27500 மகள்களுக்கு ஒரு அப்பா! (Post No.14,377)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,377

Date uploaded in London – –12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27500 மகள்களுக்கு ஒரு அப்பா! 

ச. நாகராஜன் 

27500 மகள்களுக்கு ஒரு அப்பாவா? அடேயப்பா, யார் அது? 

அவரது உண்மைப் பெயர் கே.பி.ராமசாமி. கோவையில் உள்ள கே ஆர் பி மில்ஸ் என்ற டெக்ஸ்டைல்ஸ் மில்லின் (KRP Mills) சொந்தக்காரர்.

 இன்றைய நாளில் தினசரி செய்தித் தாள்கள் மற்றும் இணையதள வாயிலாக நாம் காண்பது 20000 பேர் வேலை இழப்பு, 10000 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்ற செய்திகளைத் தான்.

 ஆனால் கேபி ராமசாமியோ யாரையும் வீட்டிற்கு அனுப்பவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையையும் மேலே உயர்த்தி மாற்றி விடுகிறார்.

 ஒரு சின்ன வேண்டுகோளில் இந்த பெரும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

 ஒரு நாள் ஒரு சிறுமி அவரிடம் வந்து, “அப்பா! நான் படிக்க விரும்புகிறேன். ஆனால் பணம் கட்ட வழியின்றி எனது பெற்றோர்கள் என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் நான் படிக்க விரும்புகிறேன்” என்றாள்.

 இதைக் கேட்ட கேபிஆரின் மனம் உருகியது.

அந்த சிறுமியின் வார்த்தைகள் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

 மாதாமாதம் சம்பளத்தைத் தருவதை விட அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையே தர விரும்பினார் அவர்.

மில்லுக்குள்ளேயே ஒரு கல்வி அமைப்பை அவர் நிறுவினார்.

1)   எட்டு மணி நேர வேலைக்குப் பின்னர் நான்கு மணி நேர படிப்பு.

2)   வகுப்பறைகள், ஆசிரியர்கள், ஒரு பிரின்ஸிபால், ஒரு யோகா பயிற்சியும் கூட.

3)   யாரும் எதற்கும் பணம் தர வேண்டாம். இதற்கான பணத்தை அவரே ஏற்றுக் கொண்டார்.

 இதன் விளைவு என்ன?

 24536 பெண்கள் தங்களது பத்தாவது, பன்னிரெண்டாவது யுஜி  மற்றும் பிஜி டிகிரிகளைப் பெறப் படித்தார்கள்.

அதில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் இப்போது நர்ஸ்களாக, ஆசிரியைகளாக, போலீஸ் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்திலிருந்து 20 தங்க மெடல் பெற்றவர்கள் ஒரு வருடத்தில் மட்டும் உருவாகி விட்டார்கள்.

சரி, இவர்கள் எல்லாம் வேறு வேலை தேடிப் போய்விட்டார்கள் என்றால்…

இதை எண்ணிக் கவலைப்படவே இல்லை கேபிஆர்.

 “அவர்கள் தங்கள் திறமையை வீணடித்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவர்கள் இங்கு இருப்பது ஏழ்மையினால் தான். தங்கள் விருப்பத்தினால் அல்ல. எனது வேலை அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தான்!” என்றார் அவர்.

 படிக்கிறார்கள். வெளியே செல்கிறார்கள். நல்ல ஒரு எதிர்காலத்தை அவர்கள் கொள்கிறார்கள். பிறகு..?

 இன்னும் ஏராளமான பெண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து மில்லுக்கு அனுப்புகிறார்கள்!

சமீபத்திய பட்டமளிப்பு விழா ஒன்றில் 350 பெண்கள் தங்கள் பட்டத்தைப் பெற்றனர்.

அனைவரையும் பார்த்து கேபிஆர் சொன்னார் : “உங்களால் அவர்களை நல்ல ஒரு வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்றால் மற்ற பெண்கள் படிப்பதற்கு அது உதவியாக இருக்கும்.”

 பல கோடி ரூபாய் வரும்படி வரும் வணிகத்தை நடத்தும் ஒரு பெரிய மில்லின் சொந்தக்காரர் இன்னும் கொஞ்சம் பிஸினஸ் தாருங்கள் என்று கேட்கவில்லை. மாறாக தனது மில் பணியாளர்களுக்காக தகுதியான நல்ல வேலையைக் கேட்கிறார்.

 இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

 உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்று சும்மாவா சொன்னார்கள்!

 ***

Leave a comment

Leave a comment