சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-1 (Post.14,366)

Written by London Swaminathan

Post No. 14,366

Date uploaded in London –  9 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 உலக மக்களின் அறிவுக்கு ஸம்ஸ்க்ருத மொழி அளித்த விஷயங்கள் அனைத்தையும் யாரும் அளவிட முடியாது ; ஆயினும் தொட்டுக்காட்ட முடியும் ; இவை அனைத்தையும் படித்தவர்களும் எவருமிலர் .

நான் சங்க இலக்கியத்தின் பதினெட்டு நூல்களையும் திருக்குறளையும் சிலப்பதிகாரம் மணிமேகலை , கம்பராமாயணம் முழுவதையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் நாற்பது ஆண்டுகளில் படித்து முடித்தேன் ஆகையால் ஓரளவுக்கு தமிழ்  இலக்கியத்தைப் படித்ததாகச் சொல்ல முடியும் .

சம்ஸ்க்ருத இலக்கியத்தில் எல்லா சப்ஜெக்டுகளும் உள்ளன. ஆகையால் எல்லோரும் படித்திருக்க முடியாது ; சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .

****

வேதங்கள்

நான்கு வேதங்களையும் படித்தவர்களை சதுர்வேதி  என்பார்கள்; இப்போது இந்தப் பெயரை மட்டுமே காணலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அப்படி நான்கு வேதங்களையும் படித்தவர்கள் அல்ல. நான் ரிக்வேத தமிழ் மொழிபெயர்ப்பை மட்டுமே படித்தேன்; ஒரிஜினலைப் படிக்கும் அளவுக்கு சம்ஸ்க்ருத ஞானம் இல்லை . இவைகளில் என்ன இருக்கிறது ? என்று பலரும் கேட்கலாம். இவற்றின் பொருளை வீட மந்திர ஒலிக்கே மஹிமை என்பது பெரியோர்களின் வாதம் ; ஆகையால்தான் பாரதியாரும் சொன்னார் – நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு – என்று.

****

உபநிஷத்துக்கள்

இதை வேதத்தின் அந்தம் = வேதாந்தம் என்பார்கள்; அதாவது நான்கு வேதங்களின் துணிபு, முடிவு; சாரம் என்று பொருள்; உலகத்தின் மிகப்பெரிய தத்துவங்கள் இதில்தான் உள்ளன. உலகத்திலுள்ள எந்தத் தத்துவ ஞானியின் வசனங்களையும் இதில் காணலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் முன்னால் தோன்றியவை உபநிஷத்துக்கள் ; அதனால்தான் பாரதியும் சொன்னார்

பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசை யேதொரு நூல் இது போலே”– என்று

முக்கிய உபநிடதங்கள் எட்டுதான்; அவைகளையும் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புக்களில்தான் படிக்க முடிகிறது; ஏனெனில் நிறைய சம்ஸ்க்ருத மொழி ஞானம் அவசியம் 

****

புராண இதிகாசங்கள்

இதையடுத்து வருவது புராண இதிகாசங்கள்.

புராண இதிகாசங்கள். முழுவதையும் படித்தவர்களை நான் கண்டதே இல்லை. இவைகளில் ஏதெனும் ஒண்றினைப் படித்தவர்களைக் கண்டுள்ளேன்.

இரண்டு இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திலுள்ள எல்லா   ஸ்லோகங்களையும் படித்த அனந்த ராம தீட்சிதர் மதுரை மீனாட்சி கோவிலில் நடத்திய உபன்யாசங்களை ஓரு நாள் விடாமல் கேட்டேன்; ஆயினும் என்னால் ஆங்கிலத்தில்தான் ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பினை படிக்க முடிந்தது .

இந்த இடத்தில், எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் புத்தக முன்னுரையிலேயே சொன்ன விஷயத்தை நினைவுபடுத்துகிறேன் உலகில் எந்த ஒரு நூலின் மொழிபெயரப்பும் அந்த ஒரிஜினலை– மூலத்தைக் கொண்டுவரவே முடியாது; கருத்துக் செறிவினை அளிக்கலாம். ஆனால் ஒரிஜினலில் உள்ள இலக்கிய நயத்தை, சொற் பிரயோகத்தை, எதுகை மோனையை அளிக்கவே முடியாது .

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்வேன். என்னிடம் பாரதியார் பாடல்கள் தமிழிலும் ஆங்கில மொழி பெயர்ப்பில்லும் உள்ளன. தமிழறிந்த தமிழனுக்கு அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உப்பு இல்லாப் பண்டம் ஆகும்  பஜ்ஜி- வடை- போண்டா- வெண்பொங்கலை உப்புப் போடாமல் உங்கள் இலையில் பரிமாறினால் எப்படி முகம் சுழிப்பீர்கள்?  நினைத்துப்  பாருங்கள்  நான் படித்தது எல்லாம் ஆங்கில ராமாயணமே !

அடுத்த இதிகாசமான மஹாபாரதத்தில்  ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் ஒரிஜினலில் படித்தார்களைக் கண்டதில்லை. மதுரை மீனாட்சி கோவில் ஆடி வீதியில் புலவர் கீரன் நிகழ்த்திய சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன் ஆயினும் சம்ஸ்க்ருத ஸ்லோககங்களை அவர் சொன்னதாக நினைவில்லை.

க்ரிட்டிக்கல் எடிஷன் என்று ஒரிஜினலை நூலாக வெளியிட்ட வடக்கத்தி ஆட்களும், ஆங்கிலேயர்களும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் பார்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எடிட்டர்– ப்ரூப் ரீடர்களே!!

18 புராணங்களையும் படித்தவர்களைப் பார்க்கவே முடியாது; ஏனெனில் அவைகளில் எட்டு லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன; அவற்றிலுள்ள ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை  நாம் ஒரிஜினலில் பார்த்திருக்கலாம்; அவற்றிலுள்ள நூற்றுக் கணக்கான கதைகளைப் படித்திருக்கலாம். ஆயினும் ஒரிஜினல் எட்டு லட்சம் ஸ்லோகங்களைப் படித்தவர்கள் இக்காலத்தில் இல்லை; ஆதி சங்கரர் போல சிலர் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். நமது காலத்தில் காஞ்சிப் பெரியவர் (1894-1994)  போல சிலர் படித்திருக்கலாம்; உறுதியாகச் சொல்வதற்கில்லை .

ஆக புராண இதிகாசங்கள் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்; குறிப்பாக மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதை, யக்ஷப் பிரச்னம் என்னும் பேயின் கேள்வி பதில்கள், உபாக்கியானங்கள், விதுர நீதி முதலியவை மிகவும் பிரசித்தம் ஆகும் .

பகவத் கீதை என்ற நூல் மேலை உலகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் செல்வாக்கினையும் சொல்லி மாளாது ; உலகத்திலுள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் அது வந்துவிட்டது .

நான் பாரதீய வித்யா பவன் நடத்திய பகவத் கீதையில் பதினெட்டு அத்யாயயங்களையும் முடித்து சர்ட்டிபிகேட் வாங்கினேன்; எழுநூறு ஸ்லோகங்களையும் சம்ஸ்க்ருதத்தில் படித்தேன்

யாரும் செய்யாத ஒரு பணியையும் செய்தேன்; தமிழில் பகவத் கீதை சொற்களை (TAMIL WORD INDEX FOR BHAGAVAD GITA)  மொழி பெயர்ப்புடன் இதே பிளாக்கில் அறுபது கட்டுரைகளில் வெளியிட்டேன்; பெரிய பணியைச் செய்துவிட்டதாக மகிழ்ந்தேன் ; இது மஹாபாரதத்தில் ஒரு சிறிய பகுதியே; ஆனாலும் இந்து மதத்தின் ஜூஸ் இது .

அனைவரும் சித்பவானந்தர்  அல்லது  ராமகிருஷ்ணா மடம்   அண்ணா  எழுதிய  கீதை  புஸ்தகங்களைப்  படிக்கவேண்டுகிறேன்

.****

மொழியியல் அற்புதங்கள்

மொழியியலில் (LINGUISTICS)  அற்புதங்களைப் புரிந்தவர்கள் இந்துக்களே !

எடிமாலஜி (ETYMOLOGY)  எனப்படும் சொற்பிறப்பியலை யாஸ்கர் என்பவர் 2800 ஆண்டுகளுக்கு முன்னரே நிருக்தம் என்ற நூலாக நமக்குத் தந்தார் ; அப்போதே மொழி ஆராய்ச்சியில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தால், அவர்கள் எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையவர்கள் என்பது தெரியும்

அதற்கு அடுத்தபடியாக பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னதாக உலகின் முதல் இலக்கண நூலை அஷ்டாத்யாயீ என்னும் நூலினை நமக்கு அளித்தார்; உலகம் வியக்கும் வண்ணம் சுருக்க மொழியில் நாலாயிரம் இலக்கண சூத்திரங்களை அளித்தார்; சுமார் மூவாயிரம் ஆண்டுளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழி அடைந்த முன்னேற்றத்தை நாம் காண முடிகிறது.

கடவுள் புண்ணியத்தில் டாக்டர் கே மீனாட்சி எழுதிய மூன்று  தொகுதி மொழிபெயர்ப்பு கிடைத்தது அதைப் பலமுறை படித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினேன்.

பாணினியின் இலக்கணத்துக்கு பதஞ்சலி எழுதிய .மஹா பாஷ் யத்தை– மிகப்பெரிய நூல்- தொட்டுக்கூடப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை இதன் காலமொன்றுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது இந்த நூல்.

உலகில் அகராதியை மனப்பாடம் செய்யும் வழக்கமும் இந்துக்களிடையே உண்டு; சம்ஸ்க்ருத வேற்றுமைகளை மனப்பாடம் செய்யும் வழக்கமும் இந்துக்களிடையே உண்டு உலகின் முதல் நிகண்டு நூல் அமரகோஷம். இதை நாங்கள் மாலை நேர இலவச வகுப்புகளில் வாத்தியார் சொல்லச் சொல்ல திரும்பச் சொல்வோம். முதல் இரு நூறு வரிகள் எனக்கும் என் தம்பிக்கும் மனப்பாடம்; வாத்தியாரின் உடல்நலக்குறைவால் சம்ஸ்க்ருத வகுப்பு மூடப்பட்டது; இருந்தபோதும் அதையும் வேற்றுமை விகுதிகளைக் கூறும் சப்த மஞ்சரியையும் அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வோம்.

மொழி இயலில் மூவாயிரம் ஆண்டுகளில் இந்துக்கள் கண்ட புதுமைகளை கிரேக்க, பாரசீக, சீன, தமிழ், லத்தீன் மொழிகளில் காண முடியாது !

****

உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம்

அட , சம்ஸ்க்ருதம் செக்ஸ் என்னும் பாலியலைக் கூட விடவில்லை ; உலகின் முதல் செக்ஸ் புஸ்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் அவரது காம சூத்திர நூல் மேலை உலகத்தில்  விற்பனையில் இளைஞர்களிடையே சக்கைப்போடு போடுகிறது ; நானும் லண்டனில் வாங்கினேன்; ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்புதான். இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கஜுரோஹா கோவிலில் இதை ஆயிரக்கணக்கான  சிறபங்களாக வடித்தனர்; அதிலும் நாம்தான் முதல்!

****

காளிதாசன் செய்த அற்புதம்  …………………………….

தொடரும்

—subham—

Tags – சம்ஸ்க்ருத மொழி, உலகிற்கு அளித்த, நன்கொடை, சின்ன ‘சர்வே’, Part 1

Leave a comment

Leave a comment