பத்ராசல ராமதாஸர்! – 1 (Post No.14,391)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,391

Date uploaded in London – –15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 13-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

பத்ராசல ராமதாஸர்! – 1 

ச. நாகராஜன் 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.

ராமதாஸர் என்ற பெயரில் மூன்று மகான்கள் உள்ளனர். ஒருவர் சமர்த்த ராமதாஸர்.. இன்னொரு மகான் பத்ராசல ராமதாஸர். அடுத்து சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த இன்னொரு மகான் கன்ஹன்காட் ராமதாஸர் ஆவார்.

சமர்த்த ராமதாஸரைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம் இன்று பத்ராசல ராமரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.

பத்ராசலம் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ளது. ஹைதராபாத்திலிருந்து இது 202 மைல் தூரத்தில் உள்ளது.

 பத்ராசல ராமதாஸர் என்று அறியப்படும் காஞ்செர்லா கோபண்ணா 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் ராம பக்தர் ஆவார். இவரது காலம் 1620 முதல் 1688 முடிய என வரலாறு தெரிவிக்கிறது. 

கோபண்ணா என்று அழைக்கப்பட்ட இவர் தெலுங்கு பிராமண குடும்பத்தில் லிங்கண்ணா  மற்றும் காமாம்பா ஆகியோருக்கு மகனாக பத்ராசலம் நகருக்கு அருகில் உள்ள நெலகொண்டபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.

 குதுப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த தானீஷா அப்போது ஹைதராபாத்தை ஆண்டு வந்தான். அவனது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மாதண்ணா மற்றும் அக்கண்ணா ஆகியோர் கோபண்ணாவின் மாமன்மார்கள் ஆவர்.

 இளவயதில் கோபண்ணாவின் தாயும் தந்தையும் மறையவே அவர் ராம விக்ரஹத்திற்கு பூஜை செய்தவாறு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரைச் சந்தித்த ஒரு பெரியவர் அவரது ராம பக்தியைச் சோதிக்க எண்ணி அவர் ராம விக்ரஹம் வைத்திருந்த பெட்டியை ஒரு குளத்தில் எறிந்து விட்டார். விக்ரஹத்தைக் காணாத கோபண்ணா தவியாய்த் தவித்தார். ஏனிப்படித் தவிக்கிறாய் என்று பெரியவர் கேட்க தனது விக்ரஹம் காணாமல் போனதைக் கூறி அழுதார் கோபண்ணா. வேறு விக்ரஹம் ஒன்றை நான் தருகிறேன் என்றார் பெரியவர். ஆனால் கோபண்ணாவோ தான் வழிபடும் விக்ரஹமே தனக்கு வேண்டும் என்றார்.

உடனே அந்தப் பெரியவர் ராம நாமத்தை உச்சரித்து குளத்தில் இருந்த பேழையை வருவித்து அவரிடம் தந்தார்.

கபீர் தாஸர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மாபெரும் மகானான கபீர்தாஸர் அவர் தலை மீது தன் கையை வைத்து உபதேசமும் செய்தார்.

பின்னர் கோபண்ணாவுக்குத் திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. ராமநவமி உற்சவம் நடைபெற்ற தினத்தன்று குழந்தையானது தவறி அங்கிருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மாண்டது.

அதிதிகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த சமயம் என்பதால் குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தை கோபண்ணாவின் மனைவி கூறவில்லை. சாப்பாடு முடிந்தபின்னர் எங்கே குழந்தை என்று கோபண்ணா கேட்க நடந்ததைச் சொன்னாள் கோபண்ணாவின் மனைவி.

 ‘இதைக் கேட்ட கோபண்ணா, “ராமா! அடியாரைக் காப்பது உன் கடமை அல்லவா? இப்படி ஒரு துயரத்தைத் தரலாமா என்று கதறி அழுதார். அப்போது, “அப்பா! அம்மா! என்று மழலை மொழியில் அழைத்தவாறே குழந்தை வந்தது. அனைவரும் பிரமித்தனர்.

 ராமபக்தியில் திளைத்த கோபண்ணா ராம தரிசனத்திற்காக ஏங்கினார். தன் குருவான கபீர்தாஸரிடம் ராம தரிசனம் அருளுமாறு வேண்டினார். அவரோ சற்றுப் பொறு என்றார்.

“என்னால் பொறுக்க முடியாது” என்று கோபண்ணா அடம் பிடித்தார். சரி! நாளை உச்சிப் பொழுதில் ராமர் உனக்கு தரிசனம் தருவார் என்றார் கபீர்தாஸர்.

மறு நாள் வெகு விமரிசையாக பஜனை நடந்து கொண்டிருந்தது. உச்சிப் பொழுதும் வந்தது. அப்போது ஒரு எருமையானது சகதியிலிருந்து எழுந்து வந்தது போலச் சேறுடன் பஜனைக் கூடத்தில் நுழைந்து அங்கிருந்த பூ, பழம் மற்றும் பாத்திரங்களை எல்லாம் உருட்டியது. இதனால் வெகுண்ட கோபண்ணாவும் மற்றவர்களும் அதைத் தடியால் அடித்து விரட்டினர்.

கபீர்தாஸர் முன் தோன்றிய இறைவன், “ஹே! கபீர்! உன் பக்தன் என்னை அடித்து விட்டான்” என்று  கூறி தன் முதுகைக் காட்ட, கபீர்தாஸர், “இது நியாயம் இல்லை. எருமை மாடாக வருவதை அப்பாவி கோபண்ணா எப்படி அறிவார். அதை அறியத் தக்க ஞானத்தை நீங்கள் அல்லவோ அவருக்குத் தர வேண்டும்” என்றார்.

 “உரிய பக்குவ நிலையை கோபண்ணா அடைந்தவுடன் நானே காட்சி தருவேன்” என்று கூறி இறைவன் மறைந்தார்.

 ஹைதராபாத் மன்னனாக விளங்கிய தானீஷாவின் அரண்மனையில் உயர் பதவியில் இருந்த தனது மாமன்மார்கள் ஞாபகத்திற்கு வர கொபண்ணா நேராக மாமன்மார் வீட்டை அடைந்தார்.

 அங்கே தனது ஏழ்மை நிலையை அவர் எடுத்துச் சொன்னார்.

தர்பார் கூடியிருந்த சமயத்தில் தானீஷாவிடம் கோபண்ணாவைப் பற்றி மாமன்மார் சொல்ல அவருக்கு பத்ராசலம் தாலுகாவின் தாசில்தாராகப் பதவியை அளித்தான் தானீஷா.

  “ஒழுங்காக கிஸ்தியை வசூலிக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறினான் தானீஷா.

வெறுங்காலுடன் ஹைதராபாத் சென்ற கோபண்ணா அரண்மனை மரியாதைகளுடன் பல்லக்கில் வருவதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தனர். தங்கள் கோபண்ணா தாசில்தாராக ஆனதை அவர்கள் வரவேற்றனர்.

வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை எல்லாம் முறையாக வசூலித்து ஹைதாராபாத்திற்கு அனுப்பலானார் அவர்.

ஒரு நாள் பத்ராசலம் கோவில் சிதிலமடைந்திருந்ததைக் கண்டு வருத்தமடைந்த கோபண்ணா அதை சீர்திருத்தியதோடு பிரம்மாண்டமான ஆலயமாக புனர் நிர்மாணம் செய்தார்.

 கிடைத்த வரிப்பணத்தை எல்லாம் கோவில் கட்டச் செலவழித்த கோபண்ணா அதை தானீஷாவிற்கு அனுப்பவே இல்லை.

ஒரு வருட காலமாக வரிப்பணம் வராததைக் கண்ட தானீஷா கோபண்ணாவை உடனடியாக வந்து தன்னைப் பார்க்குமாறு உத்தரவிட்டான்.

கோபண்ணா தர வேண்டிய வரிப்பணம் ஆறு லட்சம் வராகன் என்ற பெரிய தொகை என்று கேட்ட மன்னன் அதைத் தரும் வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

சிறைவாசம் அனுபவித்தாலும் அவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்ட முடியும்?

தானீஷா இன்னும் அதிக கோபம் கொண்டு முச்சந்தியில் நிறுத்தி அவருக்குச் சவுக்கடி கொடுங்கள். அப்போதாவது பணம் வருகிறதா என்று பார்ப்போம் என்று கூறினான்.

மக்கள் வருந்தினாலும் கூட தண்டனை நிறைவேறியது.

to be continued…………………………

Leave a comment

Leave a comment