ரமண மஹரிஷியின் முதல் மேலை நாட்டு பக்தர்! (Post.14,385)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,385

Date uploaded in London – –14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏப்ரல் 14 1950: ரமண மஹரிஷி சமாதி அடைந்த தினம். 

ரமண மஹரிஷியின் முதல் மேலை நாட்டு பக்தர்! 

ச. நாகராஜன்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலுமிருந்து ரமண மஹரிஷிக்கு உண்டு.

அவரது முதல் மேலை நாட்டு பக்தரின் பெயர் எஃப்.ஹெச். ஹம்ப்ரீஸ்

(F.H.Humphreys).  பகவானுடனான அவரது முதல் அனுபவமே ஆச்சரியகரமானது.

1911ம் ஆண்டு தனது 21ம் வயதில் அவர் இந்தியாவுக்கு வந்தார். போலீஸ் சேவையில் ஒரு வேலைக்காக அவர் வெல்லூர் வந்தார். 

தெலுங்கைக் கற்பிக்க தனக்கு ஒரு ஆசிரியரை அவர் நியமித்துக் கொண்டார். அவர் பெயர் நரசிம்மய்யா.

அவரிடம் ஹிந்து ஜோதிட சாஸ்திரத்தை விளக்கும் ஆங்கிலப் புத்தகம் எங்கேனும் கிடைக்குமா என்று ஹம்ப்ரீஸ் கேட்டார். விசித்திரமான இந்த வேண்டுகோளைக் கேட்ட நரசிம்மய்யா  மறு நாள் நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தார்.

அடுத்த நாள் .”உங்களுக்கு இங்கே மஹாத்மாக்கள் யாரையாவது தெரியுமா?” என்ற இன்னொரு விசித்திரமான கேள்வி நரசிம்மய்யாவை நோக்கி வந்தது.

“எனக்குத் தெரியாது” என்று சுருக்கமாகக் கூறி முடித்து விட்டார் நரசிம்மய்யா.

அடுத்த நாள் ஹம்ப்ரீஸ், “நேற்று உங்களிடம் மஹாத்மாக்கள் யாரையாவது தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்று சொன்னீர்கள். ஆனால் இன்று காலை உங்கள் குருவை நான் எழுந்திருப்பதற்குச் சற்று முன்னால் பார்த்தேன். அவர் என் அருகில் உட்கார்ந்து ஏதோ சொன்னார். அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.” என்ரார்.

நரசிம்மய்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர் நம்பாமல் இருப்பதைப் புரிந்து கொண்ட ஹம்ப்ரீஸ் தொடர்ந்தார்:

“நான் வெல்லூரில் முதன்முதலில் பார்த்த ஆள் நான் முன்னமேயே பம்பாயில் பார்த்திருந்த நீங்கள் தான்.”

உடனே நரசிம்மய்யா, “நான் பம்பாய்க்கே சென்றதில்லையே” என்று தனது மறுப்பைத் தெரிவித்தார்.

உடனே ஹம்ப்ரீஸ் விவரித்தார்: “நான் பம்பாய்க்கு வந்தவுடனேயே ஜுரத்தால் பாதிக்கப்பட்டேன். உடல் நலம் தேற வெல்லூருக்கு வர மனம் கூறவே ஆஸ்ட்ரல் பாடி எனப்படும் சூக்ஷ்ம சரீரத்தில் வெல்லூருக்கு வந்தேன். அங்கே நரசிம்மய்யாவைப் பார்த்தேன்:

நரசிம்மய்யா உடனே, தனக்கு சூக்ஷ்ம சரீரம் என்றால் என்ன என்றே தெரியாது என்று கூறி விட்டார்.

என்றாலும் ஹம்ப்ரீஸ் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்குமா என்று சோதிக்க எண்ணிய நரசிம்மய்யா போட்டோக்கள் அடங்கிய ஒரு கட்டை ஹம்ப்ரீஸின் மேஜையின் மேல் வைத்து விட்டு இன்னொரு போலீஸ் ஆபீஸருக்குப் பாடம் சொல்லிதர கிளம்பி விட்டார்.

போட்டோக்களைப் பார்த்த ஹம்ப்ரீஸ் கணபதி சாஸ்திரிகளின் போட்டோவைப் பார்த்தவுடன், “இவர் தான்” என்று கூவினார்.

நரசிம்மய்யா திரும்பி வந்தவுடன், “இதோ, இவர் தானே உங்கள் குரு” என்றார்.

நரசிம்மய்யா அவர் தான் தனது குரு என்று ஒப்புக் கொண்டார்.

பிறகு மீண்டும் ஹம்ப்ரீஸின் உடல் நலம் பாதிக்கப்படவே அவர் ஊட்டிக்குச் சென்று விட்டார். பல மாதங்கள் கழித்துத் தான் அவர் மீண்டும் வெல்லூர் வந்தார்.

திரும்பி வந்தவுடன் இன்னொரு ஆச்சரியத்தை நரசிம்மய்யாவுக்கு அவர் அளித்தார்.

ஒரு மலைக்குகை படத்தையும் அதன் முன்னால் நீரோடை ஓடுவதையும் குகையின் வாயிலில் ஒரு மகான் நிற்பதையும் தான் கனவில் கண்டபடி வரைந்து அந்தப் படத்தை நரசிம்மய்யாவிடம் காண்பித்தார் ஹம்ப்ரீஸ்.

அது விரூபாக்ஷ குகை தான். குகையின் வாயிலில் நிற்பது பகவான் ரமணர் தான்!

நரசிம்மய்யா இப்போது ரமண மஹரிஷியைப் பற்றி ஹம்ப்ரீஸிடம் கூறினார்.

ஹம்ப்ரீஸுக்கு கணபதி சாஸ்திரிகளை அறிமுகப்படுத்தி வைத்தார் நரசிம்மய்யா.

அவர் பால் பெருமதிப்புக் கொண்டார் ஹம்ப்ரீஸ்.

1911 நவம்பரில் மூவரும் திருவண்ணாமலை சென்றனர்.

அங்கு ரமண மஹரிஷியைக் கண்டு ஆனந்தம் அடைந்தார் ஹம்ப்ரீஸ்.

 முதல் மேலை நாட்டு பக்தர் தரிசனம் பெற்ற பிறகு நூற்றுக் கணக்கான அயல்நாட்டார் திருவண்ணாமலை வந்து மஹரிஷியின் தரிசனம் பெற்றனர்.

ஒவ்வொருவரும் விதவிதமான அதிசய அனுபவங்களைப் பெற்றனர். 

அவை யாவும் ரமண இலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் படித்து மகிழலாம்! 

***

Leave a comment

Leave a comment