திரு ஆப்பாடி
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,386
Date uploaded in London –14 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
13-4-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து
வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சோழவளநாட்டில் மண்ணியாற்றின் கரையில் உள்ள சேய்ஞலூர் என்னும் திருத்தலமாகும்
கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம். இப்போது இது சேங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.
இது முருகன் வழிபட்ட தலமாகும். சேய் + நல்லூர். அதாவது முருகன் வழிபட்ட தலம் என்று பொருள். முருகன் இந்தத் தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சூரசம்ஹாரத்திற்கு உறுதுணையாக இருக்க பாசுபதாஸ்திரம் பெற்றார்.
சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொண்ட ஐந்து ஊர்களில் இதுவும் ஒன்று.
இறைவன் திரு நாமம் : சத்யகிரீஸ்வரர்
இறைவி : சகிதேவியம்மை
திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.
திரு ஆப்பாடி
சேய்ஞலூரிலிருந்து திரு ஆப்பாடி திருத்தலம் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
இறைவன் பெயர் – பாலுகந்த ஈஸ்வரர்
இறைவி பெயர் : பெரிய நாயகி
சண்டேஸ்வர நாயனார் பசுக்கள் மேய்த்த தலம் என்பதால் இது ஆப்பாடி என்று அழைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசர்,
“சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே”
என்று பாடி சண்டேஸ்வர வரலாறை தனது பதிகத்தின் நான்காவது பாடலில் இப்படிச் சுட்டிக் காட்டுகிறார்:
அண்டம் ஆர் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக்
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே.

ஒருகாலத்தில் அந்தணர் மரபில் எச்சதத்தன் – பவித்திரை என்ற தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விசாரதர்மர் என்று பெற்றோர் பெயரைச் சூட்டினர்.
குழந்தைக்கு ஏழு வயதிலேயே உபநயனம் செய்விக்கப்பட்டது.
ஒரு நாள் பசுக்களை மேய்க்கும் இடையன் ஒருவன் தன் கையிலிருந்த கம்பால் தன்னை முட்ட வந்த பசுவை அடித்தான்.
இதைக் கண்டு வருந்திய விசாரதர்மன், “ஐயா! பசுக்கள் தங்கள் உடலில் தேவர்களையும் முனிவர்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளன. பஞ்சகவ்யங்களை ஈசனுக்கு அளிக்கும் பசுக்களை அடித்தல் தவறு” என்று கூறி பசுக்களை மேய்க்கும் பணியை தானே மேற்கொண்டான்.
சிவபக்தி மேலிட மண்ணியாற்றின் கரையில் ஒரு ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து பசுவின் பாலினால் அதற்கு அபிஷேகம் செய்வித்து விசாரதர்மன் வழிபடலானான்.
இதைக் கண்ட ஒருவன் ஊருக்குள் சென்று பசுவின் பாலை விசாரதர்மன் கொட்டி வீணாக்குகிறான் என்று கூறினான்.
உண்மையை அறிய விழைந்த தந்தையான எச்சதத்தன் மரத்தின் மீது ஏறி ஒளிந்திருந்து நடப்பதைப் பார்த்தார்.
விசாரதர்மன் லிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்து வெகுண்ட எச்சதத்தன் பாற்குடங்களை எட்டி உதைத்தார்.
இதனால் கோபமடைந்த விசாரதர்மன் அருகிலிருந்த கம்பு ஒன்றை எடுத்தான். அது உடனே மழுவாக மாறியது. அதனால் எட்டி உதைத்த தன் தந்தையின் இரு கால்களையும் வெட்டினான். அவர் உயிர் நீத்தார்.
விசாரதர்மரின் பூஜையால் மகிழ்ந்த சிவபிரான் உமாதேவியோடு காட்சி அளித்து அவரைத் தன் கரங்களால் எடுத்து அணைத்து அவருக்கு சண்டீசன் என்னும் பதத்தை அளித்தார். சண்டீசம் என்பது ஒரு பதவி.
அன்றிலிருந்து அவர் சண்டேஸ்வர நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.
இங்குள்ள கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரபீடம் நந்தி பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். இங்கு வடக்கே உள்ள அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் தல விருட்சமான ஆத்திமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது.
இந்த ஆத்திரமரத்தின் நிழலில் தான் சண்டிகேஸ்வர நாயனார் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். கருவறை கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.மேற்கு பிரகாரத்திலும் பல சந்நிதிகள் உள்ளன.
வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது. இது தவிர கர்பக்ருஹத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேஸ்வரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடுகிறார். ஆக இப்படி இந்தக் கோவிலில் மட்டும் இரண்டு சண்டேஸ்வரர் திரு உருவங்கள் அமைந்திருப்பது தனிச் சிறப்பு அம்சமாகும்.
இங்கு மஹாசிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சத்யகிரீஸ்வரரும், சகிதேவியம்மையும், பாலுகந்த ஈஸ்வரரும்
பெரிய நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
**