
Post No. 14,337
Date uploaded in London – 2 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே என்று புலம்புகிறார் அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
XXX
இந்தியாவுக்கு எப்போது போனாலும் குல தெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க மாயூரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்வோம்.. இந்த முறை 2025 மார்ச் மாத இந்திய விஜயத்தின்போது சுவாமி மலையும் தரிசனத்தில் இடம்பெற்றது .
என்னுடைய பெயருக்கு காரணமே சுவாமிமலை சுவாமிநாதன்தான்; அந்த சுவாமிமலையை எனது பயணத்திட்டத்தில் சேர்க்கவில்லை;. கும்பகோணம் ஸ்ரீவத்சம் கெ ஸ்ட் ஹவுசில் தங்கி, மதிய உணவு அருந்திய பின்னர் நண்பர் சீனிவாசனிடம் நீங்கள் இங்கேயே தங்குவதால் உங்களுக்குத்தான் ரூட் தெரியம்; மாலை 4 மணி முதல் இரவுச் சாப்பிடுவரை எங்கெங்கு போகலாம் என்று சொல்லுங்கள் என்றேன்.
முதலில் சுவாமிமலைக்குப் போவோம் என்று துவங்கினார்; உடனே எஸ் எஸ் YES, YES என்று சொன்னேன்.
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா என்ற சினிமா பாட்டுதான் நினைவுக்கு வந்தது இறைவனே இங்கே வா என்று சொல்லும் அசரீரிதான் வேறொரு ஒருவரின் வாய்ச் சொல் மூலம் வருகிறது போலும்!
****
புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில்

அப்பர் பாடிய பாடலில் வைத்தீஸ்வரன்கோவில் பற்றிய எல்லா அரிய செய்திகளும் வந்துவிட்டன. இங்குள்ள தனிச் சிறப்புகள் மூன்று :
முதல் சிறப்பு தன்வந்திரி சிலை இருப்பதாகும்; அது தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் என்பதை மெய்ப்பிக்கிறது உலகில் முதல் முதலில் மருத்துவத்தைப் போதித்தவர் தன்வந்திரி.
இரண்டாவது தனிச் சிறப்பு இது செவாய் தோஷ பரிகாரத் தலம் ஆகும் அங்காரகன்/ செவ்வாய் சந்நிதியும் உளது
மூன்றாவது சிறப்பு — பாடல் பெற்ற முருகன்– செல்வமுத்து குமார சுவாமி இருப்பதாகும்.
இந்தக் காரணங்களால் நாங்கள் கணேசர் தொடங்கி, முருகன், சிவன், அம்பாள் அஃகாரகன், தன்வந்திரி என்று ஆறு அர்ச்சனைகள் செய்வது வழக்கம் இந்த முறையும் அப்படியே செய்தோம். மாலை நேரம் ஆனதால் அதிக கூட்டம் இருக்கவில்லை.
இங்கு குளத்தில் வெல்லம் கரைப்பதும், அம்பாள் சந்நிதிக்கு அருகில் உப்பு -மிளகு போட்டு மருந்து உருண்டை பெறுவதும் வழக்கம்.
****
சுவாமி மலையில் மகன்
சுவாமிமலை முருகனுக்கு வேறு எங்கும் இல்லாத சிறப்பு உண்டு. தந்தையான சிவபிரானுக்கே ஓம்காரத்தின் உட்பொருளை விளக்கிய பெருமை உடையவன்!
கோவிலுக்குள் மாலையில் சென்றோம் படிகள் ஏறித்தான் இறைவனைத் தரிசிக்க வேண்டும் ஆனாலும் பழனி மலை போல அதிகப் படிகள் கிடையாது; எவரும் ஏறிவிடலாம்.
உள்ளே நுழையும்போதே அசரீரி ஒலித்தது!
சார்! நூறு ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு போங்கள்; சுவாமிக்கு முன்னால் அரை மணி நேரம் கூட நிற்கலாம் என்றது அந்தக் குரல்; அவர் கட்டாயம் கோவில் ஊழியர் அல்ல ;எப்போதும் டிக்கெட் வாங்க மறுக்கும் அல்லது தயங்கும் நான் உடனே எனக்கும் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினேன். திவ்ய தரிசனம்தான்; சுவாமிநாதனுக்கு மிக அருகில் இருபது நிமிடம் நின்று நல்ல தரிசனம் கிடைத்தது
எங்கு போனாலும் நேரம் ,காலம், சூழ்நிலை ,அறிந்து சிறிது விசாரித்துச் சென்றால் முழுப்பலனையும் அடையலாம்; எல்லாவற்றுக்கும் மேலாக அவன் அருளாலேதான் அவன் தாள் வணங்க முடியும். சும்மாவா சொன்னார் மாணிக்கவாசகர்
சுவாமி மலைக்குப் போனது இது முதல் தடவை அல்ல; ஆயினும் இந்த தரிசனம் மனதில் நீங்காது நிற்கிறது .


முக்கியக் குறிப்புகள்
முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது.
கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோவி ல் என்றும் அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன் சுவாமி’ எனப் புகழ் பெற்று விளங்குகிறார். இக்கோவி லின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மூன்று கண் படைத்த நேத்திர விநாயகரும் புகழ்பெற்ற பிள்ளையார் ஆவார்
****
சுவாமிமலை திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய …… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய …… மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு …… மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட …… அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு …… சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு …… மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி …… லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல …… பெருமாளே.
****
Vaitheeswaran Koil Entrance
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே.
—SUBHAM—
TAGS- சுவாமி மலை , சுவாமிநாதன், முருகன், படைவீடு, ஓம்காரம், வைத்தீஸ்வரன்கோவில், அப்பர் தேவாரம், திருப்புகழ், புள்ளிருக்குவேளூர், அங்காரக க்ஷேத்திரம், தன்வந்திரி