
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,336
Date uploaded in London – –2 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 2
ச. நாகராஜன்
ஒரு நாள் சிவாஜி மஹராஜ் தளர்ந்த உள்ளத்துடன் தனது படுக்கையில் இருந்த போது அவரிடம் அவரைப் பார்க்க சமர்த்த ராமதாஸர் வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
துள்ளி எழுந்த சிவாஜி அவரிடம் ஓடி அவரைப் பணிந்தார். அவருடன் பல நாட்கள் தங்கி இருந்த ராமதாஸர், சிவாஜி தனது மகன் சம்பாஜியைப் பற்றி எண்ணி வருத்தப்படுவதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் அளித்தார்.
“இந்த ஸ்வராஜ்யமே இறைவன் திட்டமிட்டு உருவாக்கிய திருப்பணி தான். ஆகவே சம்பாஜியைப் பற்றிக் கவலைப்படாதே. இதை நன்கு ஆள தகுதி உள்ள ஒருவன் நிச்சயம் வருவான். அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடு” என்றார்.
இந்தச் சொற்களால் வருத்தம் நீங்கப் பெற்ற சிவாஜி அவரை விழுந்து வணங்கினார்.
“நான் உன் அருகிலேயே உள்ள பர்லி கோட்டையில் தான் தங்கி உள்ளேன்” என்றார் ராமதாஸர்.
அன்றிலிருந்து அந்தக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் என்று பெயர் சூட்டப்பட்டது. சஜ்ஜன் கர் என்றால் ஆண்ரோர்களின் உறைவிடம் என்று பொருளாகும்.
ஊர் ஊராகச் சென்ற ராமதாஸர் ஆங்காங்கே பதினோரு இடங்களில் அனுமாருக்காகக் கோவில்களை நிறுவினார்.
தல யாத்திரை சென்ற சமயத்தில் ஒரு நாள் அவரது தாயார் கண் பார்வை இழந்து வருந்துவதாகக் கேள்விப்பட்ட அவர் நேரடியாகத் தாயாரிடம் வந்தார். தனது தாயாரின் கண்களைத் தனது கரங்களால் தொட்டார்.
அவரது பார்வை மீண்டது.
அவரது கரத்தில் ஒரு சிறிய வில் இருக்கும். அருகிலிருக்கும் கற்களை எடுத்துத் தான் பார்க்கும் பொருள்களின் மீது வில்லால் கற்களை எறிவது அவர் பழக்கம்.
பெண்களை அவர் பெரிதும் மதித்துப் போற்றினார். அவரது சீடர்களாக 1100 பேர் சமர்த்த பிரிவில் இணைந்தனர். இவர்களில் 300 பேர்கள் பெண்களாவர்.
ராமதாஸரின் தர்ம பிரசாரத்தை இவர்கள் மேற்கொண்டு நாடு முழுவதும் அதைப் பரப்பலாயினர்.
சிவாஜியின் மகனான ராஜாராம் செஞ்சியின் மீது படைஎடுத்து ஔரங்கசீப்பின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முயன்றார். ராமதாஸர் தனது தெற்கு நோக்கிய விஜயத்தின் போது சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரரான வெங்கோஜி அவரது சீடரானார். தஞ்சாவூரில் ஒரு மடத்தை நிறுவிய ராமதாஸர் அங்கு தனது நேரடி சீடரான பீமஸ்வாமியை அதை நிர்வகித்து வருமாறு கூறி அருளினார்.

சீக்கியர்களின் குருவான ஹர்கோவிந்த சிங்கை ராமதாஸர் தனது ஶ்ரீ நகர் விஜயத்தின் போது சந்தித்தார். சந்திப்பின் போது ராமதாஸர் ஹர் கோவிந்த சிங்கிடம், “ நானக் வழியில் வந்த நீங்கள் உலகைத் துறந்தவர்கள் தாம். நீங்கள் அரசன் உடையை அணிந்து ஆயுதங்களைத் தரித்து உள்ளீர்கள். குதிரைப் படையைக் கொண்டு செல்கிறீர்கள். இது ஏன்? என்றார். உடனே ஹர்கோவிந்தசிங், “ நான் உள்ளே ஒரு துறவி. வெளியே ஒரு அரசன்” என்றார். “ஆயுதங்களைத் தரிப்பது ஏழைகளைப் பாதுகாக்கவும் கொடுங்கோலர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தான்” என்றார். உடனே ராமதாஸர், “இந்த பதில் என் மனதைக் கவர்கிறர்து” என்றார்.
தனது இறுதி காலத்தில் ராம நாமத்தை ஜெபித்தவாறே அவர் ஒரு வித உணவையும் எடுக்காமல் ராமனோடு ஒன்று கலந்தார். அவர் சமாதி நிலையை அடைந்த தருணத்தில் அவரது உடலிலிருந்து ஒரு பெரும் ஒளி வெளியில் கிளம்பியதை அனைவரும் பார்த்தனர்.
அவர் இறுதியாக தன் சீடர்களிடம் உபதேச உரை ஆற்றுகையில், “ஒரு போதும் உடல் தேவைகளைப் பற்றி அதிகம் நினைக்காதீர்கள். சத்சங்கத்தைக் கொள்ளுங்கள். ராமரை உங்கள் இதயத்தில் நிலை நிறுத்துங்கள். காம க்ரோத லோப மத மாத்ஸரியத்தை நீக்குங்கள். அனைவரின் மீதும் அன்பு கொள்ளுங்கள்’ என்றார்.
ராமதாஸரது இலக்கியம் பரந்துபட்ட ஒன்றாகும்.
அவரது இலக்கியமானது அவர் வடக்கிலும் தெற்கிலும் நிறுவிய அவரது மடங்களை ஏற்ற சீடர்களால் பரப்பபட்டு வந்தது.
தாஸ போதம் என்ற அவரது நூல் மிகவும் பிரபலமான நூலாகும்.
மானஸ ஸ்லோகம் என்ற அவரது மனதை நோக்கிக் கூறும் ஸ்லோகம் அனைவராலும் கூறப்பட்டு வரும் ஒரு ஸ்லோகமாகும்.
ராமர் ராவணனை வெற்றி கொண்டதை மட்டும் விவரிக்கும் அவரது ராமாயணம் பிரபலமான ஒன்று.
அவரது ஹனுமன் ஸ்தோத்திரம் இன்றும் கூட மஹராஷ்டிர பள்ளிக்கூடங்களில் மாணவர்களால் சொல்லப்பட்டு வருகிறது.
கருணாசதகம் உள்ளிட்ட பல நூல்கள் அவரால் இயற்றப்பட்டுள்ளன.
அனைத்திலும் வல்லவராக இருந்த காரணத்தினால் அவர் சமர்த்த ராமதாஸர் என்று அழைக்கப்பட்டார். அவரது சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டோர் சமர்த்த பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.
ராமதாஸரால் ஊக்கம் பெற்றோர் இன்று வரை ஏராளமானோர் உள்ளனர்; இனியும் இருப்பார்கள்.
ஸ்வாதந்திர வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் அவரது தாஸபோதத்தால் உத்வேகம் பெற்றார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை உருவாக்கிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் ராமதாஸரின் பெரும் பக்தர். ராமதாஸரது பல உரைகளை அவர் தனது டயரியில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அவரால் உத்வேகம் பெற்றே அவர் ஆர் எஸ் எஸ்ஸை நிறுவினார்.
அவரது உபதேச உரைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை; அனைவருக்கும் வழிகாட்டுபவையாகும்.
ஶ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராம ஓம் என்று தியானிப்பதோடு சமர்த்த ராமதாஸரின் அடி போற்றுவோம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.
**