
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,369
Date uploaded in London – –10 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நூல் அறிமுகம்
கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்
ச. நாகராஜன்
கந்தபுராண ஞானசபையின் பல வெளியீடுகளில் ஒன்றாக மலர்ந்துள்ளது ‘கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்’ என்ற நூல்.
இந்த நூலின் ஆசிரியர் சிவஶ்ரீ தில்லை S. கார்த்திகேயசிவம் அவர்கள்.
“தெய்வ விரதங்களால் மன ஒருமைப்பாடும், வைராக்யமும், ஆற்றலும் கிடைக்கின்றது; விரதத்தின் பொழுது ஐம்பொறி அடக்கமும், உணவு கட்டுப்பாடும் தேவையானது”” என்ற பெரும் உண்மையைத் தெரிவிக்கும் நூலாசிரியர் இந்த நூலில் மூன்று விரதங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்.
சுக்கிரவார விரதம், கிருத்திகை விரதம், கந்த சஷ்டி விரதம் ஆகிய மூன்று விரதங்கள் கந்தபுராணத்தில் உள்ளவையாகும்.
நவ வித பக்தியை விளக்கும் முதல் அத்தியாயம் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களையும் கௌரி அம்பிகைக்குரிய மூன்று விரதங்களையும் விநாயகருக்குரிய மூன்று விரதங்களையும் முருகப்பெருமானுக்குரிய மூன்று விரதங்களையும் பைரவருக்குரிய மூன்று விரதங்களையும் வீரபத்திரருக்குரிய ஒரு விரதத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
அடுத்து அடுத்த மூன்று அத்தியாயங்கள் விரதங்களை நன்கு விளக்குகிறது.
சுக்கிரவார விரதம் மூன்று நாட்கள் நியமம் கொண்டதாகும். இதை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செய்தால், இழந்த பதவி, பொருள், ஆட்சி, அதிகாரம் எதுவாக இருந்தாலும் அது மீண்டும் கிடைக்கும்.
அடுத்து கிருத்திகை விரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது விரிவாக விளக்கப்படுகிறது.
இதைக் கடைப்பிடிப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவோர் மூவுலகிலும் வேண்டிய பலனை அடைவார்கள்.
அடுத்து கந்த சஷ்டி விரதத்தை முறையாக எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
இதை மேற்கொள்வோர் அவரவர் இழந்த பொருள், அதிகாரம், பதவி, தலைமை ஆகியவற்றை மீண்டும் அடைவது உறுதி,
முசுகுந்த மன்னன் முருகப் பெருமானின் விரதங்களை மேற்கொண்டு அடைந்த பலன்களை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம்.
இந்த மூன்று விரதங்களைப் பற்றி சாதாரணமாக நமக்குத் தோன்றும் கேள்விகள் பல.
அவற்றை அடுத்த அத்தியாயம் வினா விடை வடிவில் தருகிறது.
ஸ்கந்த புராணத்தில் சிவரஹஸ்ய காண்டத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத்தில் உள்ள முருகப்பெருமானின் விரத மஹிமையை நூலின் இறுதி அத்தியாயம் கூறுகிறது.
76 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 100/
நூல் கிடைக்குமிடம்: கந்தபுராண ஞானஸபை
கள்ளக்குறிச்சி 606213 தொலைபேசி: 9751848933
கந்தபுராணத்தில் உள்ள முருகப்பெருமானின் மூன்று விரதங்களை அழகுறத் தொகுத்து விளக்கியுள்ள சிவஶ்ரீ தில்லை S. கார்த்திகேயசிவம் அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை.
***