Post No. 14,358
Date uploaded in London – 7 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 6-4-2025
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு
****
நேயர்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்
முதலில் ராம நவமி பற்றிய செய்திகள்
மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி
மேற்கு வங்கம் முழுவதும் இன்று ஒரு கோடிக்கும் மேலான இந்துக்கள் பங்கேற்கும் 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடக்கின்றன . இதை இருபது இந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது
மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி இது பற்றிய தகவல்களை வெளியிட்டார் ,

கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடிக்கும் மேலான இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்குள் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் சுவேந்து அதிகாரி கூறினார்
சென்ற ஆண்டு ராம நவமி ஊர்வலம் மீது தாக்குதல்கள் நடந்தன ; ஆகையால் மேற்கு வங்க அதிகாரிகள் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
****
ராம ரத யாத்திரைக்கு தடை : அப்பட்டமான ஹிந்து விரோதம் – எச்.ராஜா குற்றச்சாட்டு!
ராம ரத யாத்திரைக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்த கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அல்உமா பாஷாவின் மரணத்தை தொடர்ந்து 2000 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்றும் தமிழகத்தின் பெருநகரங்கள் தோறும் கலாச்சார சீரழிவுக்கும், போதைப்பொருள் பரவலாக்கலுக்கும் வழிவகுக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கும் தமிழக காவல்துறை என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான PFI இயக்கத்துக்கு ஆதரவாக விசிக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த மாநிலம் முழுவதும் அனுமதி அளித்த தமிழக காவல்துறை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஷாகீன் பாக் என்கிற பெயரில் கூடாரம் அமைத்து பல நாட்கள் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர் போராட்டம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டினத்தில் ராம நவமி தினத்தன்று ராம ரத யாத்திரை நடத்த ராம பக்தர்களுக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்க்கொண்டு ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களை அகதிகள் போல நடத்தும் தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கும் தமிழக காவல்துறையின் ஹிந்து விரோத நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.
*****
திருவாரூர் ஆழித் தேரோட்டம்

திருவாரூரில் நாளை ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட் டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரசித் தி பெற்ற ஆழித்தேரோட்டம் நாளை ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடை பெறவுள்ளது.
ஆசியாவிலேயே பெரிய தேர்:
அலங்கரிக்கப்பட்ட நிலையில் 350 டன் எடை கொண்டதாகவும், 96 அடி உயரம் கொண்டதாகவும் உள்ள இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது.
இந்த தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளூர் விடுமுறை:
தேரோட்டத்தையொட்டி ஏப்.7-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
****
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோர்ட் அனுமதி
தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீக்கியுள்ளது.
நாளை ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
கோவிலின், புனரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்கும்வரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்றுமுன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நிறைவடைந்து, யாகசாலை பூஜைகள் துவங்கிவிட்டன.
இந்த சமயத்தில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிட்டார். மேலும், கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை. ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்யப்பட்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட ஐகோர்ட்டு மதுரைக்கிளை, தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது.
*****
முருகன் தலங்களில் பங்குனி உத்திரத் திருவிழா ஆரம்பம்
பழனி மற்றும் கழுகுமலை முதலிய தலங்களில் பங்குனி உத்திரத் திருவிழா ஆரம்பம் ஆகிவிட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம் . இந்த விழாவின் போது, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று, மலைக்கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
ஏப்ரல் 10-ஆம் தேதி, வள்ளிநாயகி அம்மனுடன் திருமுருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பிறகு, மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா வருவார்.
இதே போல
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் தேதி காலை வைரத் தேரில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானை, விநாயகர் பெருமான் ஆகியோர் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது 12-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
****
மருதமலை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணியசாமி கோயிலில் மகாகும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனால் கோயில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்திபெற்ற மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் ஏழாவது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகம் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை நடைபெற்றது.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி L E D திரைகள் அமைக்கப்பட்டு, அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
******

உத்தரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
இங்குள்ள இலந்தை மரம் பழங்காலம் தொட்டு இன்றும் பூத்துக்குலுங்குகிறது. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன.
மரகத நடராசர் சிலை உள்ள ஆலயம். இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது.
****

சுவிட்சர்லாந்து நாட்டில் புதிய கோவில்
சுவிட்சர்லாந்து ஓல்ரன் திறிம்பார்க் தலத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகுஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 11.ஆம் தேதி நடைபெறுகிறது அம்பிகை அடியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை தரிசித்தும் பூர்ணாகுதி மற்றும் மண்டலாபிஷேக உபயங்களை ஏற்றும் அம்பிகையின் திருவருளை பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகிகள் வேண்டுகின்றனர்.
நன்கொடை அனுப்புவதற்கான பாங்கு கணக்கு விவரங்கள் எங்கள் இரண்டு பிளாக்குகளிலும் நாளை வெளியாகும்.
****
மத்தியப்பிரதேசத்தில் கோவில் நகரங்களில் மதுபானத்துக்குத் தடை
மதுபானத்திற்கு கோவில் நகரங்களில் மத்திய பிரதேச அரசு விதித்த தடை ஏப்ரல் முதல் தேதி முதல் செயல்முறைக்கு வந்துவிட்டது
மத்திய பிரதேச அரசு, மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, 19 முக்கிய நகரங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் இந்த முடிவை முன்பே அறிவித்து இருந்த தார். முதல் கட்டமாக ஆறு நகராட்சிகள், ஆறு நகர பேரூராட்சிகள் மற்றும் ஆறு கிராம பஞ்சாயத்துகளில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் 19 மத வழிபாட்டுத் தலங்களில் மது விற்பனையைத் தடை செய்வதற்கான மத்தியப் பிரதேச அரசின் முடிவு குறித்து துணை முதல்வரான ஜெகதீஷ் தேவ்தா சில கருத்துகளைப் பகிர்ந்ததார் .
“இந்த முடிவுக்கு மரியாதைக்குரிய முதல்வருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் படிப்படியாக மது விலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்றாலும், இது ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கை”, என்று கூறிநார்
தடை அமல்படுத்தப்படும் நகரங்கள்: உஜ்ஜைன், மைஹார், டாடியா, பன்னா, மண்டலா, முல்தாய், மந்த்சௌர், ஓர்ச்சா, சித்ரகூட், அமர்கண்டக், மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், சல்கான்பூர், பந்தக்பூர், குண்டல்பூர், பர்மன்கலா, லிங்கா, பர்மன்குர்ட் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது *****
ஹிந்து கடவுள் குறித்து அவதுாறு: கேரள கம்யூ., எழுத்தாளரால் சர்ச்சை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஹிந்து கடவுளை மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான்குமார் அவதூறாக பேசியதாக பா.ஜ., மா.கம்யூ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மா.கம்யூ., சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான் குமார் பரிசு வழங்கி பேசினார்.
அப்போது ஹிந்து கடவுள் குறித்து அவர் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து திரும்பிய எழுத்தாளரின் காரை பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வழிமறித்தனர். மா.கம்யூ., தொண்டர்களும் அங்கு திரண்டனர்.
இரு தரப்பினரும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராபின்சன் 30, என்பவர் காயமடைந்தார். தகவலறிந்து வந்த அருமனை போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்
விழாவில் பேசப்பட்ட ஆடியோ பரிசோதிக்கப்படும் என்றும், அதில் ஹிந்து கடவுள் பற்றி அவதூறு பேசியிருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.எஸ்.பி., உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
****
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் வெளியீடு
பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைவரிடமும் தெய்வீகத்தை காண வேண்டும் என்பதே நமது கலாச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார்.
நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நன்மை பயப்பதாகவும் அவர் கூறினார். உலகை கட்டியெழுப்ப அவை மிகப் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறிய மோகன் பகவத், நமது வேதங்களை மறுகட்டமைப்பது அவசியம் என்றும் சுட்டிக் காட்டினார்.
*****
சோழர் கால கற்றளி கண்டுபிடிப்பு
முதலாம் பராந்தகச் சோழர் காலத்தில் எழுப்பிய 1100 ஆண்டு பழமையான கற்றளிக் கோயில் கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் புதுக்கோட்டை பெருங்களூர் அருகே மாந்தாங்குடி கிராம எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருங்களூர் அருகே, புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோவிலின் சிற்பங்கள், கட்டுமான சிதிலங்கள், கல்வெட்டுகள் ஆகியன புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கற்றளி என்றால் கல்லால் கட்டப்பட்ட கோவில் என்று பொருள்.
முற்கால சோழர் கலைப்பாணியில் முருகன், துர்க்கை, பிரம்மா மற்றும் இடுப்பளவு உடைந்த நிலையில் ஒரு சிற்பம், மூன்று நந்தி சிற்பங்கள், யாளி வரிசை, ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டின் துண்டுப் பகுதி ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
ஏப்ரல் 13- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—subham—
Tags- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 6-4-25