந்து தர்ம கலாச்சாரமே வெற்றிக்குக் காரணம்”!– அமெரிக்க FBI தலைவர் காஷ் படேல் கருத்து
தனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் சனாதன இந்து தர்ம கலாச்சாரமே அடிப்படை என்று அமெரிக்காவின் FBI தலைவரான காஷ் படேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரான அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
FBI என்பது பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்னும் அமெரிக்க ஸ்தாபனம் ஆகும். குற்றங்களையும் பயங்கரவாதத்தையும் புலனாய்வு செய்வது அதன் பணி
இந்திய வம்சாவளியினரின் மகனான 45 வயதான ‘காஷ்’ படேல், இப்போது அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த FBI தலைவராக உள்ளார். தனது தலைமைப் பண்புக்கு இந்து கலாச்சார மதிப்பீடுகள் எப்படி உதவின ? என்பதை காஷ் படேல் விளக்கியிருக்கிறார்.
அமெரிக்க அரசியல் போர்க்களத்தில் ஒரு இந்துப் போர் வீரன் என்ற தலைப்பில் ‘காஷ்’ படேலின் கட்டுரையை அமெரிக்காவின் India Tribune என்ற இணையச் செய்தி இதழ் வெளியிட்டுள்ளது.
1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் கருத்துக்களை உள்ளடக்கியதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டுரை, புலம்பெயர்ந்த இந்து குடும்பத்தின் எளிமையான தொடக்கத்திலிருந்து அமெரிக்க அரசின் உயர் பதவிகள் வரை காஷ் படேலின் பயணத்தை விவரிக்கும் இந்த கட்டுரை, அவரது வாழ்க்கையில் இந்து மதம் ஏற்படுத்திய செல்வாக்கு பற்றி விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக, Deep State-க்கு எதிரான உறுதியான போராட்டத்துக்கும், இந்துமத கலாச்சாரமே தனக்குத் துணிவைத் தந்ததாக காஷ் படேல் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, FBI தலைவராகப் பதவியேற்றபோது, பைபிளுக்குப் பதிலாக பகவத்கீதையின் மீது சத்திரியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு, உலகத்தின் மிகப் பெரிய தேசமான அமெரிக்காவின் FBI- யை, முதல் தலைமுறை இந்தியர் வழி நடத்த உள்ளதாகப் பெருமிதத்துடன் கூறியிருந்தார். மேலும், தனது பெற்றோரை, ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று வாழ்த்தி வரவேற்று, செனட் நீதித்துறை குழுவின் முன் அறிமுகப்படுத்தி வைத்த காஷ் படேல், பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று வாழ்த்துவதிலிருந்து, தனது பெற்றோரின் ஆசிகளைப் பெறுவது வரை, காஷ் படேல், தனது இந்தியப் பாரம்பரியத்தை விட்டுவிடாமல் வைத்திருக்கிறார்.
அமெரிக்கராக இருப்பதும் இந்துவாக இருப்பதும் முரண்பாடான அடையாளங்கள் அல்ல என்பதை காஷ் படேல் நிரூபித்துள்ளார். ஒரு மதச்சார்பற்ற அரசை வழிநடத்தும் அதே வேளையில், தனது இந்துமத பின்னணி மற்றும் மதிப்புகளின் வழி நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியும் என்பதையும் அமெரிக்க FBI தலைவர் காஷ் படேல் நிரூபித்திருக்கிறார்.
****
திருத்தணி முருகன் கோவிலில் ரூ. 1.49 கோடி உண்டியல் காணிக்கை!
திருத்தணி முருகன் கோவி லில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
கடந்த 31 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், ஒரு கோடியே 49 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பணம், 650 கிராம் தங்கம், சுமார் 13 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
****
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!
சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழாவை ஒட்டி அடுத்த மாதம் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
புதிய காப்பீட்டு திட்டம்
சபரிமலையில் தற்போது விபத்து காப்பீடு திட்டம் பக்தர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வாயிலாக மரணம் அடைபவர்களுக்கும் எவ்வித பண பலனும் கிடைக்காமல் இருந்தது. இவ்வாறு இறக்கும் பக்தர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
****
திருப்பத்தூர் ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் வால்மீகி ராமாயண ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு:

கோயில் திருப்பணி வேலைகள் நடை பெற்று வருகிறது. கோவிலை சுத்தம் செய்யும் போது தமிழாக்கம் செய்யப்பட்ட 2075 வால்மீகி ராமாயண ஒலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது.
பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்கள் அதில் உள்ளன. யுத்த காண்டம் மட்டும் இல்லை.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
ஏப்ரல் ஆறாம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—subham—
Tags- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 30-3-2025