

Post No. 14,373
Date uploaded in London – –11 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
15-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
பாகிஸ்தானிய பத்திரிகையாளரின் வியப்பு! கும்பமேளா மனித குலத்தின் மிகப்பெரிய கூட்டம்!
ச. நாகராஜன்
காலித் உமர் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்.
அவர் கும்பமேளாவைப் பற்றி, “ பூமி என்ற கிரகத்தில் ஹிந்துக்களின் விழாவில் மனிதகுலத்தின் மிகப் பெரிய கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
அதன் சாரம் இது:
“அது ஒரு தூய்மையான சந்தோஷம். பரவசம்.
ஒரு மிருகமும் பலி இடப்படவில்லை. ஒரு துளி ரத்தமும் சிந்தப்படவில்லை. வன்முறை இல்லை. ஒரு அரசியலும் இல்லை. ஒரு மதமாற்றமும் இல்லை. ஒரு பிரிவும் இல்லை; ஒரு பாகுபாடும் இல்லை. ஒரு விற்பனையும் இல்லை. ஒரு வியாபாரமும் இல்லை!
அது தான் ஹிந்து மதம்!
ஒரே ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மனித குலத்தில் இவ்வளவு பேர்கள் கூடியது இல்லை. அது மதம் சார்ந்ததாக இருக்கட்டும்; விளையாட்டாக இருக்கட்டும்; போராக இருக்கட்டும். ஒரு ஈமச் சடங்காக இருக்கட்டும் அல்லது ஒரு திருவிழாவாகத் தான் இருக்கட்டும்; இத்தனை பேர் உலகில் இதுவரை கூடியதே கிடையாது!
அது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் அது மஹா கும்பமேளா ஆகிவிட்டது – 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் பெரிய திருவிழா!
உலகம் அதைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கேட்டு வாயைப் பிளக்கிறது!
40 கோடி பேர்களுக்கும் மேல் 44 நாட்களில் கூடினர். முதல் நாளில் மட்டும் ஒன்றரை கோடி பேர்கள் புனித ஸ்நானம் செய்தனர்.
4000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது நடந்தது. ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் கூடாரங்கள் இருந்தன. 3000 சமையலறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்காக நாற்பதினாயிரம் பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நான்காயிரம் கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. வியக்க வைக்கும் ஒரு புள்ளி விவரம் இல்லையா இது?!
எனது வியப்பும் பிரமிப்பும் உலோகாயத விஷயத்திலோ, புள்ளி விவரத்திலோ அல்லது நிகழ்வின் பல்வேறு அம்சங்களிலோ அல்ல.
அது நமது கண்கள் காணும் காட்சி பற்றியதும் இல்லை. அது எண்ணிக்கை அல்லது அளவைப் பற்றியும் அல்ல.
மனிதகுலம் பிரபஞ்சத்தோடு எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி எண்ணியதால் ஏற்பட்ட மலைப்பு அது!
வானில் உள்ள கிரகங்களோடு எப்படி மனித குலம் தொடர்பு படுத்தப்படுகிறது என்பதையும் அதன் இயல்பான நகர்வுகளும் ஆன்மீக விளைவும் எப்படி மனித குலத்தின் விதியையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க உதவுகிறது என்பதைப் பற்றியும் எண்ணித் தான் இந்த பிரமிப்பு!
இதில் அதிகாரம், அந்தஸ்து எதுவுமில்லை. அரசியல் பின்னணியும் இல்லை. அது தானாகவே ஏற்பட்ட நம்பிக்கை. அது ஒரு திட்டமிடப்பட்ட மதக் கூட்டம் இல்லை. அது பாரம்பரியத்தின் வழியே வந்த வழிபாடு!
ஹிந்து தர்மம் என்பது பிரபஞ்சத்துடன் மனித குலம் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு அழகிய புரிதலாகும். அது நமது காலடியில் உள்ள தாவரங்களில் ஆரம்பித்து பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களுடான நமது இணைப்பைக் குறிக்கும் மிக அதி நவீன முன்னேறிய அறிவாகும்.
தியானம் செய்கின்ற சாதுக்களின் பிரக்ஞையும் கூட காலம் வெளி ஆகியவற்றைத் தாண்டிச் செல்ல வல்லதாயிருக்கிறது! என்னையும் பிரபஞ்சத்தையும் வேறாகச் சொல்லும் த்வைதம் என்னும் மாயையை அது உடைத்து ஒன்றாக்குகிறது
இன்றைய விண்வெளிப் பயணம் என்பது ஒரு கற்காலத் தொழில்நுட்பம் தான் என்றே நான் நினைக்கிறேன். நமது பௌதிக உடல்களில் நாம் இல்லை. தூய்மையான பிரக்ஞையாக, தெய்வீக ஒளியின் அங்கமாக, வடிவமற்ற காலம் கடந்த ஒரு நிலையை எட்டும்போது தூரம், காலம் ஆகியவற்றைத் தாண்டியவர்களாக ஆகி விடுகிறோம் நாம்!
இமயமலை சாதுக்களும் க்வாண்டம் மெகானிக்ஸும் இணைந்து ஒரு புனித ஸ்நானத்தை பிரம்மாண்டமான அறிவுக் கடலில் குளிக்கும் பிரமிப்பு அது!
ஹிந்துவாக இருப்பது என்பது உங்களின் இயற்கையை நிலையை உணரும் ஒரு நிலையாகும்.
இயற்கையே ஹிந்து!”
அற்புதமான ஒரு கட்டுரையை வழங்கிய காலித் உமர் என்ற இந்த பாகிஸ்தானிய பத்திரிகையாளரை உலகமே பாராட்டுவதில் வியப்பில்லையே!
***