
Post No. 14,361
Date uploaded in London – –8 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
ராம நாம மஹிமை! – 1
ச. நாகராஜன்
உலகெங்கிலுமிருந்து இந்த ஞானமயம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே வணக்கம், நமஸ்காரம்.
ஏராளமான நூல்கள் ராம நாமத்தின் மகிமையையும் ராமாயண இதிஹாசத்தின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.
அனைத்தின் சாரமும் கூறுவது: எல்லையற்ற மகிமை கொண்டது ராம என்ற இரண்டெழுத்துத் திருநாமம் என்பதைத் தான்.
சில நூல்களிலிருந்தும் சில பெரியோர்களின் வாக்கிலிருந்தும் எடுத்துத் தொகுக்கப்பட்ட ராம நாம மகிமை மற்றும் ராமாயணத்தின் பெருமை பற்றி இங்கு பார்க்கலாம்.
வால்மீகி
யஸ்து பூஜ்யந்தே நித்யம் ராமாயணமிதம் நர: I
சுபுத்ர பௌத்ரௌ லபதே வைகுண்டே ஸ்தானமக்ஷயம்II
உத்தரகாண்டம் 110ம் ஸர்க்கம் ராமாயணத்தில் 23998ம் ஸ்லோகம்
இந்த ராமாயணத்தை பிரதி தினமும் எவனேனும் ஒரு மனிதன் பிறரைப் படிக்கச் செய்கிறான் என்றால் அவன் புத்திரர்கள் பௌத்திரர்கள் இவர்களை உடையவனாய் வைகுண்டத்தில் புனர்ஜன்மமில்லா நிலையைப் பெறுகிறான்.
யம் யம் காம்யதே காமம் ஸ்ருவன் ராமாயணம் நர: I
தம் தம் நித்யமாப்னோதி ராகவஸ்ய ப்ரஸாதத: I I
உத்தரகாண்டம் 110ம் ஸர்க்கம் ராமாயணத்தில் 23999ம் ஸ்லோகம்
ராமாயணத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் மனிதன் எந்தெந்த மனோரதத்தை விரும்புகின்றானோ அததையே ஶ்ரீ ராகவரது அனுக்ரஹத்தால் நிச்சயமாய்ப் பெறுகிறான்.
துளஸிதாஸர்
துளஸிதாஸரின் ராமசரித மானஸில் இருவரிகள் கொண்ட 6700 ஸ்லோகங்கள் உள்ளன.
அவர் கூறுகிறார்:
ஹே ரகுநாதா! உன்னுடைய ராம நாமத்தை வந்தனம் செய்கிறேன், அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய மூவருக்கும் ஹேது பீஜாக்ஷரங்களான “ர”, ‘ஆ” “ம” என்கிற மூன்று எழுத்துக்களின் ரூபமாக நீர் இருக்கிறீர் அல்லவோ! அந்த ராம நாமம் பிரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் ஸ்வரூபமாக இருக்கிறதல்லவா? அந்த நாமமே வேதத்திற்குப் பிராணன் அல்லவா?
“ஹே, பிரபு, நீர் நிர்குணர் என்றும், குணரஹிதர் என்றும் சொல்லப்படுகிறீர். உம்மையே உமக்கு உபமானமாகவும் உமக்கே உரியதும், மிக்க அழகானதும், காதுக்கு இனிமையானதும், கண்களுக்கு இன்பமாகவும், மனத்திற்கு குளிர்ச்சியாகவும் ஆகிய எல்லாம் ஒன்று சேர்ந்து குணக்கடலாகவும் நீர் விளங்குகிறீர் அல்லவா?
பால காண்டத்தில் 137வது ஸ்லோகம்
எந்த மஹாத்மாவினுடைய உள்ளம் சதா திருமாலாகிற ஶ்ரீ ராம பதாப்ஜங்களில் அனுரக்தமாக லயம் அடைகிறதோ, அந்த மஹாத்மா தான் ஸர்வக்ஞன். அவனே யாவற்றையும் நிச்சய புத்தியினால் அறிந்தவன். அவனுக்குத் தான் எது நியாயம், எது அநியாயம் என்று கலக்கமின்றித் தெரியும். அவன் தர்மாத்மா. அவன் ஸகல புருஷார்த்தங்களையும் மிச்சமின்றி அடைந்தவன். அவன் தான் இகத்திலும், பரத்திலும், சகல கல்யாண குணங்களின் சேர்க்கையுள்ள புண்ய ராசி; அவனே குணோத்தமன். அவனே பரம ஞானி. அவனே குலத்தின் நாயகன். அவனே பூமிக்கு விலக்ஷணமான ஆபரணம். அவனே பண்டிதன். ஹ்ருதி வேத்யனை அறிந்த மஹா வித்வான். அவனே பவித்ரமான தானங்களைச் செய்த வள்ளல். அவனே தர்ம பாராயணன். அவனே யாவராலும் போற்றத் தகுந்த குலீனன்
உத்தர காண்டத்தில் 841வது ஸ்லோகம்
கம்பர்
ராம நாம மஹிமை பற்றிக் கூறுவது:
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
கவிச் சக்கரவர்த்தி கம்பர் – கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே
– கவிச் சக்கரவர்த்தி கம்பர்
தியாகராஜ ஸ்வாமிகள்
திருவாரூரில் பிறந்த வால்மீகியின் அம்சமாகக் கருதப்படும் தியாகராஜ ஸ்வாமிகள் ஏராளமான தனது கீர்த்தனைகளில் ராம ரஹஸ்யத்தை விண்டுரைக்கிறார்.
அவர் கூறுவதில் ஒன்று:
ஹே ராமா! உன் நாமத்திற்கு ஜய மங்களம். உன் ரூபத்திற்கு ஜய மங்களம். ஆஞ்சநேயர் பற்றிப் போற்றும் உன் பாத கமலங்களுக்கு நமஸ்காரம். பட்டு வஸ்திரங்கள், நவரத்தினங்கள், நவமுக்தாஹாரங்கள் ஆகிய எல்லாவற்றுடனும் விளங்கும் உனது வக்ஷஸ்தலத்திற்கு ஜய மங்களம்.
என்னை மோஹிக்கச் செய்வதும், நளினமானதும் மந்தஸ்மிதமான முக மண்டலத்திற்கு நமஸ்காரம். பங்கஜாக்ஷியான சீதையைத் தழுவின உன் கரங்களுக்கு நமஸ்காரம்.
சுருள் சுருளாக அலைபோல திரண்டு வருவதும் எனது பாபக் கூட்டங்களை அழிப்பதுமான கரும் கேசக்கொத்துக்களுக்கு, நெற்றியில் தொங்கும் ஊர்த்வ புண்டரங்களுக்கு, முகுடாமணிக்கு,, புருவ நெற்றிக்கு,, உனது செப்புவாய் இதழ்களுக்கு, எனது தாபங்களை அடக்கின அம்ருத தாரையாகிய ஸத்யவாக்குக்களுக்கு, ப்ரணவாகாராமான விமானத்திற்கும்,, ஈஸ்வர ஜீவாத்மாவைச் சேர்த்து வைக்கும் உன் அஸ்யுத பாதரக்ஷைகளுக்கும், நாங்கள் அடிக்கடி நமஸ்காரங்கள் செய்கிறோம்.
ஶ்ரீ ராம நாமத்தின் மஹிமையைப் பற்றி அவர் கூறுகிறார்:
மனஸா!
ஶ்ரீ ராம பஜன, பர லோக ஸாதனமே
ஸ்மர, லோப, மோஹ, ஆதி பாபுலனு ஸ்மரியஞ்சதே;
ஜனன ஆதி ரோக பயாதுலசே,
ஜகமந்து கல்கு துராஸலசே,
தனய ஆதி பாந்தவுல ப்ரமசே, தகலனு ஈது
கிருதியின் பொருள்:
ஓ, மனமே!
இராம பஜனை மறுமைக்குச் சாதனம்
காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதே..
பிறவி முதலாக நோய்கள் என்னும் பெரிய பயங்களிலும், உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும், மனைவி மக்கள் முதலாக சுற்றமெனும் திகைப்பினிலும் (ராம நாமம்) சிக்க விடாது.
ராமதாபினீ உபநிடதம் விளக்கும் ராமநாம மஹிமை!
நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்றான ராமதாபினீ உபநிடதம் ராம நாம மஹிமையைப் பற்றி நன்கு விளக்குகிறது.
இது அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிடதங்களில் ஒன்று.
இதில் உள்ள சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஶ்ரீ ராமபூர்வதாபின்யுபநிஷத் என்ற முதல் பகுதியில் வருவது:
யதைவ வடபீஜஸ்த்த: ப்ராக்ருதச்ச மஹாத்ரும:!
ததைவ ராமபீஜஸ்த்தம் ஜகதேதச்சராசரம் ||
பொருள் : எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ, அப்படித்தான் ராம என்னும் பீஜத்தில் இந்த சராசர ப்ரபஞ்சம் உறைகிறது.
ஶ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத் என்ற இரண்டாம் பகுதியில் வருவது:
ஓம் யோ வை ஶ்ரீ ராமசந்த்ர: ஸ பகவான் அத்வைத ப்ரமானந்தாத்மா பூர்ப்புவஸ்தஸ்மை வை நமோ நம: |
பொருள் : எவர் ஶ்ரீ ராமச்சந்திரரோ அவர் தான் பகவான். இரண்டற்ற பரமானந்த ஆத்மா. பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் எல்லாம் அவரே. அவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
**