
Post No. 14,333
Date uploaded in London – –1 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
ஶ்ரீ ராமரை தரிசித்து ராம பக்தியைப் பரப்பியதோடு ஹனுமாருக்கென பல கோவில்களை நிறுவியவரும் ஹிந்து ஸ்வராஜ்யத்தை நிறுவ சத்ரபதி சிவாஜிக்கு ஊக்கமூட்டியவரும் பெரும் மகானுமான சமர்த்த ராமதாஸரைப் பற்றி இன்று சிந்திப்போம்.
மஹராஷ்டிர மாநிலத்தில் சூர்யாஜி பந்த் என்பவருக்கும் ரேணுகா பாய் அம்மையாருக்கும் ஜம்ப் என்ற இடத்தில் 1608ம் ஆண்டு சமர்த்த ராமதாஸர் அவதரித்தார்.
அவரது இயற்பெயர் நாராயணன். இளவயதிலேயே அவர் ஶ்ரீ ராமரையும் ஹனுமானையும் வழிபட்டுத் துதிக்க ஆரம்பித்தார்.
இளவயதிலேயே ராம தியானத்தில் ஊறிய அவர் ஒரு நாள் அறை ஒன்றில் ராம தியானத்தில் மூழ்கி இருந்தார். அவரது தாயார் அவரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போது ராமரை தியானிப்பதாகவும் உலக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். அவரது தாயார் இந்த பதிலைக் கேட்டு வியந்தார். இதுவே அவரது வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தது.
இளவயதில அவருக்கு மணம் முடிக்க தீர்மானித்த அவரது பெற்றோர் அதற்கு ஏற்பாடு செய்தனர். திருமண சம்பிரதாயப்படி மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஒரு திரை தொங்க விடப்பட்டது. அப்போது திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசாரியர் ‘சாவ்தான்’ என்று கூறினார்.
‘சாவ்தான்’ என்ற சொல்லுக்கு ஜாக்கிரதை என்று பொருள்.
இதைக் கேட்ட ராமதாஸர் அந்த இடத்தை விட்டுக் கணப்பொழுதில் அகன்று ஓடினார்.
ராமதாஸர் பன்னிரெண்டு ஆண்டுகள் கோதாவரி நதிக் கரையில் நாசிக்கில் தங்கி இருந்தார். அதி காலையில் கோதாவரி நதியில் இடுப்பளவு நீரில் நின்று காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலானார்.
தினமும் வீதி வீதியாகச் சென்று பிட்சை கேட்டு அதை ஶ்ரீ ராமருக்கு முதலில் அர்ப்பணித்துப் பின்னர் தான் உண்பது அவரது வழக்கமானது.
வால்மீகி ராமாயணத்தை நன்கு கற்ற அவர் அதை முழுவதுமாக தன் கைப்பட எழுதினார். அந்த ஓலைச் சுவடிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
ஶ்ரீ ராம் ஜய ராம் ஜயஜய ராம் என்ற 13 எழுத்து மந்திரத்தை அவர் நாசிக்கில் உள்ள தபலி என்ற இடத்தில 13 லட்சம் தடவை ஜபித்து ராமரின் தரிசனத்தைப் பெற்றார்.

ராமரின் ஆணைப்படி எல்லா புனித தலங்களுக்கும் அவர் யாத்திரையை மேற்கொண்டார்.
ஒரு சமயம் விதவையான ஒரு பெண்மணியிடம், ‘நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்’ என்று கூற அவளோ தனது கணவனின் இறந்த உடலைக் காண்பித்தாள். ராமதாஸர் அந்த உடலின் மீது நீரைத் தெளிக்க உடனே அவளது கணவன் உயிர் பெற்று எழுந்தான்.
இந்த சம்பவம் எங்கும் பரவி அவரது மகிமையை உலகெங்கும் பறை சாற்றியது.
பண்டரிபுரத்திற்கு அவர் விஜயம் செய்யாது இருந்த போது ஒரு நாள் ஒரு அந்தண வேடத்தில் பண்டரிபுர விட்டலன் தன் கூட 300 பேரை அழைத்து அவரிடம் வந்து, ‘பண்டரிபுர விட்டலனை தரிசிப்பதில் அவருக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா’ என்று கேட்டார்.
ராமதாஸ், ‘இல்லை’ என்று கூறி அவருடன் பண்டரிபுரத்திற்குப் புறப்பட்டார். கோவிலை நெருங்கும் போது அந்த அந்தணர் மறையவே இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராமதாஸர் விட்டலனை தரிசிக்கச் சென்றார். அங்கே செங்கல்லின் மீது ஶ்ரீ ராமர் நிற்பதைக் கண்டு அதிசயித்தார்.
கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட எல்லா அவதாரங்களும் ஒரே பரம்பொருளே என்று உணர்ந்த அவர் பாண்டுரெங்கனின் புகழ் பாடினார்.
அங்கு பண்டரிபுரத்தில் அவரது சமகாலத்தவரான பெரும் மகான் துகாராமை அவர் சந்தித்தார்.
ராமர் அவரை கிருஷ்ணா நதிக்குச் சென்று சத்ரபதி சிவாஜிக்கு உதவி புரியுமாறு ஆணையிட உடனே அவர் அங்கு சென்றார்.
சத்ரபதி சிவாஜி அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார்; உத்வேகமும் பெற்றார்.
தனது ராஜ்யம் முழுவதையும் சமர்த்த ராமதாஸரிடம் அர்ப்பணித்த சிவாஜி மஹராஜ் அவரது ஏவலனாகத் தான் இருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒரு நாள் சிவாஜி ராமதாஸர் வீதி விதியாக பிட்சை எடுப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ,‘ஒரு ராஜ்யமே உங்களுடையதாக இருக்கும் போது வீதி வீதியாகச் செல்வது ஏன்’ என்று ஒரு சீட்டில் எழுதி அதை தனது படைவீரரான பாலாஜியிடம் கொடுத்து இதை ராமதாஸரிடம் சென்று கொடுங்கள் என்றார்.
அந்த சீட்டைப் படித்துப் பார்த்த ராமதாஸர் மறு நாள் சிவாஜியை அழைத்தார். தன்னுடைய திருவோட்டை அவரிடம் கொடுத்து, ‘வாருங்கள், நாம் வீதி வீதியாகச் செல்வோம்’ என்றார்.
சதாரா நகரின் தெருக்களில் ராமதாஸரையும் சிவாஜியையும் இப்படிக் கண்ட மக்கள் ஆச்சரியமுற்று அவர்களை வணங்கி தங்கள் பிட்சையை அளித்தனர். பின்னர் நதிக்கரைக்குச் சென்ற ராமதாஸர் தான் பெற்றதை அங்கு சமைத்து உண்டார். அவருடன் சிவாஜியும் அந்த உணவை உண்டார்.
தனது பெயரால் அந்த சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று கூறிய ராமதாஸர் பகவா த்வஜத்தை அரசின் கொடியாக ஏற்றி அதை என்றும் காத்து வரவேண்டும் என்று அருளினார்.
இந்த சம்பவத்தினால் தான் பகவா த்வஜம் சத்ரபதி சிவாஜியின் ஹிந்து ஸ்வராஜ்ய த்வஜமாக ஆனது.
**