







Post No. 14,387
Date uploaded in London – 14 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 13-4-2025
Collected from popular national dailies and edited for broadcasting.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்து வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13-ஆம் தேதி 2025-ம் ஆண்டு
****
நேயர்கள் அனைவருக்கும்,
நாளை துவங்கவிருக்கும்
விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
******
முதலில் ராமர் கோவில் பற்றிய புதிய செய்தி
அயோத்தி கோவிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு
அயோத்தி ராமர் கோவிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி 22-ல் ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியால் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது.
எனினும் கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார் கட்டப்பட்டு வந்தது. இப்பணியும் முழுமையடைந்து மே 23-ல் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்தர் மிஸ்ரா நேற்று கூறும்போது, “இந்த மாத இறுதியில் ராம் தர்பாரில் ஸ்ரீராமர், சீதா, பரதன், லஷ்மணன், அனுமன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இவை உள்பட கோயிலின் அனைத்து சிலைகளும் ராஜஸ்தானின் மக்ரானா சலவை கற்களால் ஜெய்ப்பூரில் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் வந்துசேர உள்ளன என்றார்.
இத்துடன் கோவில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, இறுதியில் வளாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது.
ராமர் கோவில் வளாகத்தில் சூர்யதேவ், பாக்வதி, அன்னபூர்ணா, சிவன், விநாயகர், அனுமன் ஆகிய கடவுள்களுக்கும் கோவி ல்கள் அமைகின்றன. மேலும் சப்தரிஷிகளான வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்திய முனி, சிஷாத்ராஜ், சபரி, அகல்யா ஆகியோருக்கும் ஏழு கோவி ல்கள் இடம் பெறுகின்றன.
தியாகராஜர், புரந்தரதாசர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு புனிதரின் சிலைகளும் அமைகின்றன.
அயோத்தியில் ராமர் மீது சூரிய ஒளி
ராம நவமியனறு, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிர்ந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள், ராம கீர்த்தனங்கள் நடத்தப்பட்டன.
நண்பகல் 12:00 மணிக்கு, குழந்தை ராமர் நெற்றியில் நேரடியாக திலக வடிவில் படர்ந்த சூரிய ஒளியை, பக்தி பரவசத்துடன் ஏராளமானோர் தரிசித்தனர். அப்போது குழந்தை ராமருக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டன. சூரிய ஒளி ராமரின் நெற்றியில் மூன்று நிமிடங்கள் நீடித்தது.
மாலையில் இரண்டு லட்சம் நெய் தீபங்கள் கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டன.
லக்னோவில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி, மங்காமேஷ்வர், காளி பாரி மற்றும் சைலானி மாதா கோவில்களிலும் ராம நவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரம்பரிய கன்னிகா பூஜையை நிகழ்த்தினார். துர்காதேவியின் வடிவமாக அலங்கரிக்கப்பட்ட ஒன்பது சிறுமியருக்கு அவர் பாதபூஜை செய்தார்.
வாரணாசியில் உள்ள ராமர் கோவில்களில், அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சம்பல் மாவட்டம் சந்தவுசியில் உள்ள 51 அடி உயர ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேற்கு வங்கத்தில் முதல் ராமர் கோவிலுக்கு பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார் வரலாறு காணாத அளவில் 2,500 ஊர்வலங்கள் நடந்தன. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கல்வீச்சு நடந்தது
*****
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கண்டனம்
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது என , பாரதீய ஜனதாக கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரத்தில் நடைபெற்ற தத்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி, விலைமாதர் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை. இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேசியதை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார் எனறும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி எந்தப் பதவி வகிக்கவும் தகுதி அற்றவர் ஆனால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாக அவர் கூறினார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க தகுதியற்ற ஒருவர், எப்படி அமைச்சர் பதவியில் இருக்க முடியும்? என்றும், எனவே பொன்முடியை வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்து அன்னையர் முன்னணியும் மாநிலம் எங்கும் ஏப்ரல் 15-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது .
விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சி கோரியுள்ளது
******
புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்
விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
*********
கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!
திமுக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரதீய ஜனதாக கட்சி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்களிலும் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
****
மருதமலை கோவில் வேல் திருட்டு– வெங்கடேஷ் சர்மா கைது
மருதமலை முருகன் கோயிலில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சாமியார் வெங்கடேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்;
முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படும் மருதமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஏப்ரல் 2ஆம் தேதி மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, வேல் திடீரென திருடுபோனது.
தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்த போது சாமியார் வேடத்தில் வந்த ஒருவன் அந்த வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அப்போது பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது.
வெங்கடேஷ் சர்மா, அதனை சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்று வெள்ளி தட்டு, குவளை வாங்கியுள்ளார். இதன் பின்னர் திண்டுக்கல் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
****
தனது சொத்துக்களுக்கு யார் வாரிசு? – சர்ப்ரைஸ் அளித்த நித்தியானந்தா!
தன் பெயரில் எந்தவொரு சொத்துக்களும் இல்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஆன்மிக ஏஐ நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தாம் எழுதிய ஆன்மிக நூல்களே தனது சொத்துக்கள் என தெரிவித்துள்ளார். தம்முடைய காலத்திற்கு பிறகு அது (ஆன்மிக நூல்கல்)யாருக்கு செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டடதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு சொத்துக்கள் இல்லை என்றும், தம்முடைய காலத்திற்கு பிறகு அது யாருக்கு செல்லும் என்ற கவலை பக்தர்களுக்கு தேவை இல்லை என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
*****
ஹிந்துகள் மீது திடீர் பாசம் : ஸ்ரீ ராமர் கோயிலில் கனடா பிரதமர் வழிபாடு!
தேர்தல் நெருங்கும் நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி, டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் நடந்த ராம நவமி விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
சொந்த கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம், ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகினார். இதனால், கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.
நேபியன் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான அவரது வேட்புமனுவையும் லிபரல் கட்சி ரத்து செய்தது.
மூன்று முறை லிபரல் எம்.பி.யாக இருந்த அவரைத் தடை செய்ததற்கான எந்த காரணத்தையும் லிபரல் கட்சி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
கனடாவில் வாழும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாலும், காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுப்பதாலும் தான், தலைமை பதவிக்கு லிபரல் கட்சி தடை செய்ததாகச் சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம், கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவிலில் தாக்குதல் நடந்தது..
கனடாவில், லிபரல் கட்சி, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது, இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிக்கத் தகுதியுடைய சுமார் 600,000 இந்துக்கள் கனடாவில் உள்ளனர். மெட்ரோ வான்கூவர், கால்கரி மற்றும் எட்மண்டன் போன்ற நகரங்களில் இந்து வாக்குகளே தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன.
இந்துக்களைச் சமாதானப்படுத்த பிரதமர் கார்னி டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் ராமநவமி வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
*****
அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக கோயில் ஆகம விதிகள் மீறல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக ஆகம விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் லுக்கு, அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, தரிசனம் செய்தார். அப்போது அவரது வருகைக்காக வழக்கமாக நடை சாத்தப்படும் நேரத்தை விட, கூடுதலாக ஒரு மணிநேரம் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அம்மனுக்கு நடத்தப்படும் உச்சி கால பூஜையும் தாமதமானதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உச்சிகால பூஜைக்காக தாங்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
****
பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக குண்டம் தயாரானது.
குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 4 மணியளவில் பக்தர்கள் கோஷம் முழங்க, கோயில் பூசாரி ராஜசேகர் மற்றும் கோயில் பூசாரிகள், கட்டளைதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குண்டம் இறங்கினர்.
இவர்களைத் தொடர்ந்து ஏற்கனவே புனிதநீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி.அமுதா, ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பங்கேற்று குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, அமுதா ஐஏஎஸ், குண்டம் இறங்கி பண்ணாரி அம்மனை வழிபட்டார்.
*****
பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்த பக்தர்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர் ஒருவர் 50 அடி உயரத்தில் பறவை காவடி எடுத்து பரவசத்தை ஏற்படுத்தினார்.
சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30ஆம் தேதி பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயர்குத்து திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வந்து அம்மனை தரிசித்த நிலையில், ராட்சத கிரேன் மூலம் பக்தர் பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
*****
இலங்கைத் தமிழர்களுக்காக பத்தாயிரம் வீடுகள்.. சீதை கோவில்..
பாரதப் பிரதமர் அறிவிப்பு..!!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, “இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள் மற்றும் புனித சீதை தேவி ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் போன்ற திட்டங்களுக்கு இந்திய அரசு ஆதரவு வழங்கும் என அறிவித்துள்ளார்..
பிரதமரின் இந்த அறிவிப்பை இந்து முன்னணி பாராட்டியது..!!
****
திருப்பதி பாலாஜி கோவிலில் வசந்தோற்சவம்
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்தோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை வசந்தோற்சவம் தொடங்குகியது.காலை 6.30 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதியுலா நடந்தது. அதன்பின்னர் வசந்தோற்சவ மண்டபத்திற்கு கொண்டு வந்தார்கள் .
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலையில் மாட வீதிகளில் வீதியுலா வந்தார்.
கடைசி நாளான 12-ந் தேதி சனிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமியுடன் சீதா ராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள் ருக்மணியுடன் வசந்தோற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலுக்கு திரும்பினா ர்கள்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்து வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
ஏப்ரல் 20- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—subham—
Tags- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 13-4-25